சனி, 30 நவம்பர், 2013

நேருவின் தம்பி ராமஜெயம் கொலையிலும் ஸ்ரீரங்கம் கண்ணன் குற்றவாளியா ?


திருச்சி: தொழிலபதிர், அவரது டிரைவர் உள்ளிட்ட, ஐந்து பேர் கொலையில் தொடர்புடைய ஸ்ரீரங்கம் கண்ணனுக்கு, முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலையில் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல், அவரது மகள் சத்யா, மகன் செல்வக்குமார் ஆகியோரை, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரும், தங்கவேலின் மனைவியும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக யமுனாவும், அவரது தாய் சீத்தாலட்சுமியும் கைது செய்யப்பட்டு, திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலில் தோஷம் கழிக்கும் சாமியராக அறிமுகமாகி, பின், யமுனாவின் கள்ளக்காதலனாகிய கண்ணன், தங்கவேல், அவரது மகள் சத்யா, மகன் செல்வக்குமார் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் அவர், ஸ்ரீரங்கம் வி.ஏ.ஓ., நரசிம்மனிடம் சரணடைந்தார். அப்போது கொடுத்த வாக்குமூலத்தில், கடந்த, 2007ம் ஆண்டு நடந்த தொழிலதிபர் துரைராஜ் மற்றும் அவரது டிரைவரையும் தானே கொலை செய்ததாக கூறினார்.  இனி திருச்சி மாவட்டத்துல கண்டு பிடிக்காம இருக்கிற எல்லா கொலை கேசும் உன் மேலதான்...
இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வசம் இருப்பதால், கண்ணன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், யமுனாவுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால், துரைராஜ் மற்றும் அவரது டிரைவர் சக்திவேலை, முத்துக்காத்தான், சரவணன் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததாக, கண்ணன் தெரிவித்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் அதிர்ச்சி அடைந்து, கண்ணனையும், அவரது நண்பர் சரவணனையும் கைது செய்தனர். முத்துக்காத்தான், இறந்து விட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சூழலில், தமிழகத்தை உலுக்கிய, முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கிலும், கண்ணனுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க முடிவு செய்து, நேற்று மாலை, நீதிமன்றம் மூலம், கண்ணனை, மூன்று நாள் கஸ்டடி எடுத்து, தங்களின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது, அவரது மொபைல் தொடர்பு கடைசியாக மாம்பழச்சாலை பகுதியில் தான் இருந்துள்ளது. அதேபோல், அவரை கடத்தியவர்கள் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள, "பப்ளிக்' டெலிபோனை பயன்படுத்தியுள்ளனர். ஸ்ரீரங்கம் கண்ணனுக்கு, மொபைல் வைத்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது. அவர், இதற்கு முன் செய்த குற்றங்களின் போதெல்லாம், பப்ளிக் டெலிபோனை பயன்படுத்துவது, வீட்டில் கொலை செய்து, ஆள் இல்லாத இடத்தில் உடலை வீசிவிடுவது என்று, ஒரே மாதிரியாக கொலைகளை செய்துள்ளார். அதே பாணியில் தான், ராமஜெயமும், 2012 மார்ச், 29ம் தேதி காலை, கல்லணை ரோட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருவானைக்காவல் சத்யா, செல்வக்குமார், தொழிலதிபர் துரைராஜ், டிரைவர் சக்திவேல் ஆகியோரின் கொலைகள், மேற்கண்ட
ஸ்டைலில் தான் நடந்துள்ளது. ஆகையால், "ராமஜெயத்தையும், கண்ணனே கொலை செய்திருக்கலாம்' என்ற சந்தேகம், சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு பலமாக எழுந்துள்ளது.

அதற்கு ஆதாரமாக, ராமஜெயத்துடன் நெருக்கமாக இருந்த அவரது உறவினருக்கும், கண்ணனுக்கும் நல்ல தொடர்பு இருந்ததாக தெரிகிறது என்று, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசாரின் கணக்கு சரி என்றால், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய, முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் கொலை வழக்கு மர்ம முடிச்சு, வரும், 2ம் தேதி மாலைக்குள் அவிழ்ந்து விடும். அன்று தான், கஸ்டடி முடிந்து கண்ணனை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.& dinamalar.com 

கருத்துகள் இல்லை: