வெள்ளி, 4 நவம்பர், 2011

கிரிமினல் வழக்குகளை சுமக்கும் 162 எம்.பிக்கள் மீதான நடவடிக்கை என்ன?- சுப்ரீம் கோர்ட்

டெல்லி: 162 எம்.பிக்களின் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க காலதாமதம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வழக்குகளை விரைவு நீதிமன்றங்களில் விசாரிப்பது பற்றி மத்திய அரசு கருத்து தெரிவிக்க கோரி நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற எம்.பி.க்களில் 162 பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் நாடெங்கும் உள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கின்றன. எம்.பி.க்கள் மீதான வழக்கு என்பதால் வழக்கு விசாரணை நத்தை போல நடந்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் தேர்தல் கமிஷனர் ஜெ.எம்.லிங்டோ சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தன் மனுவில் எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் கவனிக்கப்படாமல் உள்ளன. அந்த வழக்குகளை அதிவிரைவு கோர்ட்டுக்கு மாற்றி விரைவில் விசாரணை நடத்தி முடித்து தீர்ப்பு கூற வேண்டும் என்று கோரியிருந்தார்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இந்த பொதுநல மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 162 எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது கவலை தருகிறது. நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அதிவிரைவு நீதிமன்றங்கள் உள்ளன. அவற்றில் 162 எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை சேர்த்து விசாரணை நடத்தலாம். இது பற்றி மத்திய அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் எனக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: