திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளைத் திறந்து அதில் குவித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி அரிய வகை பொக்கிஷங்கள் வெளியுலகுக்குத் தெரிய வர காரணமாக இருந்த வழக்கறிஞர் சுந்தரராஜன் மரணமடைந்தார்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு அறையைத் திறக்காமல் உள்ளனர். அதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பை விடஅதிக அளவிலான நகைகள் இருக்கும் என கருதப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்மநாபசாமி கோவில்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ குடும்பத்தினர் வசம் இந்தக் கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த நிலையில் பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சுப்ரீம் கோர்ட் நியமித்த உறுப்பினர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று சுந்தரராஜன் உடல்நல குறைவு காரணமாக இறந்தார்.
இவர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பூர்வீகம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆகும். திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலின் பாதாள ரகசியத்தை வெளிக் கொணர காரணமாக இருந்த சுந்தரராஜன் மறைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக