வெள்ளி, 4 நவம்பர், 2011

அண்ணா நூலகத்தை இடம் மாற்ற செய்ய சென்னை ஐகோர்ட் தடை!

சென்னை:அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக 6 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு அரசியல் கட்சிகள், தமிழறிஞர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசின் முடிவை எதிர்த்து ஐகோர்ட் வக்கீல்கள் பிரபாகரன், புகழேந்தி ஆகியோர் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது சட்டவிரோதமானது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அவசர அவசரமாக அமைச்சரவையை கூட்டி முடிவு எடுத்தது நியாயமற்றது. நூலகம் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. திடீரென இதை மாற்றுவது தவறு. இதனால் மாணவர்கள், வாசகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்’ என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு: பிரபாகரனின் வக்கீல் ராதாகிருஷ்ணன்: பொதுமக்கள் பயன்படுத்திவரும் எந்த நூலகத்தையும் மூடுவதற்கோ, மாற்றுவதற்கோ அரசுக்கு உரிமை இல்லை. ஆனால், கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்: நூலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை தாக்கல் செய்துள்ளேன். கடந்த ஆட்சியில் கிராமங்களில் செயல்படும் நூலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி இந்த நூலகத்தை கட்டியுள்ளனர். இதைவிட அதிக செலவில் பிரமாண்ட நூலகத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. புதிய நூலகம் கட்டிய பிறகே இந்த நூலகம் மாற்றப்படும். உடனே மாற்ற மாட்டோம். தலைமை நீதிபதி: கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட நூலகத்தை மாற்றுவது ஏன்? அதற்கு என்ன அவசியம்? நவநீதகிருஷ்ணன்: இதைவிட பிரமாண்ட நூலகத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதில் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதில் கோர்ட் தலையிடக் கூடாது. மக்களின் நாடித்துடிப்பை பார்த்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் தொடர்ந்து அரசுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். தலைமை நீதிபதி: நீங்கள் அட்வகேட் ஜெனரலாக பேசுகிறீர்களா? அல்லது அரசியல்வாதியாக பேசுகிறீர்களா? அட்வகேட் ஜெனரல்: இந்த வழக்கில் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது என்பதற்காகத்தான் தற்போதுள்ள உண்மை நிலையை கூறுகிறேன். கடந்த அரசு கண்மூடித்தனமாக அரசு பணத்தை செலவு செய்து தலைமை செயலகத்தை கட்டியது. அதில் அரசுக்கு சாதகமாக கோர்ட் தீர்ப்பு கூறியது. இந்த விஷயத்திலும் அரசு நல்ல முடிவு எடுத்துள்ளது. கோர்ட் அவசரப்பட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. தலைமை நீதிபதி: இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்த அரசாணையை பரிசீலனை செய்து பார்த்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யவிருப்பது தெளிவாக தெரிகிறது. கோர்ட் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடமாற்றத்துக்கு தடை விதிக்கிறேன். 6 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். இதை தொடர்ந்து மூத்த வக்கீல் வில்சன் குறுக்கிட்டு, ‘‘இதுபோல் நான் தாக்கல் செய்த வழக்கிலும் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘நூலகம் இடமாற்றம் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை: