புதன், 2 நவம்பர், 2011

கனிமொழியை அழைத்துவர ஸ்டாலின் டில்லிக்கு போகும் ‘ஸ்டோரி-லைன்’!

Viruvirupu
சென்னை, இந்தியா: நாளை (வியாழக்கிழமை) கனிமொழியின் ஜாமீன் மனு மீண்டும் டில்லி பட்டியாலா கோர்ட்டுக்கு வருகின்றது. ஜாமீன் மனுவை சி.பி.ஐ. எதிர்க்காது என்று கூறிவிட்டதில், அநேகமாக ஜாமீன் கிடைத்தது போலத்தான் என்ற உற்சாகத்தில் தி.மு.க. தலைமை உள்ளது.
நீதிபதி ஷைனி என்ன முடிவு எடுக்கப் போகின்றார் என்பது ஒருபுறம் இருக்க தி.மு.க. வட்டாரங்களில் கனிமொழியை சென்னைக்கு அழைத்து வருவது பற்றி பேசத் தொடங்கியிருப்பதுதான் வேடிக்கை. (கனிமொழிக்கு ஒருவேளை ஜாமீன் வழங்கப்பட்டு, அது கன்டிஷன் ஜாமீனாகவும் இருக்கலாம். கன்டிஷன்களில் ஒன்று, டில்லியில் தங்கியிருக்க வேண்டும் என்றுகூட இருக்கலாம்)
கடந்த தடவை கலைஞர் டில்லிக்குச் சென்றதே கனிமொழியை அழைத்து வருவதற்காக என்பதை தி.மு.க. முக்கியஸ்தர்கள் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். கனிமொழி இல்லாமல் சென்னை திரும்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த ராசாத்தி அம்மாளையும் மிகுந்த சிரமத்தின் பின்னர்தான் கலைஞரால் சென்னைக்கு அழைத்துவர முடிந்தது என்றும் சொல்கிறார்கள்.
அதெல்லாம் பழைய கதைகள். புதிய கதை என்ன?

இந்த நிமிடத்தில் சென்னை தி.மு.க.வினர் மத்தியில் சீரியசாக அடிபட்டுக் கொண்டுள்ள கதையை எவ்வளவு சீரியசாக எடுக்க முடியும் என்று தெரியவில்லை. அந்தக் கதை, கனிமொழி ஜாமீனில் விடப்பட்டால், அவரை ஸ்டாலினே நேரில் போய் அழைத்து வருவார் என்பதுதான்! அறிவாலயத்திலேயே இந்தக் கதை அடிபடுவதுதான் ஹைலைட்!
இது குடும்பத்துக்குள் (குடும்பங்களுக்குள்) ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் என்கிறார்கள் எமது தி.மு.க. தொடர்பாளர்கள். இதற்கு ஸ்டாலின் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்று ஒரு தரப்பு சொல்கிறது. மற்றொரு தரப்போ, இதுவே ஸ்டாலினின் ஏற்பாடுதான் என்கிறது.
கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போகவேண்டிய நிலையிலும், முக்கிய விஷயம் ஒன்று தொடர்பாக வாயே திறக்கவில்லை என்கிறார்கள். கனிமொழி வாயைத் திறந்திருந்தால், கோபாலபுரத்தில் இருந்து திகாருக்கு யாரோ ஒரு நபர் போயிருக்க வேண்டியிருக்கும் என்றும் ஒரு ஸ்டோரி-லைன் உண்டு.
அதற்கும், ஸ்டாலின் டில்லிக்குப் போவது என்ற பேச்சுக்கும் தொடர்பு இருக்குமா? அட, பொறுங்கள். முதலில் ஜாமீன் கிடைக்கட்டும் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: