புதன், 2 அக்டோபர், 2013

ராஜா ராணி ! ஒரு கலர்புல் தமிழ் படம்

இளம் வயது இயக்குனருடன் இளைய தலைமுறை நடிகர் நடிகைகள் இணைந்திருக்கும் ஒரு திரைப்படம் எப்படி இருக்கும்...? ‘ராஜா ராணி’ திரைப்படம் மாதிரி கலர்ஃபுல்லாக இருக்கும். பிரபல நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் புதிதாக வந்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்
ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் அனைத்துப் பாராட்டுக்களையும் வாரிக்கொள்கிறார் விருப்பமே இல்லாமல் கடமைக்காக திருமணம் செய்துகொள்கின்றனர் ஜான் என்கிற ஆர்யாவும், ரெஜீனா என்கிற நயன்தாராவும். திருமணத்திற்குப் பிறகு இரவில் ஆர்யா குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது, நயன்தாரா அழுதுகொண்டே உறங்குவது என சண்டைகளுடன் நகர்கிறது இவர்கள் வாழ்க்கை. திடீரென நயன்தாராவுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும்போது தான் தன் மனைவியைப் பற்றிய தகவல்கள் எதுவுமே அறிந்துவைத்திருக்கவில்லை என ஜான் உணர்கிறார். ட்ரீட்மெண்ட் முடிந்ததும் ‘அட்லீஸ்ட் பொண்டாட்டியோட மெடிகல் டீடெயில்ஸாவது தெரிஞ்சு வெச்சுக்கோங்க’ என மருத்துவர் சொல்வது பல கணவர்களுக்கு பளார்.

’ஏன் உங்களுக்கு இந்த மாதிரி ஆகுது?’ என ஆர்யா கேட்க, நயன்தாராவின் வலி மிகுந்த கண்களுக்கிடையில் விரிகிறது சூர்யா என்கிற ஜெய்யுடனான காதல் கதை. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கார் ஓட்டும் சத்யராஜை குடிக்க விடாமல் பீர் பாட்டிலை நயன்தாரா வாங்கி வைத்துக்கொள்கிறார். ஒரு பெண் பீர் பாட்டிலுடன் வருவதை பார்த்து அதிர்ச்சியடையும் ஜெய் கெட்ட வாத்தையில் திட்ட அதை நயன்தாராவும் பார்த்துவிடுகிறார். தொடர்ந்து நயன்தாரா-ஜெய் சந்திக்கும் காட்சிகள் மோதலில் துவங்கி காமெடியில் முடிய, ஜெய்யின் வெள்ளந்தித்தனமான குணத்தைக் கண்டு மயங்கும் நயன்தாரா ஜெய்யை மடக்கிவிடுகிறார். 

’என் அப்பா கிட்டதாங்க எனக்கு பயம் மத்தபடி நானும் ஐ லவ் யூங்க’ என்று நிபந்தனையுடன் தன் காதலை ஒப்புக்கொள்கிறார் ஜெய். தந்தை என்பதை விட நல்ல நண்பனாக பழகும் சத்யராஜ் நயன்தாராவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி ஜெய் வீட்டிற்கு மாப்பிள்ளைக் கேட்டுசெல்கிறார். போலிஸாக இருக்கும் ஜெய்யின் தந்தை கல்யாண தேதியுடன், கருமாதி தேதியையும் ஃபிக்ஸ் பண்ணிடுங்க என வில்லன் கதாபாத்திரம் ஏற்க, ரிஜிஸ்டர் மேரேஜுக்கு தயாராகிறது நயன்தாரா-ஜெய் ஜோடி. 



தன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய தந்தையையும் அழைக்காமல் திருமணத்திற்குச் செல்லும் நயன்தாரா நாள் முழுக்க ரிஜிஸ்டர் ஆஃபீஸில் காத்திருந்து, ஜெய் வராத ஏமாற்றத்தில் அவர் வீட்டிற்குச் சென்று விசாரித்த பிறகு தான் ஜெய் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டது தெரியவருகிறது. சில நாட்களில் ஜெய் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தியில் முழுவதும் உடைந்துபோகும் நயன்தாராவிற்கு அப்போது தான் முதன்முதலில் ஸ்ட்ரோக் வருகிறது. 

’நமக்கு புடிச்ச வாழ்க்கை கிடைக்கலைன்னா வாழ்க்கைய முடிச்சுக்கக் கூடாது. என்னைக்காவது ஒரு நாள் நமக்கு புடிச்சா மாதிரி வாழ்க்கை மாறும். காதல் தோல்விக்கு பிறகும் வாழ்க்கை இருக்கு’ என்ற சத்யராஜின் அறிவுரைகளுடன் தான் ஆர்யா-நயன்தாரா திருமணமே நடைபெறுகிறது.

நயன்தாராவின் ஃபிளாஷ்பாக்கை கேட்டபின் நெருங்கிவரும் ஆர்யாவை எச்சரித்து ஒதுக்கிவைக்கிறார் நயன்தாரா. குடிக்கும் காட்சிகளில் மட்டும் நண்பனாக வலம் வந்துகொண்டிருக்கும் சந்தானம் ஆர்யாவின் வலி நிறைந்த ஃபிளாஷ்பாக்கை நயன்தாராவிடம் சொல்கிறார். 



‘ஃபிகருக்காக நாம அடிச்சிக்கக் கூடாது, ஆனா நண்பனுக்காக அடிச்சிக்கலாம்’ என்ற கருத்துடன் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு ஊரைச் சுற்றும் நண்பர்கள் தான் ஆர்யா-சந்தானம். செக் வாங்கிக்கொண்டு வருவதற்காக சந்தானத்தின் சித்தப்பா சொல்லும் வீட்டிற்கு செல்லும் போது நஸ்ரியாவை சந்திக்கிறார் ஆர்யா.(ரிங்க ரிங்கா பாட்டுக்கு நஸ்ரியா கொடுக்கும் எண்ட்ரியில் தியேட்டரே அதிருது) முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்துவிட, வழக்கம்போல ஃபாலோ செய்து ஒருவழியாக நஸ்ரியாவை மடக்கிவிடுகிறார் ஆர்யா. 

தாய் தந்தை இல்லாத பெண் என்று தெரியவர, நஸ்ரியாவின் பிறந்தநாள் பரிசாக தாலியை கட்டும் ஆர்யா, அடுத்த நாளே எதிர்பாராத விபத்தில் கண்முன்னே நஸ்ரியாவை பரிகொடுக்கிறார். நஸ்ரியாவின் இழப்பால் உடைந்துபோகும் ஆர்யா,‘காதல் தோல்விக்கு அப்பறம் வாழ்க்கை இல்லைன்னா... 25 வயசுக்கு அப்பறம் யாருமே உயிரோட இருக்க முடியாதுடா’ என்ற சந்தானத்தின் அறிவுரையில் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். 

இப்படி இருவேறுபட்ட வழியில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆர்யா-நயன்தாரா ஜோடியை, ஃபிளாஷ்பேக் தெரிந்ததும் வழக்கமான சினிமா போல் உடனே சேர்த்துவைக்காமல் திரைக்கதையை சரியாக அமைத்து நல்ல கிளைமேக்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.


ஃபிளாஷ் பேக்கில் வரும் ஆர்யா டம்மியாக இருந்தாலும், முதலிலும் கடைசியிலும் ஆர்யாவின் நடிப்பும், கம்பீரமும் சபாஷ். (குடித்துவிட்டு ஆர்யா உளறுவது எத்தனை படங்களில் வந்தாலும் ரசிக்கும் வகையிலேயே இருக்கிறது)

ஃபிளாஷ்பாக்கில் நஸ்ரியா மொத்த பாராட்டுக்களையும் அள்ளிச் செல்கிறார். கியூட்டான நடிப்பு, மனதைக் கவரும் பாவனைகள் என தோன்றும் காட்சிகளிலெல்லாம் திரையை ஆக்கிரமித்துவிடுகிறார் நஸ்ரியா. ஆர்யாவின் கண்ணத்தில் அரையும்போதும் சரி, விபத்தில் உயிரிழக்கும் காட்சியிலும் சரி... மனதில் நிற்கும் நடிப்பு. 

ஃபிளாஷ்பாக்கில் வரும் துறுதுறு கல்லூரி பெண்ணின் கேரக்டரும், திருமணமான பெண்ணின் கேரக்டரும், பக்குவமான நடிப்பு, அழகான தோற்றம் என வழக்கம் போலவே கைதேர்ந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் நயன்தாரா. 

ஜெய் தோன்றும் பெரும்பாலான காட்சிகளில் அழுதுகொண்டே இருந்தாலும், ரசிகர்களை சிரிக்க வைத்து கைதட்டல்களைப் பெறுகிறார். ஜெய், சத்யன் சேர்ந்து வரும் ஏர்-வாய்ஸ் காட்சிகள் அனைத்துமே சிரிப்புக்கு உத்திரவாதம். நான் ஒன்னும் அழுவலையே... கண்ணு வேர்க்குது என்று சொல்லி சமாளிக்கும் காட்சிகளில் அசத்திவிட்டார் மனிதர். அதே ஜெய், விமான நிலையத்தில் அதிகாரியாக தோற்றமளித்து ஆர்யாவை, டேய்... போடா... என்று சொல்லும் காட்சி கெத்து!



இந்த கேரக்டருக்கு சத்யராஜ் தான் பொருத்தமானவர் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு நடித்திருக்கிறார் சத்யராஜ். 

சமீபத்திய சில படங்களில் மொக்கை போட்டே நம் காதில் ரத்தம் வரவழைத்த சந்தானம் ( யா யா-ன்னு சிலர் சொல்வது காதில் கேட்கிறதா சந்தானம்... ), வழக்கமான நடிப்பை ஓரம் தள்ளிவைத்துவிட்டு புதிய பாடி லேங்குவேஜுடன் கலக்கியிருக்கிறார். 

’கானா’ பாலாவின் பாடல் மட்டும் பட்டையைக் கிளப்புகிறது. மற்ற பாடல்கள் பார்ப்பதற்கு கலர் ஃபுல்லாக இருந்தாலும், மனதில் நிற்கவில்லை. பாடலின் போது ரசிகர்கள் வெளியே சென்று வராமல் இருப்பதற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் தான் காரணம். மனுஷன் ஃபிரேமுக்கு ஃபிரேம் ஒரு புதுமையைக் காட்டி மிரட்டியிருக்கிறார்.  பார்க்க பார்க்க கண்களை பார்க்கத் தூண்டும் வகையில் ஒவ்வொரு ஷாட்டும் கலர்ஃபுல்லாக இருக்கிறது. 

திரைக்கதை, கதாபாத்திரத் தேர்வு என அனைத்தையும் சரிவரச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அட்லி.

ராஜா ராணி - வெற்றி பவனி!

கருத்துகள் இல்லை: