புதன், 2 நவம்பர், 2011

விஜயகாந்த் வாயைத் திறந்திருப்பது, ‘இடையில் ஏற்பட்ட தடங்கலா?’

Viruvirupu
சென்னை, இந்தியா: தே.மு.தி.க. சட்டசபைத் தேர்தலில் அடைந்த வெற்றிக்கும், உள்ளாட்சித் தேர்தலில் வாங்கிய அடிக்கும் இடையே சம்மந்தமே கிடையாது என்ற நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் அப்படி என்னதான் நடந்தது என்று விஜயகாந்த் யோசித்திருப்பார் போலிருக்கிறது. சிலீப்பிங் மோடில் இருந்து லைவ் ரன்னுக்கு வந்திருக்கிறார்.
மக்கள் பிரச்சினை தொடர்பாக வாய் திறக்கத் தொடங்கியிருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை குறித்து அறிக்கை விடுத்திருக்கிறார் அவர். ஏனோ தெரியவில்லை, மாநில அரசு தொடர்பான விஷயத்தை விட்டுவிட்டு, மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில்தான் அறிக்கை விட்டிருக்கிறார். அதிலும் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

தே.மு.தி.க.வின் தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தேர்தல் வராவிட்டால் வாயே திறக்க மாட்டார் என்ற இமேஜ் என்பது பொதுவான கருத்து. சட்டசபைக்குச் செல்வதில்லை, மாநிலத்தின் எந்தப் பிரச்சினைக்கும் குரல் கொடுப்பதில்லை. சுருக்கமாக விஜயகாந்த என்று ஒருவர் எக்ஸிஸ்ட் பண்ணுவதாக செய்திகளில் அடிபடுவதில்லை.
அதை மாற்றத் தீர்மானித்திருக்கிறாரா, அல்லது இந்த அறிக்கை ‘இடையே ஏற்பட்ட தடங்கலா’ என்பது தெரியவில்லை.
விஜயகாந்தின் அறிக்கையில், “கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து, மத்திய அரசு இப்பிரச்னையை உடனடியாகத் தீர்க்கவேண்டும் என்று நானும் கேட்டுக்கொண்டேன். தமிழக அமைச்சரவையிலும் இது பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு இப்பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இதை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாற்றி, போராட்டத்தை ஒடுக்க, அடக்கு முறையைக் கையாளப்போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. உடனடியாக இந்தப் பிரச்னையைத் தீர்க்க, தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
அறிக்கை சரி. அறிக்கையைப் படிக்கும் ஒருவர், அதன் கீழ்ப்பகுதியில் விஜயகாந்த்தின் கையொப்பத்தைக் காணாவிட்டால், தமிழக அரசின் அறிக்கை என்றோ, அ.தி.மு.க. அறிக்கை என்றோ நினைப்பார்!
அட வுடுங்க சார், கேப்டன் வாயையாவது திறந்திருக்காரே!

கருத்துகள் இல்லை: