ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ராமதாஸ் அறிக்கை! ஏற்காட்டில் பணநாயகத்திற்கு வெற்றி! மாற்றத்தை உணர்த்தும் 4 மாநில தேர்தல் முடிவு!


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், தில்லி, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தவாறே அமைந்திருக்கின்றன. ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவும்  அப்படியே அமைந்திருக்கிறது.
மத்தியப் பிரதேசத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் கூடுதலான இடங்களைப் பிடித்து காங்கிரஸ் கட்சியிடமிருந்து பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடக்கத்தில் இழுபறி நிலவினாலும், பின்னர் பாரதியஜனதா தனிப் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது. தில்லியில் கடும்போட்டி நிலவிய போதிலும் அகாலிதளக் கட்சியின் ஆதரவுடன்  பாரதிய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பிருக்கிறது. 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்  சத்தீஸ்கர் தவிர மீதமுள்ள மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கிறது. பொதுவாக மாநிலப் பிரச்சினைகளின் அடிப்படையில் தான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அமையும் என்ற போதிலும், அதையும் தாண்டி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அதிருப்தி அலை வீசுவதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக தில்லியில் அசைக்க முடியாத செல்வாக்குடன், தொடர்ந்து 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்ஷித் தமது தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்.  அவப்பெயரை  சம்பாதிக்காத ஷீலாவின் தோல்விக்கு காரணம் காங்கிரசுக்கு எதிரான அலையே தவிர வேறு எதுவுமில்லை.
மத்தியில் கடந்த 2009 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி மக்களை மதிக்காமல் நடந்து கொண்டது. நாட்டை பாதிக்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஊழல்,  நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றைச் செய்த காங்கிரஸ் அரசு, மக்களை பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, புதுப்புது பெயர்களில்  வரிகளை விதித்து மக்களைப் பிழிந்தெடுத்தது, பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறியது போன்ற தவறுகளையும் செய்தது. 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அடிப்படையாக அமைந்தவை இந்த தவறுகள் தான்.
காங்கிரசுக்கு எதிரான இந்த அலை இப்போது தேர்தல் நடைபெற்ற மாநிலங்களுடன் நின்றுவிடும்  என்று தோன்றவில்லை. அனைத்து மாநிலங்களிலும் மக்களின் மனப் போக்கு காங்கிரசுக்கு எதிராகவே உள்ளது. இலங்கைப் பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டதால் தமிழகத்திலும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்  என்பதைப் போல மக்களவைத் தேர்தலில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதற்கு கட்டியம் கூறும் வகையில் தான் 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வே வெற்றி பெற்றிருக்கிறது. விலைவாசி உயர்வு, மின்வெட்டு, என மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகள் இருக்கும்போதிலும், அதையெல்லாம் தாண்டி ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் பணத்தையும், பரிசு பொருட்களையும் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கியது தான். மொத்தத்தில் ஏற்காடு இடைத்தேர்தலில் பணநாயகம்  வெற்றி பெற்றிருக்கிறது; ஜனநாயகம் தோல்வியடைந்திருப்பது.
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற வாய்ப்பை அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் தேர்ந்தெடுத்திருப்பது இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிரான மக்களின் மனநிலையையே காட்டுகிறது. பொதுவாக தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதில்லை. தற்போதைய ஆளுங்கட்சிக்கு எதிரான கோபத்தை வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்துவார்கள். அப்போது மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது  தெரியவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை: