மின்னம்பலம் - christopher : முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் தமிழகத்தில் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஆட்சிக்கு வந்து திமுக அரசு செயல்படுத்திய “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் முதலான சீரிய திட்டங்கள் மூலம் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.
மாநிலத் திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திட்டக்குழுவின் அலுவல் சார் துணை தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் ஆகியோர் இணைந்து தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினர்.
1. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்
அரசுப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எனும் முதன்மைத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. தற்போது 2024-25 நிதியாண்டு முதல் 4154 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினால், மாணவர்களின் வருகையிலும், கற்றலில் ஈடுபாட்டையும், மேலும் இத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களையும் கண்டறிய மாநில திட்டக் குழு விரிவான திட்டத்தின் தாக்க மதிப்பீடு ஆராய்வை மேற்கொண்டது. இவ்வாராய்வில் ஊரக நகர்ப்புறப் பகுதிகளிலுள்ள 100 பள்ளிகளும், 5410 பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.
இவ்வாய்வின் வாயிலாக கிடைத்த சில முக்கிய தகவல்கள்:
• மாணவர்களின் வருகை விகிதம் பாலினம் மற்றும் வாழ்விடம் பாகுபாடின்றி குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
• தாமதமாக காலை 9 மணிக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சமூக-பொருளாதார பாகுபாடின்றி குறைந்துள்ளது.
• மாணவர்கள் நோய்வாய்ப்படுவதும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் குறைந்துள்ளது.
• வகுப்பறை செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபடுவதும், கற்றல் திறனில் மேம்பாடும், கல்வி இணைச் செயல்பாடுகளில் பங்கேற்பதும், விளையாட்டுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதும் அதிகரித்துள்ளது.
• ஆசிரியரின் குறிப்புரைகளைப் பின்பற்றுதல், கவனம் செலுத்துதல் மற்றும் எழுத்துப்பணி முடித்தல் ஆகியவற்றில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
• 90% க்கும் அதிகமான மாணவர்களிடம் வகுப்பில் முந்தைய பாடங்களை நினைவு கூறும் திறன் காணப்படுகிறது.
• மாணவர்களின் எழுத்து, வாசிப்பு மற்றும் பேச்சு திறன்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
• இதற்குமுன் தங்கள் பிள்ளைகள் காலையுணவை உண்ணவில்லையே என்று கவலைப்பட்ட தாய்மார்கள், தற்போது தங்கள் பிள்ளைகள் தாமே ஆர்வமுடன் காலை உணவு சாப்பிடுவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
2. புதுமைப்பெண் திட்டம்
புதுமைப்பெண் திட்டம் குறித்து ஒரு ஆய்வானது மாநிலத் திட்ட குழுவால் ஈரோடு, வேலூர், திருவள்ளூர், சென்னை, சிவகங்கை, தென்காசி, விழுப்புரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 84 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 5095 மாணவியர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு பட்டய படிப்பு, கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் பயிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவியர்களிடம் நடத்தப்பட்டது.
ஆய்வின் முக்கிய நோக்கங்கள்:
திட்டத்தின் செயல்பாடு, சவால்கள், மாணவிகளின் விழிப்புணர்வு நிலை, திட்ட உதவியின் பயன்பாட்டு முறைகள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இடையே புதுமைப்பெண் திட்டம் ஏற்படுத்திய சமூக பொருளாதார தாக்கங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகும்.
இந்த ஆய்வின் சேகரிப்பு, தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டு அளவீட்டு முறைகளையும் உள்ளடக்கியதாகும். இத்திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பயன்களைப் பெறாத மாணவிகள் ஆகியோரிடம் தரவு சேகரிக்க ஒரு விரிவான வினா பட்டியல் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தால் பயனடைந்த கல்லூரி மாணவியர்களிடம் இத்திட்டம் குறித்த குழு விவாதங்களும், வினாப்பட்டியல் அடிப்படையிலான தரவு சேகரிப்பும் நடத்தப்பட்டன. இந்த ஆய்வானது நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவுகள்:
இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களை விட கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். நிதிச்சுமை மற்றும் கல்வி கற்கும் வாய்ப்பினை இழக்கும் நிலை குறித்து கவலை இல்லாமல் கல்வியைத் தொடர கிராமப்புற மாணவிகளை இத்திட்டம் ஊக்குவித்துள்ளது.
இத்திட்டத்தை பெறுவதற்கு சாதி தடை இல்லை எனினும், இத்திட்டத்தின் மூலம் 99.2 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
பயனாளிகளில் மூன்று சதவீதம் பேர் ஒற்றைப் பெற்றோர் அல்லது பெற்றோர் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இது, இத்திட்டம் பல்வேறு வகையில் நலிவடைந்த குடும்பங்களில் ஏற்படும் இடர்களைத் தீர்க்கும் திறன் கொண்டது என்பதைக் காட்டுகிறது.
இத்திட்டம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் பொறியியல் படிப்பில் சேர வழிவகை செய்துள்ளது. 27.6 சதவீத விவசாய தொழிலாளர்களின் பெண் குழந்தைகள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். மேலும், விவசாயம் அல்லாத தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 39.3 சதவீத பெண் குழந்தைகள் பொறியியல் படிப்பில் சேர்ந்து தங்களது கனவை நனவாக்கியுள்ளனர்.
நிதி நெருக்கடி காரணமாக கல்வியை இடை நிறுத்திய மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் மீண்டும் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
ஈரோடு, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வியைத் தொடர்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்வி மூலம் தங்கள் இலக்குகளை அடைய இத்திட்டம் உதவியாக உள்ளது.
45 சதவீதம் பயனாளிகள் அரசு கல்லூரிகளிலும், 28 சதவீதம் சுயநிதி கல்லூரிகளிலும் மற்றும் 21 சதவீதம் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் பயின்று வருகின்றனர். இது, புதுமைப் பெண் திட்டப் பயனாளிகள் அதிகளவு அரசு கல்லூரிகளில் சேர்ந்துள்ளதை காட்டுகிறது.
பயனாளிகளின் பார்வையில் புதுமைப்பெண் திட்டம்
உயர்கல்வி சேர்க்கை :
இத்திட்டமானது, உயர்கல்வியில் சேர்வதற்கு சாதகமாகவும், மேலும் மேற்படிப்பைத் தொடர இது ஊக்கமளிப்பதாகவும் பயனாளிகள் உணர்கிறார்கள்.
கல்விச் செலவினம் :
இத்திட்டமானது, கூடுதல் கல்விச் செலவுகளை எதிர்கொள்ள பயன்படுவதால் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவுவதாகக் கருதப்படுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் :
இந்த திட்டமானது சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் அதிக வருமானத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளதாகவும், நீண்ட கால நிதி நிலைத்தன்மைக்கும் பங்களிப்பதாக பயனாளிகள் நம்புகின்றனர்.
சமூக பொருளாதார மேம்பாடு :
இத்திட்டம் தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஊக்கமாக கருதப்படுகிறது. இளம் வயது திருமணத்தை தவிர்க்கவும், வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.
திட்டத் தொகையின் பயன்பாட்டு முறை :
இத்திட்டம் மூலம் பெறும் நிதியை பயனாளிகள் முதன்மையாக கல்லூரிச் செலவுகளுக்கு 62.3 சதவீதமும், கூடுதல் கல்விச் செலவுகளுக்கு 34.2 சதவீதமும், போக்குவரத்து செலவுகளுக்கு 30.3 சதவீதமும் பயன்படுத்துகின்றனர். மேலும், திருமண சேமிப்பிற்கு 24.1 சதவீதமும், உயர்கல்விக்கு 58 சதவீதமும் பயன்படுத்துகின்றனர். இத்திட்டத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை திருமணத்திற்காகவும் ஒதுக்குகின்றனர். இத்திட்டத் தொகை இளம் பெண்கள் கல்வி மூலம் சமூக பொருளாதார வல்லமை பெறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டம் பெண் குழந்தைகள் உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கிறது.
3. எண்ணும் எழுத்தும் திட்டம்
துவக்கக்கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் “எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் நடைமுறை செயல்பாட்டினை துல்லியமாக ஆய்ந்து, இந்த ஆய்வில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்கான நிர்ணயிக்கப்பட்ட கால அளவு எனும் வழிமுறையை பயன்படுத்தியும், இத்திட்டத்தின் செயல்பாட்டின் மீதான தரவுகளைப் பெற்றும், ஆசிரியர் பயிற்றுநர்களுடன் நேர்காணல்கள் மேற்கொண்டும் , இத்திட்டத்தின் விளைவு இந்த ஆய்வில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள்!
இந்த மதிப்பீட்டாய்வின் முடிவுகளின் வாயிலாக, கல்வி கற்பித்தலுக்கான கல்வித்துறையின் மேலாண்மை சீரற்றதாகவும் பல்வேறு பள்ளிகளிலும் கற்றல் அனுபவத்தை பாதிப்பதாகவும் உள்ளது அறியப்படுகிறது. இத்திட்டமானது பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், நடைமுறையில் சில சவால்களும் உள்ளன.
குறிப்பாக, ஒன்றுக்கு மேற்பட்ட நிலை (multigrade) கற்பித்தலின்போது, பாடப்புத்தகங்களை பயன்படுத்துவதிலும் மாணவர்களை அவர்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப குழுப்படுத்துவதிலும் சவால்கள் காணப்படுகின்றன. இந்த முன்னெடுப்பிற்கான கற்பித்தல் முறைமையிலும் கால அளவு நிர்ணயிப்பதிலும் நெகிழ்வுத் தன்மை தேவைப்படுகிறது.
இந்த மதிப்பீட்டாய்வின்படி இத்திட்டத்தினை மேம்படுத்துவதற்கான முக்கிய அம்சங்களாக, பாடத்திட்டத்திற்கேற்ப பாடத்திற்கான உள்ளடக்கத்தை சீரமைத்தல், கற்பித்தலுக்கான அணுகுமுறைகள், பயிற்சி கையேடுகளை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவது, ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், நேர மேலாண்மை மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவை கருதப்படுகிறது.
இந்த ஆய்வு, எண்ணும் எழுத்தும் பற்றிய விரிவான மறுஆய்விற்கான அடித்தளத்தை வழங்குகிறது. மற்றும், அதன் செயலாக்கத்தை செம்மைப்படுத்துவதையும் மற்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியின் பயனை அதிகப்படுத்துவதற்கும் அடிப்படையாக அமைகிறது.
“நகர்ப்புற வெப்பத் தீவு-தமிழ்நாட்டின் வெப்பப்பகுதிகளின் பகுப்பாய்வு மற்றும் தணிப்பு உத்திகள்”
தமிழ்நாடு மாநில திட்டக்குழு, தமிழ்நாடு மாநில நிலப் பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம் மூலம், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் CEPT பல்கலைக்கழகத்துடன் இணைந்து, “நகர்ப்புற வெப்பத் தீவு-தமிழ்நாட்டின் வெப்பப்பகுதிகளின் பகுப்பாய்வு மற்றும் தணிப்பு உத்திகள்” என்ற தலைப்பில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற வெப்பத் தீவின் தாக்கம் மற்றும் தமிழ்நாட்டின் வெப்பப்பகுதிகளின் பாதிப்புகள், மக்கள், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மீது அதன் தாக்கம் ஆகியவற்றை இந்த அறிக்கை விரிவாகக் கூறுகிறது.
மாநில திட்டக்குழு தயாரித்த “தமிழ்நாடு வெப்பத் தணிப்பு உத்தி” பற்றியும், அதில் மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளால் பின்பற்றப்பட வேண்டிய வெப்பத் தணிப்பு உத்திகள் பற்றியும் விளக்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் வெப்ப மண்டல வரைபடம் மூலம் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவுகள் பற்றிய விரிவான மதிப்பீட்டை இந்த ஆய்வு முன்வைக்கிறது, வெப்பப்பகுதிகளை அடையாளம் கண்டு, வெப்பநிலை அதிகரிப்பில் நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
எதிர்கால நிலப் பயன்பாட்டுத் திட்டத்திற்கு வழிகாட்ட மாநில மற்றும் மாவட்ட அளவிலான வரைபடங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலான வெப்பநிலை தரவு பகுப்பாய்வில், அதிக கோடை இரவு வெப்பநிலை (24-26 ° C) உள்ள பகுதிகளில் 59% அதிகரிப்பு மற்றும் செயல்திறன் நகரங்களில் இரவு நேர வெப்பநிலையில் 1.5 ° C அதிகரிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
தூத்துக்குடி மற்றும் சென்னை முறையே தீவிர பகல் மற்றும் இரவு வெப்பநிலைக்கு முக்கியமான வெப்பப் பகுதிகளாக உருவெடுத்துள்ளன.
இது மதுரை மற்றும் தூத்துக்குடி பற்றிய விரிவான ஆய்வுகளுடன், குறிப்பாக 11 செயல்திறன் நகரங்களில் மேற்பரப்பு அளவிலான நகர்ப்புற வெப்பத் தீவு பகுப்பாய்வை வலியுறுத்துகிறது.
மரங்களை அதிகரிப்பது, பிரதிபலிப்பு மேற்பரப்புகளை செயல்படுத்துவது மற்றும் பசுமை கூரைகள் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட வடிவமைப்புகளை இணைப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவுகளைத் தணிப்பதற்கான பரிந்துரைகளை அளிக்கிறது.
நகர்ப்புறத் திட்டமிடலில் நகர்ப்புற வெப்பத் தீவு தணிப்பு உத்திகளை ஒருங்கிணைக்க வலியுறுத்துகிறது. பசுமை இடங்களை விரிவுபடுத்துவதன் மூலமும், நீடித்த நிலையான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இயற்கையான குளிரூட்டும் முறைகளை ஊக்குவிப்பதன் மூலமும் வெப்பம் குறைவான ஆரோக்கியமான நகரங்களை உருவாக்கலாம் என பரிந்துரைக்கிறது. மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் வகையில் தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் வெப்ப தாக்கத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை வழங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் முறையை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்
மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல், அதிகரித்து வரும் தனி நபர் வருமானம், நகர்ப்புற வெப்பநிலை உயர்வு ஆகியவற்றால் குளிரூட்டும் உத்திகளுக்கான தேவையை இந்தியா சந்தித்து வருகிறது. இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சி, அங்கு வளர்ந்து வரும் நவீன கட்டிட வடிவமைப்பு, பெருகி வரும் குடும்ப வருமானம் மற்றும் நகர்ப்புறங்களின் வெப்பநிலை உயர்வு இவற்றால் வீட்டிற்கும், அலுவலகங்களிலும் குளிர் சாதனங்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது.
மாநில திட்டக்குழு தயாரித்த தமிழ்நாடு வெப்பத் தணிப்பு அறிக்கையில், தமிழ்நாட்டின், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1961 முதல் 2021 ஆண்டு வரை குறிப்பாக மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலங்களில், வெப்ப அலைகளின் உயர்வும், வெப்ப உயர்வினால் ஏற்படும் துயர்பாடும் மாநிலம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மிதமான வெப்ப மற்றும் குளிர் சூழல் மக்கள் வசிப்பிடங்களிலும் வெப்பம் உமிழும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணி சூழல்களிலும் இருக்கவேண்டும் எனும் நிலையில் இந்த வெப்ப தணிப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதலீட்டாளர்கள் மற்றும் பெரும் வணிக நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் உலக நிதி சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் குளிர்விக்கும் தீர்வுகளை வழங்குபவர்களின் தொழில் வளர்ச்சியினையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2005 மற்றும் 2019 க்கு இடையிலான காலத்தில், மாநிலத்தில், பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் 84% அதிகரித்துள்ளது, இதில் மின்சாரத் துறை மட்டுமே 77% அல்லது 141 மில்லியன் டன்கள் கரியமில வாயு (CO2) பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்திற்கு காரணமாக உள்ளது. எனவே, காலநிலை நடவடிக்கை, நிகர-பூஜ்ஜிய இலக்குகள் மற்றும் காலநிலை மீள்தன்மை இவற்றை அடைவதில் நமது மாநிலம் கொண்டுள்ள இலக்குளில், அதிகரித்து வரும் குளிர்ச்சிக்கான தேவையை எதிர்கொள்ள ஒரு வளங்குன்றா, நேர்த்தியான அணுகுமுறை தேவைப்படுகிறது.
மின்சாரக் கட்டமைப்புச் செலவுச் சுமையை குறைக்கவும், மின்ஆற்றல் சேமிப்பை ஊக்குவிக்கவும் பேரலகு குளிர்விக்கும் முறைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் குளிரூட்டுதலுக்கு மாற்று தீர்வாகக் கருதப்படுகிறது. DCS என்பது மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் அமைப்புகளாகும், அவை குளிர்ந்த நீரை நிலத்தடி வழியாக புதைக்கப்பட்ட குழாய்களின் இணைப்புகள் மூலம் பல கட்டிடங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இந்தக் கட்டிடங்கள் குளிரூட்டப்பட்ட தண்ணீரை குளிர் சாதன வசதி அல்லது தொழில்துறைகளின் குளிரூட்டுதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இது புதைபடிவ எரிபொருள் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு மாற்றாக மரபு சாரா ஆற்றல் மற்றும் கழிவு நீர் போன்றவற்றைப் பயன்படுத்தி குளிரூட்டும் முறையாக உள்ளது. இயற்கை வள விரயம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிதி முதலீடுகள் போன்றவற்றைக் குறைத்து, குறைந்த அளவில் இடப்பரப்பை பயன் படுத்தி திறம்படக் குளிர்விக்க உதவுகிறது.
இந்த அறிக்கை பேரலகு குளிர்விக்கும் முறைகளுக்கான அறிமுகம் அளிப்பதோடு, இதனைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும், தமிழ்நாட்டில் இதற்கான மிகுதியான வாய்ப்புகளையும் எடுத்துரைக்கிறது. இதனை செயல்படுத்தத் தேவையான முக்கியமான நீண்ட கால கொள்கை, வரைமுறைப்படுத்த ஏதுவான சட்டங்கள், நிதி ஆதாரங்கள் , இந்த வடிவமைப்பிற்கான ஒப்புதல் மற்றும் செயல்படுத்துவதில் தொடர்புடைய துறைகளின் செயல்கள் மற்றும் பொறுப்புகள், மேலும் இதனை விரிவாக்கம் செய்ய எதுவாக ஊக்குவிக்கும் உத்திகள் ஆகியவற்றையும் பரிந்துரைக்கிறது.
முதலீட்டாளர்கள் மற்றும் குளிர்விக்கும் தீர்வுகளை வழங்குபவர்களுக்கு உதவுவதையும், இந்த முறையை சந்தைப்படுத்தும் பொருத்தமான வணிக அமைப்பு மற்றும் நிதி நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்வதையும் DCS நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இதனைச் செயல்படுவதற்குச் சவால்களாக, நீண்ட கால தொடர் தரவு இல்லாமை, உள்கட்டமைப்பு வசதிகளான நிலம், தண்ணீர் விநியோக வலையமைப்பு, போதுமான மின் கட்டமைப்பு ஆகிய வசதிகள் இல்லாமை, தகுந்த கொள்கைகள் இல்லாமை போன்றவை தடையாக உள்ளன.
மாநிலத்தில், DCS உத்திகளை நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் ஊக்குவிக்கவும், இம்முறைகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்யவும் ஒரு விரிவான கொள்கை வடிவமைப்பு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் பேரலகு குளிரூட்டும் முறைகளைச் செயல்படுத்துவதற்கான கொள்கை மற்றும் ஒழுங்குமுறையின் தேவையை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. DCS முறைய மேம்படுத்துவதற்காக ஒரு மாநில செயல் திட்டம், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால உத்திகளுடன், தொடர்புடைய துறைகளின் பங்களிப்பினையும் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொள்கை ஆவணங்கள் தயாரிப்பு
தமிழ்நாடிற்கான நிலையான நிலப்பயன்பாட்டு கொள்கை – வரைவு
தமிழ்நாட்டிற்கான நிலையான நிலப் பயன்பாடு கொள்கை வரைவு (SLUP), நில மேலாண்மைக்கு சீரான அணுகுமுறையை அளிக்க ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குவதுடன், மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் உள்ள சவால்களுக்கு தீர்வு அளிக்கிறது. இந்த கொள்கை மாநிலத்தின் நிலப்பயன்பாட்டிற்கான நீண்டகால இலக்குகளுடன் இணைந்து, சுற்றுச்சூழல் மற்றும் வளங்களின் பாதுகாப்பு, சமூக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துகிறது.
நிலப் பயன்பாட்டு கொள்கையானது, நிலத்தை வளர்ச்சி, பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் மாறுதல் பகுதிகள் (Transition Zones) என நான்கு பிரிவுகளாக பிரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு பகுதிகளும் சீரான நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுசூழல் அமைப்பு, வேளாண்மை உற்பத்தி உறுதிப்படுத்தல் மற்றும் வளர்ச்சிகளுக்கான பகுதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட முக்கிய வழிகாட்டுதல்களை அளிக்கிறது. நிலம் மற்றும் வளங்களை திறம்பட பயன்படுத்த உறுதிசெய்வதோடு, விரைவான நகர்ப்புற வளர்ச்சி, காடுகளை அழித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைக்கும் வகையில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது,
இந்த கொள்கை பன்முக அளவிளான நில திட்டமிடலை ஊக்குவித்து, நிலப் பயன்பாடுத் தொடர்பான சிக்கல்களை திறம்பட கையாள அனைத்து அளவிளான நிர்வாக அதிகாரிகளுக்கும் வழிகாட்டுகிறது. நீர் மேலாண்மை, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு நிலையான நடைமுறைகளை உருவாக்குவதை இக்கொள்கை வலியுறுத்துகிறது. நீர் பற்றாக்குறை, பல்லுயிர் இழப்பு மற்றும் சீரற்ற நகர்ப்புற விரிவாக்கம் ஆகியவற்றை சரிசெய்வதில், நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளுடனும் (SDGs) இந்தக் கொள்கை ஒத்திசைகிறது.
தொடர் மதிப்பாய்வுகள் மற்றும் தொடர்புதுறை சார்ந்த கருத்துக்களை பெற்று பங்கேற்பு முறை திட்டமிடல் மூலம், மாநில நிலப் பயன்பாட்டு கொள்கையானது (SLUP) தமிழகத்தை நிலையான வளர்ச்சி, சீரான நிலப் பயன்பாடு மற்றும் மக்களின் சமூக-பொருளாதார உயர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை உறுதிசெய்கிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு கொள்கை 2023
இந்த கொள்கை ஆவணம், தற்போதைய தொழிலாளர் சந்தையின் பல சிக்கல்களை கருத்திற்கொண்டுள்ளது. இவற்றில், படித்த இளைஞர்களிடையே அதிக வேலையின்மை விகிதம் மற்றும் கல்வி, திறன்கள், உத்வேகம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே குறிப்பிடத்தக்க பொருத்தமற்ற தன்மை ஆகியன அடங்கும். கூடுதலாக, தொழிலாளர் சந்தையில் பெண்களின் குறைந்த பங்கு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குள் வேலைவாய்ப்பினை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன.
விவசாயம் சாராத வேலை வாய்ப்புகளில் மாவட்ட அளவிலான ஏற்றத்தாழ்வுகள் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் நிச்சயமற்ற விளைவுகளும், வரைமுறையற்ற சர்வதேச இடம்பெயர்வுகள் சார்ந்த சிக்கல்களுக்கும், இக்கொள்கை பொருத்தமான தீர்வுகளை வகுப்பதற்கான முக்கிய சவால்களை முன் நிறுத்துகிறது.
உற்பத்தி திறன் சார்ந்த வேலைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான 10 ஆண்டு செயல் திட்டம், சராசரி வருவாயை உயர்த்துவதற்கும் பொருளாதாரத்தின் துரிதமான வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதற்கும் முக்கியமானதொன்றாகும். பொருளாதாரத்தில் மொத்த தொழிலாளர்களின் முதன்மை பணி வயது (20-59) தொழிலாளர்களின் விகிதத்தை பராமரிப்பதற்காக, 20 வயது முதல் 59 வயது வரை உள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பு விகிதத்தினை 2031-32 ஆண்டில் 73 சதவீதமாக உயர்த்துவதை குறிக்கோளாக இக்கொள்கை கொண்டுள்ளது.
பெண்களின் வேலைவாய்ப்பு விகதத்தை, குறிப்பாக 20 வயது முதல் 29 வயது வரை உள்ள இளம் பெண்கள் மற்றும் இளம் வயது ஆண்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை 2031 32ஆம் ஆண்டுக்குள் 78 விழுக்காடாக உயர்த்துவதற்கு மொத்த வேலைவாய்ப்பு விகிதத்தை உயர்த்துவது அத்தியாவசியமாகிறது.
விவசாயம் சாராத, தொழில் மற்றும் சேவைத் துறையின் பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் வேலைவாய்ப்பு உருவாக்குவது படித்த, பணிக்கான உத்வேகம் கொண்டுள்ள இளைஞர்களுக்கான தேவையானதொன்றாகும். இருப்பினும், குறைந்த திறன், அதிக தொழிலாளர் தேவையுள்ள பணிகள், மற்றும் குறிப்பாக தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளிட்டவைகள் புறக்கணிக்க இயலாததாகும்.
பள்ளி நேரத்திற்கு பிந்தைய பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பெறத்தக்க விலையில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்டு, சீரிய முறையில் செயல்படுத்தப்படுவதன் மூலம் பணிக்கு செல்லும் வயதுடைய பெண்கள் வேலைவாய்ப்பு இல்லாத காலத்தில் பணிக்கு செல்வதை ஊக்குவிக்கும்.
பள்ளிக்கு முந்தைய குழந்தைப் பருவத்தினருக்கான பராமரிப்பினை அதிகரிப்பது, பள்ளிக் கல்வி, மற்றும் பள்ளிக்குப் பிந்தைய பயிற்சி முறைகளை மேம்படுத்துதல், இது தொடர்பான இதர சவால்களையும் தீர்ப்பது, விமர்சன சிந்தனை, ஒருங்கிணைப்பு சிந்தனை மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் அளிப்பதும் அவசியமாகும்.
வேகமாக மாறிவரும் பணி சூழ்நிலையில் இளைஞர்கள் பணிக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். மற்றும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தொழிலாளர் சந்தையில் நடுத்தர மற்றும் மேல்நிலைப் பணிகளில் சேருவதை உறுதி செய்ய வேண்டும்.
இத்தகைய முக்கியத்துவம் சார்ந்த அம்சங்களுக்கான தீர்வுகளை முன்வைப்பதன் மூலம், தமிழ்நாட்டின் அனைத்து பிரிவு இளைஞர்களுக்கும் நீடித்த வேலைவாய்ப்பினை உறுதி செய்வதுடன் விரைவான உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநில நீர்வளக் கொள்கை – வரைவு
மாநிலத் திட்டக் குழுவால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில நீர்வள வரைவுக் கொள்கை, இம்மாநிலம் சார்ந்த நீர் மேலாண்மை இடர்பாடுகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதோடு, அடிப்படை மனித உரிமையான அனைவருக்கும் பாரபட்சமற்ற வகையில் சுத்தமான நீர் கிடைப்பதை உறுதிசெய்வதற்கான உத்திகளை பரிந்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்டுத்துதல், நீர் பயன்பாட்டு திறன் மற்றும் நீர் உற்பத்தித்திறனை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுடன், இந்தக் கொள்கை நீர் வள மேலண்மைக்கு ஒரு முழுமையான அணுகுமுறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நியாயமான நீர் ஒதுக்கீட்டின் மூலம் தேவை விநியோக இடைவெளியைக் குறைப்பதற்கான நிலையான உத்திகள், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்ச நீர் நுகர்வுடன் விவசாய உற்ப்பத்தித்திறனை அதிகரிக்க புதுமையான நுட்பங்கள், ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மையை பின்பற்றுதல் மற்றும் நீர் மாசுபாடு, விவசாயம்-நீர்-எரிசக்தி இணைவு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல் ஆகியவற்றை இக்கொள்கை முன்மொழிகிறது. மேலும், தமிழ்நாடு நீர்வள ஆதார ஆணையம், நீர் கொள்கை ஆராய்ச்சி மையம் மற்றும் ஒருங்கிணைந்த தமிழ்நாடு நீர் தகவல் அமைப்பு ஆகியவற்றினை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், இக்கொள்கை விளக்குகிறது.
மாநிலத்தின் நடைமுறைத் தேவைகள், வேளாண் மற்றும் தொழில்துறைகளில் நிலையான நீர் பயன்பாடு மேலாண்மை செயல்பாடுகளை இக்கொள்கை வலியுறுத்துகிறது. நீர்ப்பாசன மேம்பாடு, நீரூற்று மேம்பாடு, மேற்பரப்பு நீர் மேம்பாடு, நிலத்தடிநீர் மேம்பாடு போன்ற நீர்வளம் பேணும் செயல்முறைகள் குறித்தும், வறட்சி மற்றும் வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவற்றினையும் இக்கொள்கை பரிந்துரைக்கிறது. இவ்வாறு, நிலையான நீர் மேலாண்மை மற்றும் அதன் பயன்பாட்டிற்கான பலதரப்பட்ட அணுகுமுறைகளை இக்கொள்கை பரிந்துரைக்கிறது.
சமூக (தெரு) நாய் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக்கான வரைவுக் கொள்கை
மாநிலத் திட்டக் குழுவால் உருவாக்கப்பட்டுள்ள சமூக (தெரு) நாய் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக்கான வரைவுக்கொள்கை, தமிழ்நாட்டில் உள்ள சமூக நாய்களை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதையும், மனிதாபிமான அணுகுமுறையுடன் பொறுப்பான நாய்வளர்ப்பினை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரேபிஸ் நோய் தொடர்பான இறப்புகளை அகற்றுதல், மனித-விலங்குக்கிடையேயான மோதல்களைக் குறைத்தல், சமூக நாய்களின் இனப்பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சமூக நாய்கள் மேலாண்மைக்கான இரக்கமுள்ள கட்டமைப்பை நிறுவுதல் ஆகியவற்றினை இக்கொள்கை வலியுறுத்துகிறது.
இப்பொருள் தொடர்பான சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான கருத்தடை முறைகள், தடுப்பூசி திட்டங்கள் மற்றும் கைவிடப்பட்ட நாய்களுக்கு பிரத்யேக தங்குமிடங்களை நிறுவுதல் ஆகிய உத்திகளை இக்கொள்கை முன்மொழிகிறது. மேலும், விலங்குகளை தங்கவைப்பதற்கான கட்டமைப்பு (நடமாடும் அறுவை சிகிச்சை பிரிவுகள் உட்பட), விலங்கு பராமரிப்பு மனித திறன் மேம்பாடு ஆகியவற்றினை வலுப்படுத்துவதன் மூலம் நீண்டகால தீர்வுகளை உறுதி செய்ய இக்கொள்கை பரிந்துரைக்கின்றது.
வளர்ப்பு நாய்களைப் பதிவு செய்தல், நாய்கடிகளைப் புகாரளித்தல், வணிகரீதியிலான நாய் இனப்பெருக்கம் போன்றவற்றிற்கான ஒழுங்குமுறை அம்சங்களும் இக்கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளன. சமூக நாய் மேலாண்மையில், பொது மக்கள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், விலங்கு நல வாரியம் போன்ற பல்வேறு பங்குதாரர்களின் பொறுப்புகளை இந்தக் கொள்கை விவரிக்கிறது.
மேலும், சமூக பங்களிப்பினை ஊக்குவிக்கும் வகையில், நாய்களுக்கு உணவளிப்பதற்கான தனியிடம், தத்தெடுப்பதற்கான திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகிய முன்மொழிவுகள் தற்போதுள்ள விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளை கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இருபதாவது கால்நடை கணக்கெடுப்பின்படி, சுமார் 4,41,000 சமூக நாய்கள் மற்றும் 3,30,264 நாய்கடி நிகழ்வுகளை கருத்தில்கொண்டு, பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் இணக்கமான சூழலை ஏற்படுத்துவதற்கும், விரிவான மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறையை இக்கொள்கை வழங்குகிறது” இவ்வாறு மாநில திட்டக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக