செவ்வாய், 10 டிசம்பர், 2013

மெட்ரோ ரயில்: 30 சதவிகிதம் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளில், இதுவரை 11 கிலோ மீட்டர் தூரம் வரை சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கியமாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் உள்ள நேரு பூங்காவில் இருந்து எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை 948 மீட்டருக்கு சுரங்கப் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், 24 கிலோ மீட்டர் தூரம், சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் முதன் முதலில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்காவில் இருந்து, எழும்பூர் வரை, 948 மீட்டர் துரம் சுரங்கம் அமைக்கும் பணி 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
இந்தப் பாதையில் அதிகப்படியான பாறைகள் குறுக்கிட்டதால் பணிகள் மெதுவாக நடைபெற்று இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இதே வழித்தடத்தின் மற்றொரு பாதையில் 722 மீட் டருக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் முடிந் துள்ளது.
இதர சுரங்கம் தோண்டும் பணிகளின் நிலை: வண்ணாரப்பேட்டை - எழும்பூர் இடையே 2 கிலோ மீட்டரும், மே தினப் பூங்கா - சென்ட்ரல் இடையே 363 மீட்டர், மே தினப் பூங்கா - தேனாம்பேட்டை டி.எம்.எஸ். இடையே 420 மீட்டர், சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை இடையிலான இரண்டு பாதைகளில் 372 மீட்டர், 252 மீட்டர் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையிலான இரண்டு பாதை களிலும் தலா 1.7 மற்றும் 1.3 கிலோ மீட்டர் தூரத் துக்கு சுரங்கம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
மேலும் வண்ணாரப்பேட்டை - மண்ணடி வரை இரண்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. அதேபோல், மண்ணடி - உயர்நீதிமன்றம் வரை, முதல் சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளன. ஷெனாய் நகர் - அண்ணா நகர் கிழக்கு வரை இருவழி சுரங்கப்பாதை பணிகளும் முடிந்துள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுரங்கம் தோண்டுவதில் 30 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. சென்னை மெட்ரோ ரயிலின் சுரங்கப் போக்கு வரத்து 2015-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: