ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஒன்றன்பின் ஒன்றாகத் தடைசெய்து நரவேட்டையாடிய காலகட்டத்தில்,

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (18)
18. தோழர் விவேகானந்தன் பற்றி மேலும் சில வார்த்தைகள்
vivekananthan5எனது இந்தக் கட்டுரைத் தொடரில் என்.எல்.எப்.ரி (NLFT) – பி.எல்.எப்.ரி (PLFT) இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் அன்ரன் என அழைக்கப்படும் சாரங்கபாணி ஐயர் விவேகானந்தன் பற்றிக் குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அவர் அரசியலுக்குள் (தமிழ் தேசியவாத அரசியல் என்றும் குறிப்பிடலாம்) பிரவேசித்த காலத்திலிருந்து என்னுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த ஒருவராவார். அவர் மட்டுமல்ல ஏறத்தாழ அவரது குடும்பத்தினர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் என்னுடன் உறவாடியவர்கள்தான்.

இரண்டாவது காரணம், அவர் போன்ற தன்னலம் கருதாத அரசியல் ஊழியர்கள்தான், உண்மையான மக்கள் சேவகர்கள் என்ற தகுதிக்கு உரித்தானவர்கள்.

புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை ஆரம்பகால உறுப்பினர்களைத் தவிர ஏனையோர் பலவந்தமாக அந்த இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள். ஆதலால் அவர்கள் வேண்டாவெறுப்பாகவும், நிர்ப்பந்தத்தின் பெயரிலுமே அங்கு செயல்பட்டார்கள். அவர்களது அரசியல் தரமோ தார்மீகத் தரமோ உயர்வானதல்ல. அவர்கள் தாம் சார்ந்திருந்த இயக்கம் பற்றி என்ன கருதினார்கள் என்பதை, இறுதி யுத்த நேரத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து, பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு, திரும்பவும் தங்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டு வரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கேட்டால் தெரியும்.


அவர்களது உள்ளத்தில் தமது இயக்கத்துக்கு எதிராகக் குமுறிக் கொண்டிருந்த எரிமலையை, நான் அவர்களது சித்திரவதை முகாம்களில் இருந்தபோது சந்தித்த சில புலி உறுப்பினர்கள் மூலம் அறிந்திருந்த போதிலும், தற்பொழுது புனர்வாழ்வு பெற்று வெளியே வரும் ஆயிரக்கணக்கானவர்கள் மூலம் சாதாரண தமிழ் மக்களும் அந்த உண்மையை அறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களது வாயைப் புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளோ அல்லது தாயத்தில் பதுங்கி வாழும் புலிகளோ இனிமேலும் அடைத்துவிட முடியாத சூழல் இன்றுள்ளது.

புலி உறுப்பினர்களின் அல்லது எந்தவொரு தேசியவாத அரசியல் சக்திகளின் அரசியல் தராதரத்தை ஒப்பீடு செய்கையில், அன்ரன் போன்றவர்களின் தரம் மிகவும் வித்தியாசமானது. அன்ரன் தனது சிநேகிதர்கள் சிலரின் தொடர்பால் தானாக விரும்பி என்.எல்.எப்.ரி (NLFT) என்ற இயக்கத்துக்கு வந்தவர். உண்மையில், ஆரம்ப காலகட்டத்தில் வடபகுதியில் இருந்த தமிழ் இளைஞர்கள் சாரிசாரியாக பல்வேறு இயக்கங்களில் தம்மை இணைத்துக்கொண்டது போன்ற நேரடிக் காரணிகள் எதுவும் அன்ரனுக்கு இருக்கவில்லை.

உடுவில் கிராமத்தைச் சேர்ந்த அன்ரன், மிகவும் ஆசாரமான ஒரு பிராமண சமூகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1957 ஆண்டு செப்டம்பர் மாதம் 16ந் திகதி பிறந்த இவர், ஆரம்பத்தில் சுன்னாகம் ஸ்கந்தவரோயக்கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் அவரது தகப்பனார், சாரங்கபாணி ஐயர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வேண்டியிருந்ததால்,  இளம்பிராயத்திலிருந்து கண்டியில் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டதுடன், அங்கு பிரபலமான கல்லூரியான சில்வெஸ்டர் கல்லூரியில் உயர்தர வகுப்புவரை கல்வி கற்றார். அங்கு கல்வி கற்ற காலத்தில் சிங்கள – முஸ்லீம் – மலையக மாணவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. வடபகுதி மாணவர்களுக்குக் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு அன்ரனுக்குக் கிடைத்ததால், அவரது பார்வை யாழ்ப்பாணத்தில் இருப்பது போன்ற, குறுகிய மூடுண்ட நிலையிலிருந்து விடுபட்டு விசாலமாவதற்கு வாயப்பு உருவானது. அதன் காரணமாக சாதாரண வடபகுதி இளைஞர்களுக்கு ஏற்பட்டது போன்ற தீவிர தமிழ்த் தேசியவாத உணர்விலிருந்து விடுபட்ட நாடாளாவிய தேசிய உணர்வு அவரிடம் வளர்ந்து வந்தது.

தமிழ் இனவாத அரசியல்வாதிகளால் ஊட்டப்பட்டு வந்த தமிழ் இனவெறிச் சிந்தனைகள் மட்டுமின்றி, வடக்கு சமூகத்தில் நிலவிய சுத்த சுயம்புவான, பிறருடன் இணைந்து வாழ விருப்பமில்லாத, தனி தமிழ் இனத்துவ சூழலும், அங்குள்ள மக்கள் எங்கு போனாலும் தம்மை பிறரிடமிருந்து பிரித்து ஒதுக்கி வாழ்வதற்கு ஒரு காரணமாகும். இந்த ‘யாழ்ப்பாணிய’ மனோபாவம் காரணமாகவே அங்குள்ள மக்களுக்கு கிழக்கு மாகாண மற்றும் வன்னி தமிழ் மக்களைக்கூட குறைவாகக் கணிக்கும் ஒரு மனோபாவத்தை உருவாக்கியது. அவ்வளவு தூரம் ஏன் போவான்? யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்ளேயே தாழ்த்தப்பட்ட மக்களை நவீன அடிமைகளாக நடாத்தியது மட்டுமின்றி, முஸ்லீம்களையும், இந்திய வம்சாவளி தமிழர்களையும், தீவுப்பகுதி மக்களையும், தென்மராட்சி மற்றும் பச்சிலைப்பள்ளி மக்களையும் (குழைக்காட்டார் என) கூட இழிவுடன் நோக்கிய நிலையும் இருந்தது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், அன்ரன் போன்ற ஒருவர் அதிலிருந்து விடுபட்டு வாழ்ந்தமை ஒரு மாபெரும் விடயமாகும். இப்பொழுது திரும்பிப் பார்க்கையில் அவருடைய அந்தத்தன்மைதான், அந்தக் காலகட்டத்தில் மிகவும் தீவிரமானதும், அளவில் பெரியதுமான தமிழ் தேசியவாத இயக்கங்கள் பல இருந்தும்கூட, அன்ரனை என்.எல்.எப்.ரி போன்ற மிகச்சிறிய இடதுசாரி அடிப்படையிலான ஒர் இயக்கத்தை நோக்கிப் போக வைத்தது என்பது புரிகிறது.

அவர் 1980 ஆண்டளவில் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரியில் படிப்பதற்கு அனுமதி கிடைத்து கண்டியைவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிவந்து, தனது சொந்த ஊரான உடுவில் கிராமத்திலுள்ள மல்வம் பகுதியில் வாழத்தொடங்கினார். (மல்வத்தில் அவர்களது வீட்டுக்கு அருகாமையிலிருந்த பழமை வாய்ந்த வயிரவர் கோவில் அவர்களுக்குச் சொந்தமானது) வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரியில் கல்விகற்ற அன்ரன் பின்னர், வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரியின் மின்னியல் - இலத்திரனியல் பிரிவில் ஆசிரியராகவும் இருந்தார்.

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய அன்ரன், தனது ஆசிரியப்பணி நேரம்போக, என்.எல்.எப்.ரி இயக்கத்துடன் இணைந்து - மத்தியகுழு உறுப்பினராக - முழுநேரமாக அரசியல் பணிகளை செய்யத் தொடங்கினார். ஆனால் அதற்கு முன்னர் அவர் கண்டியிலிருந்த போதே, தன்னுடன் கல்வி கற்ற இன்று இங்கிலாந்தில் டாக்டராகப் பணிபுரியும் தோழர் பாலா மூலமாக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் தொடர்புகளைப் பெற்றிருந்தார். அத்துடன் என்.எல்.எப்.ரி (NLFT) – பி.எல்.எப்.ரி (PLFT) என்பனவற்றின் முன்னணி உறுப்பிரான மனோரஞ்சன் அவர்களும் அன்ரனின் பள்ளித்தோழன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலகட்டத்தில் பேராதனை பல்கலைக்கழக எந்திரவியற்பீடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த தோழர் விசுவானந்ததேவனே இவர்கள் மூவரையும் இத்தகைய ஒர் அரசியலுக்குக்; கொண்டு வந்த பிரதான பாத்திரத்தை வகித்தவர்.

அன்ரன் யாழ்ப்பாணம் வந்து வாழத் தொடங்கிய பின்னரே அவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது. அவருடன் மட்டுமின்றி, யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்த அவருடைய அண்ணனான மூர்த்தியுடனும் (அவைக்காற்று கலைக்கழகத்தின் நாடகக்கலைஞன்) எனக்கு நட்பு ஏற்பட்டது. அதன் காரணமாக நான் அவர்களது உடுவில் வீட்டுக்கு சில தடவைகள் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டதினால், ஆசிரியையாகப் பணிபுரிந்த அவரது தங்கை மற்றும் தாயாருடனும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவரது தாயார் எப்பொழுதும் என்னை மிகவும் வாஞ்சையுடன் வரவேற்று, தனது பிள்ளைகளில் ஒருவர் போல உபசரித்ததை என்றும் மறந்துவிட முடியாது.

அன்ரனைப் பொறுத்தவரை, வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கும் சிலரைப் போல, ஆரவாரம் பண்ணும் ஒர் இயக்க ஊழியரல்ல. அவர் மிகவும் அமைதியானவர் என்பதுடன், மற்றவர் கருத்தை மிகவும் பொறுமையாகவும் பொறுப்புடனும் செவிமடுப்பவர். மற்றவர்கள் கூறும் கருத்துடன் தனக்கு உடன்பாடு இல்லாவிடினும் எடுத்தெறிந்து பேசாதவர். எல்லோருடனும் அன்னியோன்யமாகப் பழகுபவர். அதேநேரத்தில் தனது கருத்துச் சரியானதென்றால், அதில் மிகவும் உறுதியாக இருப்பார். அவரது இயக்கத்தில் தமிழ் தேசியவாத அலை காரணமாக உள்வாங்கப்பட்டு, அதன் அடிப்படையில் செயற்பட்டவர்கள் சிலர் போலல்லாது, இந்தத் தேசியவாதப் போராட்டத்தை என்ன நோக்கத்துக்காக இடதுசாரிப் புரட்சிகர சக்திகள் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.

தோழர் விசுவானந்ததேவன் எடுத்த முயற்சிகளால், அந்த இயக்கத்திலிருந்த அநேகமான உறுப்பினர்கள் மார்க்சிய தத்துவத்தை ‘கொஞ்சமாக’ அல்லது ‘அற்பசொற்பமாக’ கற்றபோதிலும், பிற்காலத்தில் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு, சில வேளைகளில் வரட்டு மார்க்சியவாதிகளாகவும், சில வேளைகளில் அப்பட்டமான தமிழ் தேசியவாதிகளாகவும் மாறிய அபத்தம் நிகழ்ந்தது. இவர்களில் சிலர் மார்க்சியத்தில் மயிர் பிளக்கும் விவாதங்களை நிகழ்த்தியவர்கள். மார்க்ஸ் உயிருடன் இருந்திருந்தால், அவருக்கும் இவர்கள் மார்க்சிசம் பற்றிப் போதித்திருப்பார்கள்.

இந்த அதிதீவிரப் ‘புரட்சியாளர்கள்’ பின்னர் மறு கோடிக்குத் தாவி, புலிகளை தேசிய விடுதலைவாதிகளாக ஏற்று, அவர்களுடன் ஐக்கிய முன்னணி அமைக்கும் முயற்சிகளிலும் இறங்கி, தமது உறுப்பினர்கள் பலரை புலிகளுக்கு இரையாக்கிவிட்டு, நாட்டை விட்டு ஓடி, புலம்பெயர் தேசங்களில் இன்னமும் புலிப் புராணம் பாடிய வண்ணம் இருக்கின்றனர். ஆனால் அன்ரனைப் பொறுத்தவரை தன்னைப் பெரும் மார்க்சிசப் பண்டிதனாகக் காட்டிக்கொள்ளாவிட்டாலும், தான் கற்றறிந்த குறைந்தளவான மார்க்சிய சித்தாந்தத்தையாவது நடைமுறையில் பிரயோகித்த ஒருவராவார்;

அதனால்தான், என்.எல்.எப்.ரி இயக்கத்தில் தமிழ் தேசியவாதத்தை எவ்வாறு கையாள்வது, அதன் ஊடாக இடதுசாரிப் புரட்சிகர இயக்கமொன்றைத் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு கட்டியெழுப்புவது போன்ற விடயங்களில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அந்த இயக்கம் இரண்டாக உடைந்த போது, அன்ரனும்  கண்டியிலிருந்து இயக்கத்தில் இணைந்துகொண்ட மற்றைய இரு தோழர்களும் விசுவானந்ததேவன் தலைமையிலான சரியான அணியுடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் விசுவானந்ததேவன் தலைமையில் பி.எல்.எப்.ரி (PLFT) என்ற இயக்கம் உருவான போது, அதில் மத்தியகுழு உறுப்பினராகி அன்ரன் முக்கியமான பொறுப்புகளை ஏற்றார். சில அரசியல் வேலைகளின் நிமித்தம் தோழர் விசுவானந்ததேவன் தமிழகத்தில் சிலகாலம் தங்கியிருந்தபோது, அன்ரனே உள்நாட்டில் இயக்க வேலைகளுக்கு பெரும் பொறுப்பாக இருந்து செயல்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அன்ரன் அடிக்கடி என்னைச் சந்தித்து அரசியல் நிலவரங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடுவது ஒரு வழக்கமாக இருந்தது. தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்.எல்.எப்.ரி (NLFT) ஆக மாற்றப்பட்ட பின்னர், அந்த இயக்க உறுப்பினர்கள் எமது கட்சி அங்கத்தவர்களை ‘பிரயோசனமற்றவர்கள்’ என்ற கண்ணோட்டத்துடனேயே நோக்கி வந்தனர். தோழர் விசுவானந்ததேவன் கூட அவ்வாறுதான் நடந்து கொண்டார். ஆனால் அந்தக் காலகட்டத்திலும்கூட, அன்ரன் என்னுடனும் தோழர் வி.ஏ.கந்தசாமி போன்ற கட்சித் தோழர்களுடனும் அன்னியோன்யத்துடனேயே நடந்து கொண்டார் என்பது அவரது சிறப்பியல்புகளில் ஒன்று.

அன்ரனது திருமணம்கூட புரட்சிகரமான ஒன்றாகவே இருந்தது. சாதி அமைப்பு மிகவும் இறுக்கமான யாழ்ப்பாணத்தில், தனது இயக்கத் தொடர்புகள் மூலம் இணுவிலில் அறிமுகமான பெண்ணுடன் ஏற்பட்ட காதலை நிதர்சனப்படுத்தும் முகமாக, அவரையே மனமுவந்து திருமணம் செய்துகொண்டார். அவரது குடும்பத்தினர் தமது சமூகக் கட்டுப்பாடு மற்றும் ஆசாரங்கள் காரணமாக அந்தத் திருமணத்தில் பங்குபற்றாவிடினும், அன்ரன் தனது நிலைப்பாட்டில் தடம் புரளாது உறுதியாக நின்று தனது காதலியை உவகையுடன் கரம் பிடித்தார். நானும் பல தோழர்களும் அன்ரனது திருமணத்தில் கலந்து கொண்டோம். ஆனால் பின்னாளில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அன்ரனின் கொள்கைப்பிடிப்பை உணர்ந்தும், அவர் மீது உள்ள பாசம் காரணமாகவும் அவருடனும் அவரது குடும்பத்துடனும் தொடர்புகளைப் பேணினர்.

புலிகள் ஏனைய இயக்கங்கள் எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகத் தடைசெய்து நரவேட்டையாடிய காலகட்டத்தில், அநேகமான இயக்கங்களின் உறுப்பினர்கள் தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாடுகளுக்கும், தென்னிலங்கைக்கும் தப்பியோட வேண்டிய சூழல் உருவானது. அதற்கு முன்னதாக தோழர் விசுவானந்ததேவன் 15.10.1986 இல் இந்தியாவுக்கு வள்ளம் ஒன்றில் பயணிக்கையில் காணாமற் போயிருந்தார். அவருடன் அந்த வள்ளத்தில் பயணம் செய்த இருபதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்தும்கூட, ஒருவருடைய சடலம்கூட எங்கும் கரையொதுங்கவில்லை. அவர்கள் எவ்வாறு காணாமற் போனார்கள் என்பதற்கு இன்றுவரை எவ்வித தடயங்களும் இல்லாவிடினும், அவர்கள் புறப்பட்ட நேரத்தில் கரையூர் கடற்கரையில் நடைபெற்ற சில சம்பவங்களை வைத்துப் பார்க்கையில், புலிகளே அவர்களைக் கடத்திச் சென்று கொலை செய்து எங்காவது புதைத்திருக்கலாம் என்பது உறுதியாகின்றது. (இப்பொழுது இலங்கை அரசாங்கத்திடம் சரணடைந்து காவலில் இருக்கும் முக்கியமான புலி உறுப்பினர்கள்தான் இதுபோன்ற விடை காணாத பல புதிர்களுக்கு விடையுதிர்க்க வேண்டும்)

ஆனால், இந்தக் காலகட்டத்தில் மற்றவர்களைப் போல யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிடாமல், வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரியின் ஆசிரியப்பணியை தொடர்ந்தவாறு, அவரது மனைவியின் குடும்பத்தாருடன் அன்ரன் இணுவிலில் தங்கியிருந்தார். 1990ல் யாழ்ப்பாண கோட்டை யுத்தம் நடைபெற்ற காலத்தில், நான் இடம்பெயர்ந்து தென்மராட்சியில் மீசாலையில் தங்கியிருந்த காலத்தில், அன்ரன் இணுவிலிலேயே தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அந்த நாட்களில் நான் தினசரி சைக்கிளில் மீசாலையிலிருந்து திருநெல்வேலியிலுள்ள (யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னாலிருந்த) எனது கடைக்கு சென்று வருவது வழக்கம். அந்த நேரத்தில்தான் அன்ரனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது. அவர் அந்த நேரத்தில் பெரும்பாலான நாட்கள் எனது கடைக்கு வந்து அளவளாவிச் செல்லத் தவறுவதில்லை.

நான் அன்ரனுடன் அளவளாவிய அந்த இனிய நாட்கள்தான் கடைசி நாட்களாக இருக்கும் என எண்ணியிருக்கவில்லை. இருந்தாலும் அவருடைய பாதுகாப்புப் பற்றிய ஒர் அச்சமும் கவலையும் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஏனெனில் அவருடைய இயக்கத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு பாதுகாப்பு நிமித்தமாக வெளியேறியிருந்த ஒரு சூழலில், அவர் மட்டும் (அதுவும் முக்கியமான நபராக இருந்தும்) வெளியேறாமல் இருந்தது புத்திசாலித்தனமாக எனக்குத் தெரியவில்லை. நான் இதுபற்றி அவரிடமும் நேரடியாகப் பிரஸ்தாபித்தேன். ஆனால் அவர் தனது பாதுகாப்புப் பற்றி பாரதூரமாக கருத்தில் எடுக்கவில்லை.

அன்ரன் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாமல் இருந்ததை, அவரது உறுதிப்பாடு என்று பார்ப்பதைவிட, அது அவரது பாரதூரமான தவறு என்றுதான் நான் இன்னமும் எண்ணுகிறேன். அன்ரன் கைதுசெய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலுக்கு முன்பாக வைத்து பி.எல்.எப்.ரி (PLFT) யின் இன்னுமொரு முன்னணி நபரான ஞானம் அல்லது ரமணன் என்றழைக்கப்படும் ரஜீஸ் அந்தோனிப்பிள்ளை புலிகளால் அலாக்காக தூக்கிச்செல்லப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தின் பின்னர் அன்ரன் நிட்சயமாக எச்சரிக்கையடைந்து தனது இருப்பிடத்தை மாற்றியிருக்க வேண்டும். மேலும் அவரது இயக்கத் தோழர்கள் அவரை அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்திய பின்னரும், அவர் அவ்வாறு செய்யாது விட்டது அவரது மாபெரும் தவறு. ஏனெனில் நாம் செயற்படுகிறோமோ இல்லையோ புலிகளைப் பொறுத்தவரை தமக்கு எதிரானவர்கள், எதிராக வரக்கூடியவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என்பதே அவர்களது சித்தாந்தம். அதுவே அன்ரன் விடயத்திலும் நடந்தேறியது. (பின்னர் அவர்கள் என்னைப் போன்றவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை)

அன்ரன் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறியதால், அநியாயமாக அவரது உயிரைப் புலிகளிடம் பறி கொடுத்ததுமல்லாமல், அவரது இளம் மனைவியும் கைக்குழந்தையும் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையும் ஏற்பட்டது. இந்த விடயத்தில் அன்ரனை கறாரான முறையில் அங்கிருந்து வெளியேற வைப்பதில், தோழர் விசுவானந்தேவனின் மறைவிற்கு பின்னரான அவரது இயக்கத்தின் தலைமையும் தவறிழைத்துவிட்டது என்றுதான் கருதுகிறேன்.

10.09.1990 அன்று நள்ளிரவில் செங்கதிர் தலைமையில் வந்த புலிகளால் இணுவிலில் வைத்து அன்ரன் கைதுசெய்யப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் (1990 ஆண்டு செப்டம்பர் மாதம் பிற்பகுதி என்று நினைக்கிறேன்) நான் மீசாலையிலிருந்து சைக்கிளில் அவருடைய உடுவில் வீட்டுக்குச் சென்றேன். அப்பொழுது அது மிகவும் ஆபத்தான ஒரு விடயம். ஏனெனில் அன்ரனை கைதுசெய்த புலிகள், அவரது வீட்டுக்கு யார் யார் வந்து போகிறார்கள் என நிச்சயம் வேவு பார்ப்பார்கள். அத்தோடு அந்த நேரத்தில் யாழ் கோட்டையை புலிகளிடம் இழந்து பின்வாங்கியிருந்த இலங்கை இராணுவம், மிகவும் மூர்க்கமான முறையில் யாழ் குடா நாடெங்கும் சரமாரியாக விமானக் குண்டு வீச்சுகளை நடாத்திக் கொண்டிருந்தது. இருந்தும் மனம் கேளாமல், எனது சில தோழர்களின் ஆலோசனையையும் பெற்று அவர் வீட்டுக்குச் சென்றேன்.

நான் உடுவிலுக்கு அன்ரன் வீடு நோக்கி சென்றபோது வீதிகள் வெறிச்சோடி, சன நடமாட்டமின்றி இருந்தது. எங்கும் மயான அமைதி நிலவியது. நான் அவரது வீட்டுக்கு வெளியே நின்று அன்ரனது வீட்டாரை அழைத்த போது, நீண்ட நேரத்தின் பின்னர் அவரது தாயார் மிகவும் பயத்துடன் எட்டிப் பார்த்தார். அவர் என்னை இனங்கண்டதும் அழுதபடி கேற்றடிக்கு வந்தார். என்னை உள்ளே அழைக்க அவர் பயந்தார். நானும் அந்தச் சூழ்நிலையில் அங்கே போக விரும்பவில்லை. அப்பொழுது இலங்கை இராணுவத்தின் ஹெலி ஒன்று வானில் சுற்றிக் கொண்டிருந்தது.

அவர்கள் வீட்டு வாசலில் நின்ற நிழல் மரவள்ளி மரமொன்று பாதுகாப்பாக இருந்ததால், நான் சுமார் அரைமணி நேரம் அதன் கீழ் நின்று அன்ரனின் தாயாருடன் உரையாடினேன். அன்ரனை கைதுசெய்த பின்னர் புலிகள் உடுவிலுள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கும் சென்று, அங்குள்ளவர்களையும் விசாரணை செய்துள்ளனர். அத்துடன் வீடு முழுவதையும் சோதனை செய்ததுடன், வீட்டுக்கு முன்னால் இருந்த பூச்செடிகளின் அடியில் நிலத்தைத் தோண்டியும் பார்த்துள்ளனர். இருந்தும் புலிகளால் தமக்குத் தேவையான தடயமொன்றையும் அங்கு பெற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அன்ரனின் தாயாருக்கு ஆறுதல் கூறிவிட்டு மீசாலை திரும்பினேன்.

நான் அடுத்த ஆண்டு (1991 டிசம்பர் 26) புலிகளால் கைதுசெய்யப்பட்ட பின்னர், இந்த வதைமுகாமில் சற்று நேரத்துக்கு முன்னர் அன்ரனைக் காணும் சந்தர்ப்பம் ஏற்பட்ட போது, ஆச்சரியம், மகிழ்ச்சி, துக்கம் எனப் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளானேன். அதன் பின்னர் அவரை ஒருபோதும் நான் சந்திக்கவில்லை. ஆனால் நான் புலிகளின் வதைமுகாமிற்குள்ளே இருந்த காலத்தில் அன்ரன் பற்றி மேலும் சில தகவல்களை அறிந்தேன். அவை பற்றிப் பின்னர் எழுதுவேன். பின்னைய காலங்களில் நான் விடுதலையாகி வந்த பின்னர் அன்ரனின் மனைவியையும் மகனையும் பல தடவைகள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

தொடரும்

கருத்துகள் இல்லை: