வெள்ளி, 20 டிசம்பர், 2024

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுல் காந்தியை தடுத்து தள்ளிவிட்ட பாஜக எம்பிக்கள்!

tamil.oneindia.com  -Mathivanan Maran ; டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற தம்மை பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
ஆனால் ராகுல் காந்திதான் தம்மை தடுத்து தள்ளிவிட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி புகார் கூறினார்.
அத்துடன் படுகாயம் ஏற்பட்டதாக கூறி பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி, வீல்சேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.     நாடாளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பாக பாஜக எம்பிக்கள் ஒன்று திரண்டு, அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது; அவமானப்படுத்துகிறது என குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் நீல நிற உடை அணிந்திருந்தனர். இதனையடுத்து நாடாளுமன்றத்துக்குள் ராகுல் காந்தி செல்ல முயன்றார். அப்போது பாஜக எம்பிக்கள் அவரை சிலர் தடுத்து நிறுத்தினர்.

 இதனால் அங்கு பதற்றமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கி காயமடைந்தார். அவர் வீல்சேரில் அமர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது தொடர்பாக பிரதாப் சாரங்கி எம்பி கூறுகையில், ராகுல் காந்திதான் தம்மை கீழே தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் ராகுல் காந்தியோ, நாடாளுமன்றத்துக்குள் நுழைய இருப்பது ஒரு வழிதான்.. அந்த வழியே செல்லவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டனர். அரசியல் சாசனத்தையே தாக்குகிறவர்கள் எங்களை தாக்குகின்றனர்; இது எங்களுக்கு பிரச்சனை அல்ல. அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்றார்.

அமித்ஷா விவகாரத்தில் நடந்தது என்ன?

ராஜ்யசபாவில் அமித்ஷா பேசியது...

Recommended For You

ராஜ்யசபாவில் அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் சொர்க்கம் கிடைக்கும் என அமித்ஷா பேசியதால் இந்த சர்ச்சை வெடித்தது.

நாடாளுமன்றம் முடக்கம்

அமித்ஷாவின் இத்தகைய விமர்சனத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்தை நேற்றம் இன்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடக்கி உள்ளனர். அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்; அமித்ஷாவை பிரதமர் மோடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர்.

#WATCH | TDP MP Appalanaidu Kalisetti meets BJP MP Mukesh Rajput at RML Hospital. He is admitted here after sustaining injuries during jostling with INDIA Alliance MPs.

(Video Source: Appalanaidu Kalisetti) pic.twitter.com/NYS8ZrSNca

— ANI (@ANI) December 19, 2024

You May Also Like

பிரதமர் மோடி விளக்கம்

ஆனால் இது தொடர்பாக விளக்கம் அளித்த பிரதமர் மோடி, அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், தலித் பழங்குடி சமூகங்களை அவமானப்படுத்தவும், ஒரு குடும்பத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி எல்லாவிதமான கேடுகெட்ட தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள். அம்பேத்கரை அவமதித்து தலித் பழங்குடி சமூகங்களைப் புறக்கணித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றைதான் அமித்ஷா அம்பலப்படுத்தினார். அதனால்தான் அவர்கள் இப்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள் என கூறியிருந்தார்.

காங்கிரஸ் பிடிவாதம்

காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, நரேந்திர மோடிக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது கொஞ்சமாவது மரியாதை இருந்தால்...அமித் ஷாவை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என கெடு விதித்திருந்தார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜக மற்றும் அதன் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இவர்கள் அம்பேத்கர் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள். அரசியல் சட்டத்தையும், அம்பேத்கர் செய்த பணியையும் அழிப்பது மட்டுமே இவர்களின் வேலை. இது நாடு முழுவதும் தெரியும் என்றார்.

அமித்ஷா விளக்கம்

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர் அமித்ஷா மறுத்திருந்தார். தாம் அம்பேத்கரை இழிவுபடுத்தவில்லை; தாம் பதவியை ராஜினாமா செய்யவும் போவது இல்லை; ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் என் பேச்சை காங்கிரஸ் திரித்துக் கொண்டிருக்கிறது எனவும் அமித்ஷா விளக்கம் அளித்து இருந்தார்.

கருத்துகள் இல்லை: