செவ்வாய், 10 டிசம்பர், 2013

மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைமையுடன் பனிப்போர் ! உச்சகட்டம் ?

நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டிருக்கும் வரலாறு காணாத தோல்வி, கட்சித் தலைமையை ஆட்டம் காண வைத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அடுத்து ஆறு மாதங்களில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்திக்காமல் இருக்க என்ன வழி என்பதை காங்கிரஸ் தலைமை சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோதே, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வழக்கத்துக்கு மாறாக உடனடியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பில், தோல்விக்கான காரணங்கள் ஆராயப்படக்கூடும் என்றும், ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து மக்களின் செல்வாக்கைப் பெறும் உத்தியை காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒருபடி மேலேபோய், நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "தக்க சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், அவர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றும் கூறியிருப்பது, அரசியல் நோக்கர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.தோல்விக்கு பொறுபேற்க யாரும் முன்வரமாட்டார்கள் அதிலும் ராகுல் எஸ்கேப் பண்ண வழிதேடுவார் ! 

இதன் பின்னணியில் கடந்த சில வாரங்களாகவே, கட்சித் தலைமைக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் பனிப்போர் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் பின்னடைவைச் சந்திப்பது உறுதியானபோது, காங்கிரஸ் கட்சித் தலைமையின் சார்பில் மூத்த அமைச்சர் ஒருவரும், கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் பிரதமரின் மனநிலையை அறிந்துகொள்ள அவரது தரப்பினரைச் சந்தித்திருக்கிறார்கள்.
அவர்கள் இருவருமே கட்சித் தலைமைக்கு, சோனியா காந்திக்கு, நெருக்கமானவர்கள் என்பதால், அவரது ஆலோசனையின் பேரில்தான் சந்திக்கிறார்கள் என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவரல்ல பிரதமர் மன்மோகன் சிங். காங்கிரஸýக்கு எதிராக இருக்கும் சூழலைத் திசைதிருப்ப பிரதமர் மாற்றம் உதவலாம் என்பதை மறைமுகமாக அவர்கள் குறிப்பிட்டபோது, சிரித்துக்கொண்டே, "கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும் இதைத் திசைதிருப்ப முடியுமே?' என்று எதிர்கேள்வி எழுப்பினாராம் பிரதமருக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்களைப் பொருத்தவரை, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், வேட்பாளர்கள் தேர்விலும், பிரசாரத்திலும் அவரது பங்களிப்புதான் கணிசமாக இருந்தது. வழக்கம்போல, வேட்பாளர் தேர்வில் பிரதமர் தலையிடவே இல்லை.
பிரசாரம் என்று எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மொத்தம் 21 பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் நான்கு கூட்டங்களில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தில்லியில் நடக்க இருந்த நான்காவது கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளும் கூட்டங்களில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாக வேண்டிய நிலைமையை கட்சித் தலைமை மட்டுமல்ல, மாநிலத் தலைவர்களும் விரும்பவில்லை என்று தெரிகிறது. பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் தில்லியில் பிரதமர் கலந்து கொள்வதாக இருந்த நவம்பர் 30 பேரணியும் பொதுக்கூட்டமும் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங்கால் நன்மை ஏற்படுவதைவிட, கட்சியின் பெயருக்கு களங்கம்தான் அதிகரிக்கும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கருதியதால்தான், அவர் கலந்துகொள்ள இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று தெரிகிறது.
ஜப்பானிய அரசரின் விஜயத்தையொட்டி விருந்தினர்களுடன் இருக்க வேண்டிய காரணத்தால் பிரதமர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கட்சி பொதுச் செயலாளர் குல்ஜித்சிங் தாக்ரா தெரிவித்தாலும், பிரதமரைத் தனிமைப்படுத்துவதுதான் தில்லி கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் எனப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் சோனியா தரப்பினரால் இப்போது அரசியல் சுமையாகக் கருதப்படுகிறார்.
பிரதமர் தரப்பும், சோனியா காந்தி தரப்பு நீக்கங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக இல்லை. 2004-இல் பிரதமருக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டதன் பின்னணியில் பிரதமர் அலுவலகம் இருந்திருக்க வேண்டும் என்று ஜன்பத் சந்தேகிக்கிறது. ஜூன் 18, 2004 அன்று இப்போது பாலியல் விவகாரத்தில் சிக்கியிருக்கும் தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலின் சார்பில், அவரது கடிதத்தை இணைத்து சோனியா காந்தி பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு பிரதமரும் பதில் எழுதி இருந்தார்.
தருண் தேஜ்பால் பாலியல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் நேரத்தில், அவருக்குப் பரிந்துரை செய்து சோனியா காந்தி எழுதிய கடிதம் வெளியிடப்படுவது என்பது, சோனியா காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் செய்யப்பட்டிருக்கிறது என்கிறது சோனியா தரப்பு. மேலும், பிரதமருக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையேயான உறவு சுமுகமானது என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம் முடிவடைந்து, புதிய வருடம் பிறந்த பிறகு பிரதமரை மாற்றுவது என்றும், அதன் மூலம் கட்சியின் மீதான களங்கமும் கெட்ட பெயரும் கணிசமாகக் குறையும் என்றும் காங்கிரஸ் தலைமை (சோனியா காந்தி) நம்புகிறது. மன்மோகன் சிங்கிற்கு பதிலாக, ராகுல் காந்தியையோ, அவர் விரும்பாவிட்டால், ஏ.கே. அந்தோனி அல்லது எந்தவிதக் குற்றச்சாட்டுகளிலும் சிக்காத ஒருவரையோ இடைக்கால பிரதமராக்குவது என்பதுதான் காங்கிரஸ் கட்சித் தலைமையின் திட்டம் என்று தெரிகிறது.
இதற்கிடையில், கட்சித் தலைமைக்கு ராகுல் காந்தியையும், பிரதமர் பதவி வேட்பாளராக பிரியங்கா காந்தியையும் முன்னிலைப்படுத்தினால் என்ன என்கிற யோசனையும் வைக்கப்படுகிறது. அந்தோனியைப் பிரதமராக அறிவிப்பதன் மூலம், தென்னிந்தியாவில் இருந்து அதிகமான எம்.பி. இடங்களைப் பெறுவதுடன் சிறுபான்மையினரின் ஆதரவையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது சோனியா காந்தியின் திட்டமாக இருக்கக் கூடும்.
பிரதமர் மன்மோகன் சிங் தரப்பு, தேர்தல்வரை அவர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருப்பதாகத் தகவல். ""நான்கு மாநிலத் தேர்தல் தோல்விக்கு பிரசாரத்திற்குத் தலைமை தாங்கியவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, என்னைப் பதவி விலகச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்?'' என்கிற பிரதமரின் கேள்வி சோனியா குடும்பத்தினரை மிகவும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் ஆளாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மறைந்த நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் ஜோஹன்னஸ்பர்க் புறப்படும் முன்பு நேற்றுமாலை சோனியா காந்தி தனது 10-ஜன்பத் இல்லத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
அதேநேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருந்தார். ஆனால் பிரதமர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு ஏ.கே.அந்தோனி, சுஷில்குமார் ஷிண்டே, குலாம்நபி ஆஸாத் ஆகியோர் சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா கூட்டியிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமருக்கு அழைப்பில்லை என்பதும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.
வலுக்கட்டாயமாகப் பிரதமரைப் பதவி விலகச் சொல்வதோ, கட்சித் தலைமைக்கும் ஆட்சித் தலைமைக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை பகிரங்கப்படுத்துவதோ, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாய்ப்பை மேலும் பாதிக்கும் என்பதால், காங்கிரஸ் தலைமை செய்வதறியாமல் தவிக்கிறது. "பதவிக் காலம் முடியும்வரை, பதவி விலகல் என்கிற பேச்சுக்கே இடமில்லை' என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள். அவரைப் பதவி விலகச் சொல்லி நெருக்கடி அதிகரித்தால், கட்சித் தலைமையை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் பல தகவல்களைப் பிரதமர் அலுவலகம் கசியவிடக் கூடும் என்று சோனியா தரப்பு பயப்படுவதாகவும் கூறப்படுகிறது! தினமணி.கொம் 

கருத்துகள் இல்லை: