புதன், 2 அக்டோபர், 2013

லல்லு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டது ஏன் ? லல்லுவுக்கு லலிதாவின் திறமை இல்லேயே ?

லாலு பிரசாத் யாதவ்முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 45 பேரை (இதில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளும், காங்கிரசு, ஆர்.ஜே.டி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 அரசியல்வாதிகளும் அடக்கம்) கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். ராஞ்சியிலுள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை பற்றிய விபரங்கள் வரும் அக்டோபர் 3-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறையிலேயே அறிவிக்கப்படும். குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா உடல்நலமில்லாத காரணத்தால் பாட்னா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


லாலு பிரசாத் யாதவ்
லல்லுவுக்கு தண்டனை 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தண்டனை பெறும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்களின் பதவி இனி உடனடியாக பறிக்கப்படும் எனக் கடந்த ஜூலை 10-ம் தேதி உச்சநீதி மன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. எனவே லல்லு மற்றும ஐக்கிய ஜனதா தள எம்.பி ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி. பதவிகள் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.
உயர்நீதி மன்றத்தில் சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக லல்லுவின் இளைய மகன் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை மேல்முறையீடு செய்தாலும் பதவி பறிப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தப்ப முடியாது என்பதோடு, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆனால் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து இதற்கு முட்டுக்கட்டை போட விரும்பியது. அச்சட்டம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவசர சட்டம் நிறைவேறாது எனத் தெரிகிறது. ஏற்கெனவே மருத்துவ கல்லூரி சீட்டு பெறுவதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் காங்கிசு ராஜ்யசபா எம்.பி ரஷீத் மசூத் என்பவர் சிபிஐ நீதிமன்றத்தால் செப் 19 அன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு விட்டார்.  அக்டோபர் 1-ம் தேதி அவருக்கு நான்காண்டு தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக லல்லு பதவியிழக்கப் போகிறார்.
இதற்கிடையில் மிதிலேஷ் குமார் என்பவர் தற்போதைய நிதிஷ் குமார் ஆட்சியிலும் ரூ 900 கோடி அளவில் கால்நடைத் தீவன ஊழல் நடந்துள்ளதாக பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அவ்வழக்கு வரும் நவம்பர் 22-ம் தேதி ஜார்கண்ட் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அவருக்கும் பதவி பறிபோகும் என பாஜக கூறி வருகிறது.
ராப்ரி தேவி
ராப்ரி தேவி
எழுபதுகளில் ஜெயபிரகாஷ் நாராயணனின் இந்திராவுக்கு எதிரான ‘இரண்டாவது சுதந்திரப் போரில்’ பாட்னா பல்கலைக்கழக மாணவர் தலைவராக உருவெடுத்த லாலு, 1977-ல் ஜனதா கட்சி சார்பில் எம்.பி.யானார். எண்பதுகளில் மாநில அரசியலுக்கு திரும்பிய அவர், பத்தாண்டுகளுக்குப் பின் ராஜீவின் வீழ்ச்சி துவங்கிய காலகட்டத்தில் பீகாரில் யாதவ் மற்றும் முசுலீம்களின் சமூகநீதிக் காவலனாக அவதாரம் எடுத்தார். 1989-ல் பகல்பூரில் முசுலீம்களுக்கு எதிராக இந்துமத வெறியர்கள் நடத்திய படுகொலைகள் லல்லு, சரத் யாதவ், பஸ்வான் எனும் ‘சமூக நீதி’த் தலைவர்கள் பலரையும் அரசியல் அரங்கில் முன்னணிக்கு கொண்டு வந்து சேர்த்தது.
பீகாரின் எம்.ஜி.ஆர் போல மலிவு உத்தி விளம்பரங்கள் மூலம் தன்னை ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்வதில் லல்லு மிகுந்த திறமைசாலி. தில்லி அரசியலில் இருக்கும் பீகாரின் படிப்பறிவில்லாத பின் தங்கிய ஏழை மக்களில் ஒருவன் என்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்க தில்லி அரசு பங்களாவுக்கு எருமை மாடுகளை ஓட்டி வருவார். தடாலடியாக அசோக் சிங்காலுக்கு பாட்னா சிறையில் இடம் காலியாகி இருப்பதாகவும், அங்கு வந்தால் பீகார் இந்தியாவில் இருக்கிறதா இல்லை பாகிஸ்தானில் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளலாம் என்றும் சவால் விடுவார். எனவே ‘சமூகநீதிக் காவலர்’ பட்டம் தானாகவே அவருக்கு வந்து சேர்ந்தது.
ராஜீவைத் தொடர்ந்து வந்த ஜனதா தளத்தின் வி.பி.சிங்கும் தாராளமயமாக்கலை அமல்படுத்தத் துவங்கவே, ஊழல் அரசுத் துறைகளிலும், பொதுத்துறையிலும் புதிய வேகத்தில் கொடிகட்டிப் பறக்கத் துவங்கியது. அரசு அதிகாரிகள் நன்றாக கொள்ளையடிக்க சட்டப்பூர்வமாகவே வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தனர் ஆட்சியாளர்கள். 1996-ல் பீகாரில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக போலி ரசீதுகளை அச்சடித்து கருவூலங்களில் இருந்து ரூ 950 கோடி அளவுக்கு பணத்தை ஏமாற்றி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பெற்று ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்
சாய்பாசா மாவட்ட கருவூலத்திலிருந்து மட்டும் இப்படி ரூ 37.70 கோடி பணம் பெறப்பட்டிருந்தது சி.பி.ஐ விசாரணையில் தெரிய வந்தது. 950 கோடி தொகையில் வழக்கு விசாரணைக்கு வந்தது வெறும் 37.70 கோடி ரூபாய்தான். மீதிக்கு சாட்சியமில்லை எனும் போது இந்த ஊழல் வழக்கின் மேம்போக்கான நீதியை எவரும் உணர முடியும். எந்த கால்நடை வளர்ப்பவர் பெயருக்கு கருவூலத்திலிருந்து தொகையை மானியமாக வாங்குகிறார்களோ அவருக்கு 20 சதவீத பணத்தையும், அதிகாரிகள் மற்றும் அரசியில்வாதிகளுக்கு மீதமுள்ள 80 சதவீத பணத்தையும் பிரித்துக் கொடுத்துள்ளனர். இதனை முதலில் கண்டறிந்து அம்பலப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அமித் கரே என்பவரை பல்வேறு துறைகளுக்கு பந்தாடியது லல்லு தலைமையிலான ஜனதா தள ஆட்சி.
1996-ல் தேவகவுடா தலைமையில் மத்தியில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது ஜனதா தளக் கட்சியின் தலைவராகவும் லல்லு இருந்து வந்தார். அப்போது சிபிஐ இயக்குநராக இருந்த ஜோகிந்தர் சிங் முதலில் மாட்டுத் தீவன வழக்கில் தேவகவுடாவின் வழிகாட்டலின் பேரில் லல்லு மீதான் சிபிஐ விசாரணையை முடக்க முயற்சித்தார். ஏப்ரல் மாத இறுதியில் சிபிஐ அதிகாரி யு.என். பிஸ்வாசிடம் (இவர் தற்போது மம்தா அமைச்சரவையில் இருக்கிறார்) நடைபெற்ற விசாரணை அறிக்கைகளை சிபிஐ தலைமையிடம் தர வேண்டாம் என பாட்னா உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.
அதன்பிறகு தேவகவுடா அரசு கவிழ்ந்து புதிய பிரதமர் தேர்வு துவங்கியவுடன், லல்லுவும் போட்டியில் குதிக்கவே, இடைக்கால பிரதமரான கவுடா, ஜோகிந்தர் சிங் மூலம் லல்லு மீது வழக்கு தொடர அனுமதி தந்தார். உடனே ‘மேல்சாதியினரின் சதி’ என்று ஜெயலலிதா போலவே நீலிக்கண்ணீர் வடித்தார் லல்லு. இந்நிலையில் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த சிபிஎம் கட்சியினர் அவரைப் போலவே ஊழலில், வளர்ப்பு மகன் திருமணத்தில் வழக்கை எதிர்நோக்கியிருந்த தமிழகத்தின் ஜெயா விசயத்தில் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தனர்.
1997-ல் இந்த ஊழல் குற்றப்பத்திரிகை தன் மீது தாக்கல் செய்யப்பட்டவுடன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த லல்லு தனது மனைவி ராப்ரி தேவியை பீகார் முதல்வராக நியமித்தார். ‘ஆலு இருக்கும் வரை இந்த லாலுவும் இருப்பான்’ என்று அப்போது பஞ்ச் டயலாக் அடித்துக் கொண்டிருந்தார். இப்போதும் கட்சியின் தலைவராக ராப்ரி தேவியை நியமித்து விட்டுத்தான் ராஞ்சி மத்திய சிறைக்கு சென்றுள்ளார் லல்லு. இடைப்பட்ட காலத்தில் தெற்கு பீகாரை பிரித்து வனாஞ்சல் அல்லது ஜார்கண்ட மாநிலம் அமைக்க நடந்த முயற்சிக்கு எதிராக ஐக்கிய பீகாரை முன்வைத்து குரல் எழுப்பினார்.
2000-ல் தாதுவளம் மிக்க ஜார்கண்ட் மாநிலம் தனியாக பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டபோது சாய்பாசா மாவட்டம் அங்கு சென்று விடவே 2001-ல் மாட்டுத் தீவன முறைகேடு வழக்குகள் 61-ல் 54 ராஞ்சி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 45 வழக்குகளில் தீர்ப்பு வந்து விட்டது. கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பிஸ்வாஸ் குமார் பீகார் மாநில கல்வியமைச்சருக்கு உறவினர் என்பதால் தனக்கு நீதி கிடைக்காது, எனவே அவரை மாற்ற வேண்டுமெனக் கோரிய லல்லுவின் மனுக்களை உச்சநீதி மன்றமும், உயர்நீதி மன்றமும் நிராகரித்து விட்டன.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
கிட்டத்தட்ட 16 ஆண்டு காலமாக நடந்து வந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது. பாஜக போன்ற எதிர்க்கட்சியினர் இதனை வரவேற்றுள்ளதுடன், மத்தியிலும் நடந்துள்ள இதுபோன்ற ஊழல்களுக்காக காங்கிரசு அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோடிட்டு காட்டியுள்ளனர். ராணுவ வீரர்களது சவப்பெட்டியை வாங்கியதில் கூட ஊழல் செய்தவர்கள் பாஜக-வினர் என்பதை நாட்டு மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அன்றைக்கு 64 கோடியில் இருந்த போஃபர்ஸ் ஊழலை இன்று பல லட்சம் கோடி நிலக்கரி ஊழல் வரை வளர்த்து கொண்டு சென்றவர்கள் காங்கிரசுக்காரர்கள் என்பதையும் தாண்டி, இந்த மாட்டுத் தீவன வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெகன்னாத் மிஸ்ரா ஒரு காங்கிரசுக்காரர் என்பதையும் தாண்டி அக்கட்சியும் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ எனக் கூறி தீர்ப்பை வரவேற்றுள்ளது நல்ல காமெடிதான். திக்விஜய சிங்கோ ஒருபடி மேலே போய் ”தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து லல்லு விரைவில் விடுதலையாவார்” எனத் தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார். ”பேராசையுடன் அரசு சொத்தை அபகரிக்க முயன்ற லல்லு தண்டனையை கட்டாயம் அனுபவித்தாக வேண்டும். தவறு செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கு இது நல்லதொரு பாடம்” என லல்லுவின் பரம வைரியான ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கட்சி எம்.பி ஜெகதீஷ் சர்மாவும் இந்த ஊழல் வழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர்.
பழைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் (2004-09) லல்லு மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயை லாபத்தில் இயங்க வைக்கிறார் என்று கூறி அகமதாபாத் ஐஐஎம் மேலாண்மை பயிற்சி கல்லூரிக்கு வந்து அவரை மாணவர்கள் மத்தியில் பேசுமாறு பணித்தார்கள். காரணம் அவர் ரயில்வேயை லாபத்தில் இயங்க வைத்தார் என்பது தான். ஏற்கெனவே அரசு அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கிய பிறகு ரயில்வே துறையை தனியாருக்கு திறந்து விட முயன்றது தான் அவரது காலத்தில் நடைபெற்றது. அது சட்டப்படி நடந்த ஊழல் என்பதால் அவரை ஒரு அறிவார்ந்த பேராசிரியராகத்தான் அகமதாபாத் ஐஐஎம்-ல் நடத்தினார்கள்.
ஊழல் புகாரில் லல்லு சிக்கிய பிறகு, நிதிஷ் போன்றவர்களை நடுத்தர வர்க்கமும், மிதவாத இந்துத்துவாவாதிகளும், நிலப்பிரபுக்களின் ரன்வீர் சேனா கும்பல்களும், உயர்சாதிகளும் ஆதரிக்க துவங்கின. பிறகு யாதவ ஏழை மக்களே லல்லுவைப் புறக்கணிக்கத் துவங்கினர். எனவே தலைமைச் செயலகத்திற்கு ரிக்சா வண்டியில் போகும் ஸ்டண்டு வேலைகளை அவரைப் போலவே நிதிஷ்குமார் செய்ய ஆரம்பித்தார்.
ஜெயலலிதா
ஜெயலலிதா
இன்று ஊழல் இன்னொரு பரிமாணத்திற்கு சென்று விட்டது. இப்போது முதலாளிகள் நேரடியாகவே இந்த ஊழலில் பங்கு பெறுகிறார்கள். அவர்களுக்கு சட்டத்தின்படி தண்டனை எதுவும் வழங்க இயலாது. சட்டத்தின் மொழியில் தரகு முதலாளிகள் அடிக்கும் கொள்ளைக்கு பெயர் தேசத்தின் வளர்ச்சி, முன்னேற்றம். நிலக்கரி ஊழலில் ஈடுபட்ட மன்மோகன் சிங்கோ, 2ஜி ஊழலில் ஈடுபட்ட ஆ.ராசாவோ இனி தண்டிக்கப்பட்டாலும் நடந்த ஊழலுக்காக தண்டிக்கப்பட மாட்டார்கள், ஊழல் செய்ததில் நடந்த விதிமுறை மீறல்களுக்காக மாத்திரமே தண்டிக்கப்படுவர். தப்பித் தவறி கூட இதில் அதிக இலாபமடைந்த முதலாளிகள் நீதிமன்றத்தில் கூட நிறுத்தப்பட மாட்டார்கள். இதைத்தான் சட்டம் சொல்கிறது.
அப்படியானால் லல்லு ஏன் இப்போது தண்டிக்கப்படுகிறார் என்ற கேள்வி எழுகிறது. மாட்டுத் தீவன ஊழலுக்கும் முந்தைய போஃபர்சுக்கு இன்னமும் யாரும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது காங்கிரசின் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கணக்கீடு தவிர வேறொன்றும் இல்லை.
இப்போது நிதிஷ் பிரதமர் போட்டியில் இல்லை. லல்லுவைப் போலவே நிதிஷையும் ஊழல் அரசியல்வாதியாக காட்டுவதன் மூலம் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பீகார் என்ற தனது பழைய கோட்டையை தொடர்ந்து அமைதி காப்பதன் மூலம் கைப்பற்ற காங்கிரசு திட்டமிடுகிறது. அதற்காகத்தான் ராகுல் போன்றவர்கள் ஊழல் எம்.பி.க்களுக்கு ஆதரவான அவரச சட்டத்தை எதிர்ப்பது போல காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஊழல் பேர்வழியாக மாறி விட்ட லல்லுவை சமூகநீதிக் காவலராக முன்னிறுத்தி மதவாதிகளை எதிர்க்க காங்கிரசுக்கு விருப்பமில்லை.
எப்படியோ ராஞ்சி மத்திய சிறையில் கொசுக்கடியில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் லல்லுவுக்கு மன்மோகன் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகுதான் விடிவுகாலம் பிறக்கும் போல தெரிகிறது. தண்டனை உறுதி என்றாலும், இப்போது நடக்கும் மாபெரும் ஊழல்களுடன் ஒப்பிடுகையில் ரூ 950 கோடி என்பது குறைவுதானே என்று லல்லு கோஷ்டியினர் கூறக் கூடும்.
அதைவிட முக்கியம், லல்லு மீது புகார் வெளியான காலத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீதிமன்றத்தை இழுத்தடிக்கும் சாமர்த்தியம் உள்ள ஜெயாவும், அவருக்கு ஆதரவான அரசுத்துறையும் இணைந்து இன்னும் பல ஆண்டுகளுக்கு விசாரணையை நீட்டிக்கும் வல்லமையுடையவர்கள். காங்கிரசின் கூட்டணி பற்றி எந்த முடிவும் எட்டப்படாத வரையில் கர்நாடாகாவில் நடக்கும் ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு சாதகமாகத்தான் நீதித்துறையும், அரசுத்துறையும் நடந்து கொள்ளும். ஆனால் காங்கிரசின் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கான யோக்கிய வேடத்திற்கு ஒரு நடவடிக்கை தேவைப்படுகிறது. லல்லு அந்த பாத்திரத்திற்கு உதவியிருக்கிறார். இதை முன்னறிந்ததால்தான் ராகுலும் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பதவி இழப்பதற்கு குரல் கொடுக்கிறார்.
மேலும் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பதவி பறிப்பை விட அவர்கள் கொள்ளையடித்த பணத்தை திரும்பப் பெறுவதும், அபராதமாக அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதும் தற்போது இல்லை. மேலும் எல்லா ஊழல்களின் ஊற்று மூலமாக அதிகார வர்க்கமும், முதலாளிகளும்தான் பின்னணியில் உள்ளனர். அவர்கள் தீர்ப்பு கூறப்பட்ட எந்த வழக்குகளிலும் பிரதானமாய் கொண்டு வரப்படுவதில்லை. ஏதுமறியா ராப்ரி தேவி முதலமைச்சராய் ஆண்ட போது பீகாரை உண்மையில் ஆட்சி செய்தவர்கள் அதிகார வர்க்கம் என்றால் விசயமறிந்தவர்கள் ஆளும் போதும் கூட அவர்களே ஆட்சி செய்கிறார்கள்.
இனி இவர்கள் அனைவரும் சட்டத்திற்குட்பட்டு நேர்மையாக ஊழல் செய்வது எப்படி என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். நிலக்கரி வயல் ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஊழல் முதலியனவற்றில் நாம் அதைத்தான் பார்க்கிறோம்.
- வசந்தன்.vinavu.com 

கருத்துகள் இல்லை: