சனி, 30 நவம்பர், 2013

அமெரிக்காவில் ஷாப்பிங் திருவிழா! அய்யர்களும் சாமிகளும் இல்லாத திருவிழா !


இதை படிக்குமுன் இந்த எச்சரிக்கையை படிக்கவும்: சம்சாரம் மணிக்கணக்கில் ஷாப்பிங் செல்வதை அடுத்து, ‘நறநற’ நிலையில் உள்ள அப்பாவிக் கணவர்கள், இந்தக் கட்டுரையை படித்தால், நரமாமிச பட்சணிகள் ஆகி விடுவீர்கள். ஜாக்கிரதை. ஷாப்பிங் அலர்ஜி இல்லாதவர்கள் தொடர்ந்து படிக்கவும்.
அமெரிக்க கலாச்சாரம் என்றால் என்ன? ஸ்பானிஷ் கலாச்சாரம் முதல், அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் உள்ள விசித்திர கலாச்சாரங்கள் வரை கலந்து கட்டிய சமாச்சாரம் அது (ஐரோப்பியர்களிடம் கேட்டால், ஹம்பேர்கர்தான் அமெரிக்க கலாச்சாரம் என்பார்கள் கிண்டலாக). வெவ்வேறு கலாச்சாரங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த அமெரிக்கர்களிடம் தூக்கலாக உள்ள கலாச்சரம் – ஷாப்பிங் செய்வதுதான்! (அமெரிக்க வாசகர்கள் மன்னிக்கவும்)
அமெரிக்க ஷாப்பிங் பிரியர்களின் மிக முக்கிய சாட்களில் ஒன்று நேற்று வந்தது – Black Friday.

முன்பெல்லாம், டிசம்பர் மாதத்தின் முதலாவது வார இறுதி நாட்கள்தான் அமெரிக்க ஷாப்பிங் களை கட்டுவது வழக்கம். காரணம், கிருத்துமஸ் மாதத்தில் வரும் முதலாவது சம்பள செக் பலருக்கு குஷியை ஏற்படுத்தி ஷாப்பிங் செய்ய வைக்கும் என்பதால், டிசம்பர் மாதத்தின் முதலாவது வார இறுதி நாட்களில், “Cyber Sunday” அல்லது “Mega Monday” என்றெல்லாம் விளம்பரங்களை பார்க்கலாம்.
இப்போதைய ஷாப்பிங் பாஷன், Black Friday. Thanksgiving day வியாழக்கிழமை வருகிறது அல்லவா? அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி டின்னர் சாப்பிடும்போது, பற்பல ஷாப்பிங் ஐடியாக்கள் உதிக்கும் அல்லவா? அந்த சந்தர்ப்பத்தை சும்மா விட்டுவிடலாமா? அதனால், மறுநாளை Black Friday என்ற ஷாப்பிங் திருநாளாக மாற்றி விட்டார்கள்.
அமெரிக்கர்களை சகல விஷயங்களிலும் கிண்டலடிக்கும் பிஷ்-அன்ட்-சிப்ஸ் பிரிட்டிஷ்காரர்கள் இந்த விஷயத்தை கிண்டலடிப்பதில்லை. காரணம், பிரிட்டனுக்கும் வந்துவிட்டது Black Friday ஷாப்பிங் கலாச்சாரம்.
இதன் ஆரம்பம், பிலெடெல்ஃபியா (பென்சில்வேனியா) நகரில் பல ஆண்டுகளுக்குமுன் தொடங்கியது. 1960களில் Black Friday என்று அவர்கள் கூறியது ஷாப்பிங் தினத்தையல்ல. Thanksgiving dayக்கு மறுதினம் வீதிகளில் வாகன, மற்றும் பாதசாரிகளின் ட்ராஃபிக் அதிகம் இருக்கும் என்பதால், அந்த வெள்ளிக்கிழமையை Black Friday என்று அழைத்தார்கள்.
1970களில் இந்த சொல், பிலெடெல்ஃபியாவுக்கு வெளியேயும் பிரபலமாக தொடங்கியது. அத்துடன், அதற்கான காரணமும் மாறத்தொடங்கியது.
பின்னாட்களில் Black Friday என்பதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் என்ன தெரியுமா? கோடை காலம் முடிந்து செப்டெம்பர் அக்டோபரில் குளிர் காலம் தொடங்கும்போது, ஷாப்பிங் செய்யும் ஆட்களின் எண்ணிக்கையும் குறையும். அதனால், விற்பனையாளர்களின் லாப-நஷ்ட கணக்குகள் சிவப்பு மையில் (நஷ்டம்) எழுதப்படும். இது மீண்டும் மாறுவது, கிருத்துமஸ் நாட்களில்தான். லாப-நஷ்ட கணக்குகளை கருப்பு மையில் (லாபம்) எழுதத் தொடங்கும் தினம் Black Friday என்பதே புதிய விளக்கம்.
அதாவது, வியாபாரம் ஓஹோ என்று நடக்க தொடங்கும் தினம், Black Friday. அதுதான், நேற்று வந்தது.
பல அமெரிக்க நகரங்களில் இரவு முழுவதும் ஷாப்பிங்.. ஷாப்பிங்.. என வீதிகள் எல்லாம் ட்ராஃபிக்கில் திணறின. நான் 15 தினங்களுக்கு முன் வாங்கிய செல்-போன், அந்த விலையைவிட பாதி விலையில் விளம்பரப்படுத்தப்பட்டதை பார்த்ததில், இரவு உணவு இறங்கவில்லை (நான் செல்போன் வாங்கியதே, 40 சதவீத விலை தள்ளுபடியில்!)
ஆப்பிள் நிறுவனம் முதல், அடிப்பொடி நிறுவனம்வரை அடிமாட்டு விலைக்கு பொருட்கள் விற்றதை, அமெரிக்க எல்லைக்கு வடக்கே இருந்து பெருமூச்சுடன் (ஏக்கப் பெருமூச்சு, அல்லது நிம்மதி பெருமூச்சு) அப்பாவி கனேடியர்கள் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: