புதன், 2 நவம்பர், 2011

பாரிமுனை, புரசைவாக்கம் கடைகளுக்கும் விரைவில் மூடுவிழா

விதிமுறைகளை மீறிய பாரிமுனை, புரசைவாக்கம் கடைகளுக்கும் விரைவில் மூடுவிழா

சென்னை: சென்னை தி.நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சீல் வைத்ததைத் தொடர்ந்து அடுத்து பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட பல அடுக்கு மாளிகை ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்டவற்றை நேற்று அதிரடியாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இதனால் தி.நகர் பகுதி வர்த்தகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்டமாக பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நடவடிக்கை முதல் கட்ட நடவடிக்கைதான். அடுத்து புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வர்த்தக வளாகங்கள் மீது நடவடிக்கை பாயும் என்று பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தி.நகருக்கு இணையாக தற்போது பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ள பகுதி புரசைவாக்கம் ஆகும். இங்கும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் தனது கிளையை சமீபத்தில் ஆரம்பித்தது என்பது நினைவிருக்கலாம். சரவணா ஸ்டோர்ஸ் தவிர பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் இங்கு நிரம்பியுள்ளன. அதேபோல பாரிமுனைப் பகுதியிலும் பெருமளவிலான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும் வண்ணாரப்பேட்டை பகுதியிலும், தி.நகருக்கு இணையான அளவுக்கு ஜவுளிக் கடைகள் நிரம்பி வழிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சிஎம்டிஏவின் அதிரடி நடவடிக்கையால் இப்பகுதிகளி்ல உள்ள வர்த்தகர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

நேற்றைய நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில்,

விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட 21 கட்டிடங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 6 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 12 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், 8 கட்டிடங்களின் உரிமையாளர்கள் சிட்டி சிவில் கோர்ட்டில் இடைக்கால தடை வாங்கியுள்ளனர்.

இந்த தடையை நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தை அணுகப்போகிறோம். மேல் கோர்ட்டு வழங்கிய உத்தரவின் பேரில், மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் நடவடிக்கை எடுக்கும்போது, கீழ் கோர்ட்டில் தடை வாங்குவதை எடுத்துச் சொல்லப் போகிறோம் என்றார்.

இதற்கிடையே, இதுதொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: