புதன், 27 நவம்பர், 2013

இரண்டாம் உலகம் ! மிக மிக வித்தியாசமான படம் ! பல ஆங்கில படங்களின் தழுவலோ தழுவல் ?



தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். காதலை அவர் திரையில் சொன்ன விதம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சமீப காலமாக வித்தியாசம் என்ற பெயரில் சில விஷப்பரிட்சைகளை தனக்குத் தானே நடத்தி வருகிறார் செல்வராகவன்.  என்பதற்கு உதாரணம் இரண்டாம் உலகம்.
இந்த உலகத்தில்(பூமியில்) வாழ்கிற ஆர்யா - அனுஷ்கா என்றால், உருவத்தில் அதே போல இருக்கும் ஆர்யா - அனுஷ்கா வேறு கிரகத்திலும் உள்ளார்கள். வேறு கிரகத்தில் இருப்பவர்கள் ஒரு பெண்ணை கடவுளாக நம்புகிறார்கள். அவர் தான் அந்த உலகத்தை படைத்தவர் என்றும் நம்புகிறார்கள். அங்கே, இவர்கள் மீது படையெடுத்து வரும் ஒரு சாத்தானும் இருக்கிறான். கடவுள் இருக்கிற அந்த கிரகத்தில் இதுவரை காதல் இல்லை. உண்மையான காதல் ஒரு நாள் மலரும் என்று அந்த உலகத்தை படைத்தவர் என்று நம்பப்படுகிற அந்த பெண் நம்புகிறார்.
இந்த உலகத்தில் இருக்கிற ஆர்யாவும் அனுஷ்காவும் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள். ஆர்யாவிடம் அனுஷ்கா காதலை சொல்வதும். முதலில் மறுத்துவிட்ட ஆர்யா, பின்னர் சம்மதிப்பதும், ஆனால் அந்த நேரம் அனுஷ்காவுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதும் என செல்வராகவன் ஸ்டைலில் சுவாரஸ்யமாகவே காட்சிகள் நகர்கிறது. அதே சமயம் அந்த உலகத்தில் இருக்கும் அனுஷ்காவின் பின்னர் ஆர்யா அலைந்து திரிவதும், அடி உதை வாங்குவதும் என அந்த வித்யாச உலகத்தில் ஏதோ வித்தியாசமாக நடக்கப்போகிறது என்று நம்மை வியக்க வைக்கிறார்.

இந்த உலகத்தில் இருக்கும் அனுஷ்கா திடீரென இறந்துவிட, அதே சமயம், ஆர்யா தன்னை திருமணம் செய்துகொண்டது பிடிக்காமல், வேறு உலகத்தில் இருக்கும் அனுஷ்காவும் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொள்கிறார். வேறு உலகத்தில் இருக்கும் ஆர்யா, அனுஷ்காவின் பிரிவால் பைத்தியக்காரனைப் போல புலம்பி வருகிறார். தன் வீரத்தை நிரூபிக்க அங்கே இருக்கும் சாமிமலையின் மேல் ஏறுகிறார். அங்கே ஒரு மேஜிக் நடக்க, இந்த உலகத்து ஆர்யாவும் - வேறு உலகத்து ஆர்யாவும் சந்திக்கிறார்கள். 


பூமியில் வசித்து வந்த ஆர்யா அந்த வேறு கிரகத்திற்கு செல்கிறார். அங்கே தன்னைப்போலவே இருக்கும் ஆர்யாவை பார்க்கிறார். அதனால் தன் காதலி அனுஷ்கவைப் போலவும் ஒரு பெண் இங்கே இருக்க வேண்டும் என்று நம்புகிறார். அவர் நம்பியது போலவே அங்கே ஒரு அனுஷ்கா இருக்கிறார். (தன்னை கத்தியால் குத்திக்கொண்ட அனுஷ்கா சாகவில்லை என்ற உலகமகா ட்விஸ்டை அங்கே கொடுக்கிறார் இயக்குனர்).

பூமியிலிருந்து சென்ற ஆர்யாவை அந்த உலகத்து அனுஷ்காவுக்கு பிடித்துவிடுகிறது. இவர்கள் இருவரும் ஒன்றுசேர, வேறு உலகத்து ஆர்யா இறந்துவிடுவாரோ என்ற நாம் எதிர்பார்க்க... அந்த உலகத்துக்கு சாத்தான் படையெடுத்து வருவதும், அந்த உலகத்தின் கடவுளை கடத்திக்கொண்டு போவதும், அவரை இரண்டு ஆர்யாக்களும், அனுஷ்காவும்  சேர்ந்து மீட்டுக்கொண்டு வருவதும் என புரியாத பல விஷயங்கள் நடக்கிறது...

படம் பார்த்தவர்களுக்கு இரண்டாம் உலகம் என்று சொன்னதும் ஆர்யா மற்றும் அனுஷ்காவின் மிருகத்தனமான உழைப்பே நினைவுக்கு வரும். சிங்கத்திடம் சண்டைபோடும் ஆர்யாவைவிட, டைவ் அடித்து மிருகத்தை தன் கையால் சுற்றி தூக்கி எரியும் அனுஷ்கா தான் சபாஷ்போட வைக்கிறார். அதே அனுஷ்கா இங்கே இருக்கும் ஆர்யாவிடம் காதலை சொல்ல தயங்குவதும் அங்கே இருக்கும் அனுஷ்கா வாளெடுத்து அதிரடியாய் சண்டையிடுவதும் ஆச்சரியம். குத்தாட்டம் போட மட்டுமே பயன்பட்டுவந்த அனுஷ்கா அதகளம் புரிவது அசத்தல்!


இந்த உலகத்தில் இருக்கும் ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிப்பது, நாம் பல படங்களில் பார்த்த காட்சிதான் என்றாலும், அதில் நமக்கு பரவசமான அனுபவமே கிடைக்கிறது. ஊசிபோடும் இரண்டு கண்களில் உயிரைக் குடிப்பவள் நீ... உயரம் காட்டும் இரண்டு பூக்களில் உலகை உடைப்பவள் நீ... என வைரமுத்துவின் வரிகளுக்கு எந்த சேதமும் இல்லாமல் ஒலிக்கிறது ஹாரிஸ் ஜெயராஜின் மெலோடிகள். 

ஆர்யாவிடம் காதல் சொல்லும் போது, அனுஷ்காவின் தோழிகள் அவரை டீட்டெய்லாக விளக்குகிறார்களே... யப்பா... மருத்துவப் பெண்கள் இப்படியெல்லாமா யோசிப்பாங்க! தொப்பை இல்லை - தண்ணியடிக்க மாட்டான், பெரிய நெத்தி - அந்த விஷயத்துல ஸ்ட்ராங்கா இருப்பான், சின்ன உதடு - முத்தம் கொடுக்க வசதியா இருக்கும், குச்சி காலு... என நீண்ட லிஸ்டே போடுகிறார்கள். உடல்நலம் சரியில்லாத தன் தந்தையோடு பாசமாக இருக்கும் ஆர்யா நெகிழ வைக்கிறார். சிங்கத்தோடு ஆர்யா சண்டைபோடும் கிராஃபிச்ஸ் காட்சி சுட்டி டி.விக்கு அடிமையான குழந்தைகளுக்கு குதூகலமான காட்சியாக அமையும்.

பின்னணி இசையில் அனிருத் திண்டாடி இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. இதற்காகத் தான் ஹாரிஸ் ஒதுங்கிக்கொண்டாரோ....ஒளிப்பதிவாளார் ராம்ஜி ஏகப்பட்ட சவால்களை மேற்கொண்டுள்ளார். ஆர்யாவை தூக்கி செல்லும் இன்னொரு ஆர்யா என டபுள் ஆக்‌ஷன் காட்சிகளை ஜீன்ஸ் படத்திலேயே பார்த்துவிட்டலும், அதையும் தாண்டி பல சவாலான காட்சிகளும் இதில் இருக்கிறது. 



காதல் இல்லாத உலகத்தில் கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் இயக்குனர், அந்தக் கடவுளை சாத்தான்கள் கடத்திக்கொண்டுபோக, அவரை மனிதனான ஆர்யாவே மீட்டு வருகிறார். இந்த உலகத்தில் இருக்கும் ஆர்யா, ஒரு மேஜிக் நடந்து முடிந்ததும் அந்த உலகத்துக்கு போகிறார். இதெல்லாம் நாம் செல்வராகவனுக்காக சகித்துகொண்டால், கடைசி காட்சியில், ஆர்யா உயிர்பிழைத்து மூன்றாவதாக ஒரு உலகத்துக்கு போகிறார். (அத்தாடி... மறுபடியும் மொதல்லருந்தா!)

இதையெல்லாம் பார்க்கும்போது, படம் பார்க்கிற நமக்கு அறிவு பத்தலையா? இல்லை படம் எடுத்த இயக்குனருக்கு அறிவு அதிகமா இருக்கா? இங்கே யார் முட்டாள்? என பல கேள்விகள் வந்து போகிறது. 

கருத்துகள் இல்லை: