புதன், 11 டிசம்பர், 2013

உலக வர்த்தக அமைப்பில் உரிமைகள் பறிபோன அவலம்

உலக வர்த்தக அமைப்பின் வேளாண் ஒப்பந்தத்தால், இந்திய விவசாயிகளுக்கு விளையக்கூடிய கேடுகள் குறித்து, பக்கம் பக்கமாக கருத்துக்கள் வெளியாகியும், நம் மத்திய அரசு, மேற்கத்திய நாடுகளிடம் இந்த விஷயத்தில் சரணடைந்து விட்டது.
இந்திய அரசின் சார்பில், பாலியில் நடந்த உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா, முதலில், பல வீர வசனங்களை விடுத்தார். ஆனால், அங்கு சென்று, மேற்கத்திய நாட்டு பிரதிநிதிகளை பார்த்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு, எந்த தயக்கமும் இல்லாமல், இந்திய விவசாயிகளை விலை பேசிவிட்டார். கொடுமை என்னவென்றால், அதை ஒரு பெரும் வெற்றியாக, பெரிய சாதனையாக சித்தரித்து, அதை எல்லோரையும் நம்பவும் வைத்துள்ளது மத்திய அரசு. துரதிஷ்டவசமாக, பெரும்பாலான ஊடகங்களும் அதை அப்படியே ஏற்று சித்தரித்து உள்ளன.
<உண்மை என்ன?
அமெரிக்காவிற்கும் மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும், விளைபொருட்களை, இரும்பு, எண்ணெய் போல வர்த்தக பொருளாக மாற்ற வேண்டும் என்ற ஆசை. குறிப்பாக, இந்தியா போன்ற பெரிய நாடுகளை, தங்களது நிறுவனங்களுக்கு, திறந்தவெளி சந்தைகளாக மாற்றவேண்டும் என்பது, அந்த நாடுகளின் நோக்கம். இதற்காகத்தான், உலக வர்த்தக அமைப்பு மூலமாக வேளாண் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் மானியங்கள், ஆதரவு விலை எல்லாம் கட்டுப்படுத்தப்படும். ஏழைகளுக்கு கொடுக்கப்படும் மானிய விலை உணவின் அளவும், கட்டுப்படுத்தப்படும். ஏன்? அப்போது தான் உள்ளூர் விவசாயிகளை முடமாக்கி, வெளிநாட்டு விளைபொருட்களை, இந்திய சந்தையில் குவிக்க முடியும். இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது என, முதலில் திரும்பத் திரும்ப கூறிய இந்திய அரசு, பாலிக்கு சென்றவுடன், நான்கு ஆண்டுகளுக்கு பின், இந்த ஒப்பந்தத்தில் கண்டிப்பாக கையெழுத்து இடுகிறோம் என, ஒப்புக் கொண்டு உள்ளது. கிடைத்த நான்கு ஆண்டு அவகாசத்தை, பெரிய வெற்றி யாக பறைசாற்றி இருக்கிறது.



எது வெற்றி?


இந்த சரணாகதியின் நேரடி விளைவுகளில் சில:


* வழக்கத்தை விட, ஒரு மாநிலம் இன்னும் அதிகமாக தானியங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய முடியாது.
* எளியோருக்கு வழங்கக் கூடிய ஊட்டச்சத்து அளவை முன்னேற்ற, ரேஷனில் அல்லது மதிய உணவு திட்டத்தில், தினை அல்லது வரகு போன்ற சிறு தானியங்களை வழங்க, தமிழக அரசு முடிவெடுத்தால், அது நடக்காது.
* விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்கும் அதிகாரம், அரசிடம் இருந்து பறிக்கப்படும். அதனால், இனி, "விலை உயர்த்து' என வலியுறுத்தும் போராட்டங்கள் கூட, சாத்தியமில்லாமல் போகும்.
* விவசாய குழுக்களுக்கும், அரசுக்கும் இதுவரை நடந்த மற்றும் நடக்கின்ற, கொள்முதல் விலை, வருவாய் உயர்வு/உத்திரவாதம், மானியங்கள் குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் வீண். ஏனெனில், அரசால் இவற்றில் எதையும் செயல்படுத்த முடியாது.
* நமது மொத்த தானிய கொள்முதல், தானிய இருப்பு நிலை, வினியோக அளவு உள்ளிட்ட முழு விவரங்களை, உலக வர்த்தக அமைப்பிற்கு கொடுக்க வேண்டும். ஏனெனில், நமக்கு உலக வர்த்தக அமைப்பு, அனுமதித்த அளவை நாம் மிஞ்சி விடக் கூடாதாம். எவ்வளவு அழகாக, நம் இறையாண்மை விற்பனையாகி உள்ளது என்பது ஆச்சரியமளிக்கிறது. இவற்றை எல்லாம் மறைத்து விட்டு, வெற்றி முரசு கொட்டப்படுகிறது!



தப்பிக்க வழி:


ஆனால், இந்த கேவல நிலையிலும், நாம் தப்பிக்க ஒரு சிறு வழி உள்ளது. இன்னும் சில வாரங்களில், அந்த கோப்புகளில் கையொழுத்திடும் அவல நிகழ்ச்சி நடக்கப் போகிறது. வரவுள்ள தேர்தல் மற்றும் உள் நாட்டு விவாதங்களை காரணம் காட்டி, அவற்றில் கையெழுத்திட, மத்திய அரசு மறுத்து விடலாம். இதனை தவறாக பார்க்காமல், ராஜதந்திரமாகவே பார்க்க வேண்டும். இதற்கு, மாநில கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் குரல் கொடுத்து, மத்திய அரசை நிர்பந்தித்தால் தான், இது சாத்தியமாகும். ஆனால், இதுவரை எந்தவொரு மாநில கட்சியும், வாய் திறக்காததை பார்த்தால், அனைவரும் மேற்கத்திய நிறுவனங்களுக்கு விலை போய்விட்டனரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கட்டுரையாளர் பாதுகாப்பான உணவு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் "ரெஸ்டோர்' இயற்கை உணவுப்பொருள் கடையின் நிறுவனர்.

- அனந்து - தினமலர்.கம 

கருத்துகள் இல்லை: