- மனோ கணேசன்
யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதாக கூறப்படும் அத்துமீறிய குடியேற்றங்களுடன் ஒப்பிட்டு கொழும்பிலே தமிழ் பேசும் தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்வது தொடர்பிலே ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து கண்டனத்துக்குரியதாகும். கொழும்பு இலங்கையின் தேசிய அரசியல்-பொருளாதார தலைநகரம் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை இலங்கையின் தலைநகரமாக சொல்லப்பட்டாலும் நடைமுறையில் கொழும்பு மாநகரமே இலங்கையின் தலைநகரமாக செயற்படுகின்றது. தமிழர்களின் கொழும்பு மாநகர இருப்பு சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இருக்கின்றது. எனவே தமிழர்கள் கொழும்பிற்கு புதிதாக வந்துவிட்டார்கள் என எவரும் கண்டுபிடித்து கூறமுடியாது. அத்துடன் இன்று கொழும்பு பொருளாதார தலைநகரமாகவும் இருக்கின்றது. இக்காரணத்தினாலேயே மலையகத்திலிருந்தும், வடகிழக்கிலிருந்தும் தமிழ் பேசும் மக்கள் கொழும்பிற்கு சமீப காலத்தில் பெருமளவில் குடிபெயர்ந்துள்ளார்கள். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அரச தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
அரச சார்பான காணி மற்றும் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும் பொழுது தமிழ் பேசும் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றது. குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் வர்த்தகம் செய்து வந்த தமிழர்களும் படிப்படியாக விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். எஞ்சியிருப்பவர்களும் பெரும் அச்சத்துடனே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதுபோல் முஸ்லிம் மக்களும் தங்களது வர்த்தக நோக்கங்களுக்காக கொழும்பை நாடி வருகின்றார்கள். தமிழ் பேசும் மக்கள் எந்தவித அரச ஆதரவுமின்றி சொந்த முயற்சியால் தலைநகரத்திலே வாழ நினைப்பது தவறாகுமா?
இன்;;றைய அரசாங்கத்திலே தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கு தலைவர்கள் இருக்கின்றார்கள். இதற்கு மேலதிகமாக சமீபத்திலே எதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு தாவிய தமிழ், முஸ்லிம் எம்பிக்களும் இருக்கின்றார்கள். அமைச்சு பதவிகளுக்காகவும், வரப்பிரசாதங்களுக்காகவும் அலைந்துதிரிகின்றவர்கள், நமது மக்கள் தொடர்பான அடிப்படை உண்மைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறவேண்டும். பாராளுமன்றத்திலே உரையாற்றி நமது மக்கள் மத்தியிலே நம்பிக்கையை ஏற்படுத்திட வேண்டும். மேல்மாகாணத்தில் கிரிபத்கொடையில் கூட தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வர்த்தகம் செய்ய முடியாது என்ற எழுதப்படாத விதி இன்று இருக்கின்றது.
இந்த உண்மைகளை உணராதவர்கள் சமீபகாலமாக கொழும்பிலே வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த அடிப்படையிலேயே கொழும்பிலிருந்து சிறுபான்மை மக்களை அப்புறப்படுத்த எண்ணுகின்றார்கள். அரச தொழிலும் இல்லை, சொந்த முயற்சியால் வர்த்தகமும் செய்ய முடியாது என்ற நிலையில் தமிழ் பேசும் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்காக என்னதான் செய்வது என்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக