திங்கள், 31 அக்டோபர், 2011

இலங்கை வெளியிட்ட சாம்பிள் ஆதாரங்கள்.ஸ்டாக் அதிகம்

சிலர் முன்னாள் புலிகள் என்று ஸ்ரீலங்கா வெளியிட்ட, ஆதார வீடியோ!

Viruvirupu
கொழும்பு, ஸ்ரீலங்கா: ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் செய்யப்படும் பிரச்சாரத்துக்கு எதிரான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றது ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு. ஆஸ்திரேலிய டி.வி. சேனல் ஏ.பி.சி.யின் ‘செவன்-தர்ட்டி ஷோ’-வில் வெளியான டாக்குமென்ட்ரி ஒன்றுக்கு பதில் அளிக்கும் பாணியிலேயே பாதுகாப்பு அமைச்சின் வீடியோ வெளியாகியுள்ளது.
முதல் தடவையாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டு ஸ்டைலில் எதிர்ப் பிரச்சாரம் ஒன்றை இதன்மூலம் ஆரம்பித்துள்ளது. இதுபோன்ற வீடியோக்கள் கடந்த காலங்களில் இஸ்ரேலிய அரசால் (அல்லது அரசு சார்பு மீடியா நிறுவனங்களால்) வெளியிடப்படுவது வழக்கம்.
பாலஸ்தீன விடுதலை அமைப்புகளின் பிரச்சாரத்துக்கு எதிர்ப் பிரச்சாரமாக, இஸ்ரேலிய அரசு அவற்றை வெளியிடுவது பிரபலமாக இருந்தது.
ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள வீடியோ, வெளிநாட்டு மீடியாக்களில் எந்தளவுக்கு ஒளிபரப்பாகும் என்பது தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ வெளிநாடுகளில் இயங்கும் விடுதலைப் புலிகள் செயற்பாட்டாளர்கள் பலரை அதிர வைத்திருக்கின்றது. காரணம் இந்த வீடியோவில், தம்மிடமுள்ள தகவல்களில், ஒரு ‘சாம்பிள்’ காட்டியிருக்கிறது ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு.

வன்னியில் விடுதலைப்புலிகளுடன் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் ஸ்ரீலங்கா ராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். அதைத் தவிர புலிகள் தமது ரகசியத் தகவல்களைப் பதிவு செய்து வைத்திருந்த ஏராளமான ரிக்கார்டுகள் ஸ்ரீலங்கா ராணுவத்திடம் சிக்கின. இவற்றில் அதிக சதவீதமானவை, புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு பதிவு செய்து வைத்திருந்த ரிக்கார்டுகள்.
விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தவரது பெயர் மணிவண்ணன். காஸ்ட்ரோ என்ற பெயரில் அறியப்பட்டிருந்த அவரின் கீழ் இயங்கிய புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு, தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய சகல தகவல்களையும் அப்-டு-டேட்டாக பதிவு செய்து வைத்திருந்தது.
வெளிநாடுகளில் இருந்து புலிகளைச் சந்திக்க வன்னிக்கு சென்றவர்கள், புலிகளின் அழைப்பில் வன்னிக்குச் சென்றவர்கள், புலிகளுடன் இணைந்து பணியாற்றியவர்கள், பற்றியெல்லாம் விலாவாரியான பதிவுகளை புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு வைத்திருந்தது. அதைத்தவிர, வெளிநாடுகளில் இருந்து சென்றவர்கள் வன்னியில் புலிகளின் பிரமுகர்களைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள், அவர்கள் கலந்துகொண்ட விழாக்களில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் என்று ஒரு பெரிய கலெக்ஷனே இருந்தது.
யுத்தத்தில் புலிகள் பின்வாங்கிச் சென்றபோது, வெவ்வேறு பிரிவுகள் தம்மிடமிருந்த ரிக்கார்டுகளை அழித்துவிட்டுச் சென்றபோதும், மணிவண்ணன் தலைமையிலான வெளிநாட்டுப் பிரிவு அப்படிச் செய்யவில்லை. தம்மிடமிருந்த அனைத்து ரிக்கார்டுகளையும் பாதுகாப்பான இடமாக தாங்கள் கருதும் இடங்களில் புதைத்து விட்டு, பின்வாங்கிச் சென்றனர்.
பின்வாங்கிய அனைவரும் முள்ளிவாய்க்கால் பகுதியில் போய் சிக்கிக் கொள்ள, அந்த சிறிய இடத்தை ஸ்ரீலங்கா ராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது. யுத்தம் முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பினரில் பலர் கொல்லப்பட்டனர். வேறு பலர் ராணுவத்திடம் சரணடைந்தனர். சரணடைந்தவர்களில், புலிகளின் வெளிநாட்டுப் பிரிவில் இருந்த சில முக்கியஸ்தர்களும் அடங்குவர்.
புதைத்து வைக்கப்பட்ட ரிக்கார்டுகள் எங்கெல்லாம் உள்ளன என்ற விபரங்களை மிகத் துல்லியமாக இவர்கள் மூலம் தெரிந்துகொண்ட ஸ்ரீலங்கா ராணுவம், அவற்றை தமது கைகளில் எடுத்துக் கொண்டது.
இந்த ரிக்கார்டுகள் பெரிய பொக்கிஷம் போன்றவை. புலிகளின் வெளிநாட்டு நெட்வேர்க் பற்றிய முழு விபரங்களையும் ஸ்ரீலங்கா உளவுப் பிரிவு இவற்றின் மூலம் அறிந்து கொண்டது. ஒரு விதத்தில் சொல்லப் போனால், புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த பலரைவிட, புலிகளின் விவகாரங்கள் பற்றி ஸ்ரீலங்கா உளவுப் பிரிவினருக்கு அதிகமாகத் தெரியும்.
இப்படியான பல விபரங்களைத் தெரிந்து கொண்ட ஸ்ரீலங்கா உளவுப் பிரிவு, அவசரப்பட்டு அந்த விபரங்களை வெளியிடவில்லை என்பதுதான் அவர்கள் வைத்திருந்த பொறி.
இதெல்லாம் நடந்து இரு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், வெளிநாட்டு மீடியாக்களில் ஸ்ரீலங்கா பற்றிய போர்க் குற்றங்கள் தொடர்பான டாக்குமென்ட்ரிகள் ஒளிபரப்பாகத் தொடங்கின. அந்த ஒளிபரப்புகளில், யுத்த காலத்தில் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சம்பவங்களுக்கு சாட்சிகளாக காண்பிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் என்றும், வெறும் பார்வையாளர்கள் என்றும் கூறப்பட்டு வந்தனர்.
காரணம், அவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற விபரம் வெளியானால், இரு பாதகங்கள் உள்ளன.
முதலாவது, இது புலிகளின் சார்பான டாக்குமென்ட்ரி என்ற இமேஜ் ஏற்பட்டுவிடும். இரண்டாவது, இவற்றில் சாட்சிகளாக குரல்கொடுத்த சிலர் வெளிநாட்டுப் பிரஜைகள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள். அவர்கள் வசிக்கும் நாட்டில் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டிருந்தால், இவர்கள் அங்கே சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம்.
தற்போது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள வீடியோ, வெளிநாட்டு மீடியாக்களில் ‘பொதுமக்கள் அல்லது பார்வையாளர்கள்’ என்று குறிப்பிடப்பட்ட சிலரைப் பற்றிய விபரங்களை கூறுகின்றது. இவர்கள் உண்மையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்றும், ஆயுதப் பயிற்சி பெற்ற போராளிகள் என்றும் ஆதாரங்களைக் காட்டுகின்றது இந்த வீடியோ.
வீடியோவில் காண்பிக்கப்படும் ஆதாரங்களில், முன்பு புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தபோது எடுக்கப்பட்ட போட்டோக்களும் உள்ளன. புலிகள் உறுப்பினர்களின் நேரடி வாய்மொழி விளக்கமாகவும் உள்ளன.
இவற்றை வெளிநாட்டு மீடியாக்களில் சரியாகக் கொண்டு போகும் அளவுக்கு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் தொடர்புகள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இன்றைய தேதிவரை வெளிநாடுகளிலுள்ள பிரபல மீடியாக்கள் எதிலும் இவை வெளியாகியதாக தெரியவில்லை. ஆனால் தூதரகங்கள் மூலம், வெளிநாட்டு அரசுகளுக்கு கொடுப்பார்கள் என்று ஊகிக்கலாம்.
இதன் ரீச்சிங்-பவர் எப்படியோ, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, ஸ்ரீலங்கா உளவுத்துறை இப்போது ஒரு ‘சாம்பிள்’ காட்டியிருக்கிறது. ஆம். அவர்களிடமுள்ள தகவல்கள் பற்றிய ஒரு சாம்பிள்தான்!
-கொழும்புவிலிருந்து ரவீந்திரனின்  குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: