வெள்ளி, 13 டிசம்பர், 2013

ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜ.க- ம.தி.மு.க. கூட்டணி உறுதி


டெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் லோக்சபா தேர்தல் பாஜக-மதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகள் இந்த முறை அதே கூட்டணி அமைக்குமா? அல்லது கூட்டணிகள் இடம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான்கு தேர்தலில் பாரதீய ஜனதா பெற்றுள்ள இமாலய வெற்றியும் பல அரசியல் கட்சிகளை யோசிக்கச் செய்துள்ளது. தமிழ் நாட்டிலும் பாரதீய ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்று நான்கு மாநில தேர்தல் வெற்றி குறித்த அறிக்கையில் கூறி இருந்தார். வைகோ சந்திப்பு இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜனதாவுடன் ம.தி.மு.க.கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்படுகிறது. தமிழ் நாட்டின் அரசியல் நிலைமை, எந்த எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் அதிக இடங்களை பிடிக்க முடியும் என்பது குறித்தும் இருவரும் பேசியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வலுவான கூட்டணி இதனிடையே தமிழ்நாட்டில் பாரதீயஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் தமிழருவி மணியன் இறங்கியுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இந்த கூட்டணியில், ம.தி.மு.க. - பா.ம.க. சேர்வது உறுதியாகி விட்டது. தே.மு.தி.க தலைமையுடன் பேச்சு நடக்கிறது என்று தமிழருவி மணியன் கூறிஇருந்தார். அதே சமயம் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இதை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: