திங்கள், 9 டிசம்பர், 2013

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி: டெல்லியில் ஆதரவு கோருகிறது பாஜக



ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் பெரும்பான்மை பெறாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளது பாஜக.
ராஜஸ்தானில் பாஜக முதல் அமைச்சராக பதவியேற்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்தது.
199 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் 162 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 21  தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பாஜக பிடிப்பது உறுதியானது. பாஜகவின் முதல் அமைச்சர் வேட்பாளரான வசுந்தரா ராஜே சிந்தியா 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் பாஜக முதல் அமைச்சராக பதவியேற்கிறார் சிவராஜ்சிங் சவுகான்
மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அக்கட்சியின் தொண்டர்கள் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 165 இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 58 இடங்களில் வெற்றி பெற்றது. 2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2013 சட்டமன்றத் தேர்த-லும் ஆட்சியை பிடிக்கிறது.
சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சராக ராமன் சிங் பதவியேற்கிறார்.
சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக. 49 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 39 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் ராமன் சிங் தொடர்ந்து 3வது முறையாக சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கிறார்.
டெல்லியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக முதல் அமைச்சர் வேட்பாளர் ஹர்ஷவர்தன் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து 3 முறையாக ஆட்சி புரிந்த ஷீலா தீட்சித் ஆட்சியை இழந்ததுடன் படுதோல்வி அடைந்துடன் பதவியை ராஜினமா செய்தார். ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி கூறிவிட்டது. மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க முயற்சி செய்வோம். இல்லையெனில் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்ற பாஜக கூறியுள்ளது. nakkheeran.in

கருத்துகள் இல்லை: