செவ்வாய், 30 நவம்பர், 2010

தொடரும் 1883 இனக்கலவர மலையகத் தமிழ் அகதிகள் நிலை...


மலையகத் தமிழர் பல்லாயிரவர் யாழ்-குடாநாடு வந்தனர். பல மாதங்கள் அகதி முகாம்களில்பல மாதங்களின் பின் பலர் மலையகம் திரும்பினர். 101 குடும்பங்களை அறவழிப்போராட்டக் குழுவினர் பொறுப்பேற்றனர். யாழ் குடாநாட்டில் தங்குமாறு கோரினர். யாழ்ப்பாணப் பொதுமக்களிடம் பணம் திரட்டி நிலம் வாங்கினர். வீட்டு நிலம் தோட்ட நிலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பகிர்ந்தனர். கெற்பலி என்ற ஊரில் 61 குடும்பங்கள். மறவன்புலவு என்ற ஊரில் 40 குடும்பங்கள்.
 1985இல் நிலங்களை அன்பளிப்பாக வெற்றுத் தாளில் கடிதம் கொடுத்தனர். சட்டபூர்வமற்ற கடிதம் அது. சட்டபூர்வ உறுதியைக் கேட்டு அகதிகள் 25 ஆண்டுகளாக அறவழிப் போராட்டக்குழுவிடம் அலைகின்றனர். படையினர் சொல்லி, சுவிஸ்காரர் சொல்லி, மறவன்புலவில் 7 குடும்பங்களுக்கு 2010 வைகாசியில் சட்டபூர்வ உறுதி வீட்டுக் காணிக்குக் கொடுத்தனர். இதற்காக ஒவ்வொரு அகதியிடமும் ரூ. 7,000 பெற்றனர். காணியின் விலையும் அதே அளவுதான். ஏற்கனவே அன்பளிப்பாக்கிய தோட்டக் காணிக்குச் சட்டபூர்வ உறுதி கொடுக்க மறுக்கின்றனர்.
 கெற்பலியில் 61 குடும்பங்கள், மறவனபுலவில் 40-7=33குடும்பங்கள், வீட்டுக் காணிஉறுதி இல்லாமலும், 101 குடும்பங்களுக்கும் தோட்டக் காணி உறுதிகள் இல்லாமலும் கடும் துன்பம் அடைகின்றனர். இப்பொழுது மீளமைப்புக்காகப் பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை அரசு அறிவிக்கிறது. காணி உறுதி இல்லாததால் அந்த வீடமைப்புத் திட்ட வசதியை இந்த 1983 அகதிகள 2010இலும் பெற முடியவில்லை.
 யாழ்ப்பாணம் போயிருந்தேன். நிலைமையைப் பார்த்தேன். அறவழிப்போராட்டக் குழுவிடம் பேசினேன். கேட்கிறார்களில்லை. அரசாங்க அதிபரிடம் பேசினேன். அகதிகளின் கடிதம் அரசாங்க அதிபரிடம் உண்டு. இன்னமும் காணி உறுதிகள் கொடுபடவில்லை. அறவழிப்போராட்டக் குழுவினர் அகதிகளிடம் இப்பொழுது பணம் கேட்கிறார்கள்.
நில அளவைக்குத் தருக, உறுதி எழுதத் தருக எனக் கேட்கிற தொகை, காணியின் விலையை விடக் கூடுதலாகும். அவர்களோ அன்றாடம் காய்ச்சிகள். அவர்களிடம் ஏது பணம்? நில அளவை மற்றும் உறுதி எழுதும் இந்தத் தொகை ஏற்கனவே அவர்களிடம் பொதுமக்கள் வழங்கிய நிதியில் 1985இல் கொடுக்கப்பட்டது.
அறவழிப்போராட்டக்குழுவினரிடம் பணம் உண்டு. மாதாந்தம் வங்கியில் இருந்து அக்குழு எடுக்கும் தொகை சில இலட்சங்கள். வங்கி இருப்பு ஒரு கோடிக்கு மேலாக. யாவும் நன்கொடையாளர் பணம்.
அறவழிப்போராட்டக்குழுவின் கணக்குகள் சரியாக எழுதப்படுவதில்லை என்ற பட்டயத் தணிக்கையாளர் செல்வரத்தினத்தின் 2008 அறிக்கை, அரியரத்தினத்தின் 1996 அறிக்கை. இருந்தும் அன்றாடம் காய்ச்சிகளான தமிழ் அகதிகளிடம் தமிழரே பணம் கேட்கும் கொடுமை.
 இதுதான் நிலை. தமிழரே தமிழருக்கு நன்மை செய்ய மறுக்கும் அவல நிலை.
ஓமியோபதி மருத்துவர் திரு. சண் காளிதாசர் 1983 அகதி.
மறவன்புலவில் இருக்கிறார்,  0094 771321551  0094 771321551 அவரது தொலைப்பேசி.
திரு. முத்துக்குமார் 1983 அகதி,
கெற்பலியில் இருக்கிறார்.  0094 775841492  0094 775841492 அவரது தொலைப்பேசி.
அவர்களிடம் மேலும் விவரம் அறியலாம்.
நன்றி!
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கருத்துகள் இல்லை: