வியாழன், 12 டிசம்பர், 2013

விஜயகாந்த்: குடிக்கிறது பெரிய தப்பா என்ன?

விஜயகாந்த்தின் இளையமகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ படத்தின்மூலம் நாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் ஆரம்பவிழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் தெருவில் மேடை அமைத்து நடைபெற்றது.  இவ்விழா ஒரு பொதுக்கூட்டம் போலவே இருந்தது.   நடிகர்கள் சத்யராஜ்,பிரபு, கார்த்திக், இயக்குநர்கள் விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வந்திருந்து வாழ்த்தினர்.
இவ்விழாவில் விஜயகாந்த் பேசும்போது,  ‘’இது அரசியல் விழா அல்ல;  இருந்தாலும்  சொல்கிறேன், சில பேர் ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு இங்கு வராமல் இருக்கிறார்கள். வாழ்த்தியவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சினிமாவுக்காக பெயரை மாற்றிக்கொள்ள போகிறாயா என்று மகனிடம் கேட்டேன்.  இந்தப்பெயரே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.  
எனக்கு முருகன் பிடிக்கும்; மேலும் மதுரையை நினைவுபடுத்தும் விதமாகவும் சண்முக பாண்டியன் என்று இளையமகனுக்கு பெயர் வைத்தோம்.  கேப்டன் பிரபாகரன் படத்தில்நடித்ததால் என்னுடைய முதல் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கவில்லை.  என்னுடைய தலைவர் பிரபாகரனை மனதில் வைத்துதான் விஜயபிரபாகரன் என்று பெயர் வைத்தேன்’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,  ‘’ஏற்காடு தேர்தலில் பயந்துகொண்டு நான் போட்டியிடவில்லை என்று சொல்கிறார்கள்.  தொண்டர்கள் இருக்கும்வரை எனக்கு பயமில்லை.  டெல்லி தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கோபமான மனிதர் என்று பெருமைப்படுகிறார்கள்.   நான் கோப்பட்டால் மட்டும் குறை கூறுகிறார்கள்   நான் ரோட்டில் போகிறவர்களையெல்லாம் அடிப்பது கிடையாது.  என் தொண்டர்களைத்தான் பேசுகிறேன்; அடிக்கிறேன்.  அவர்களை என் வீட்டுப்பசங்க போலவே பாவிக்கிறேன்.  அதனால் அப்படி நடந்துகொள்கிறேன்.   அதனால் அப்படி செய்கிறேன்.
குடிக்கிறேன் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். யாருமே இங்கு குடிக்கவில்லையா?  குடிக்கிறது பெரிய தப்பா என்ன? அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுவதும் கடையை திறந்துவச்சிருக்கீங்க’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: