வியாழன், 28 நவம்பர், 2013

சிவாஜி சிலை ! நடிகர் சங்கம் மவுனம் சாதிப்பது ஏன்? சங்கம் காசுபார்க்க மட்டுமே

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில அமைப்பு செயலாளரும், அகில இந்திய சிவாஜி மன்ற கொள்கை பரப்பு செயலாளருமான கவிஞர் ராமலிங்க ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேவர்மகன் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், கொடிகாத்த குமரன், பகத்சிங் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை நம் கண்முன் நிறுத்தி இந்திய மக்களுக்கு நாட்டுப் பற்றினை ஊட்டியர் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன். திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால்பெருமை போன்ற படங்களின் மூலம் நமக்கெல்லாம் பக்தி உணர்வை உருவாக்கியவர் செவாலியே சிவாஜி கணேசன் ஆவார்.
சிவாஜி கணேசனின் படங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷ பெட்டகம். என்றைக்கோ அவருக்கு மணிமண்டபம் எழுப்பி திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் வழிகாட்டும் கலைக்கூடமாக மணிமண்டபம் திகழச் செய்திருக்க வேண்டும்.
இந்த ஒப்பற்ற பிறவிக் கலைஞனுக்கு தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒன்றுகூடி இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைத்து, பெற்றுத் தந்திருக்க வேண்டும். வருடந்தோறும் இவர் பிறந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் அரசு சார்பில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தமிழுக்கும், தமிழர்க்கும் மிகப்பெரிய கவுரவமாக அது அமைந்திருக்கும்.
ஆனால் தற்போது சிவாஜி கணேசன் சிலை அமைந்திருக்கும் இடம் பற்றி பிரச்சனை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தினர் மவுனமாக இருப்பது சிவாஜி பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த நிலையை போக்க காங்கிரஸ் தொண்டர்களையும், சிவாஜி ரசிகர்களையும், சிவாஜி மன்றத்தினரையும் ஒன்று திரட்டி மிக விரைவில் நடிகர் சங்கத்தின் கண்டுகொள்ளாத போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம்.
இவ்வாறு தனது அறிக்கையில் கவிஞர் ராமலிங்க ஜோதி கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: