வெள்ளி, 8 அக்டோபர், 2010

யுத்தத்தின் பின் கிளிநொச்சியில் தினமும் நான்கு பேர் தற்கொலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான தற்போதைய சூழலில் தினசரி நான்கிற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்வதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் உளநல மருத்துவர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான நிலைக்கான பிரதான காரணமாக சமூகப் பின்னணியே காணப்படுகின்றது. குறிப்பாக விதவைகள், கணவன்மார்காணாமல் போய் தனிமையில் வாழும் பெண்கள் போன்றோரே அதிகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.பலர் தற்கொலை செய்கிறார்கள்.
சமூக பாதுகாப்பின்மை பொருளாதாரப் பிரச்சினைகளே இவர்களில் தற்கொலைக்கு மிக முக்கியமான காரணிகளாகக் காணப்படுகின்றன.இத்தகைய தற்கொலை முயற்சிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எம்மால் இயலுமான வரை மேற்கொண்டுள்ளோம்.
இதனைப் போலவே யுத்தத்தால் மனநோயாளிகளாக்கப்பட்டோர் மற்றும் பாடசாலை செல்லாத சிறார்களின் எண்ணிக்கையும் மாவட்டத்தில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
யுத்தத்திற்கு முன்னர் சுமார் 300 பேராக இருந்த மனநோயாளிகளின் எண்ணிக்கை இறுதியுத்தம் மற்றும் இடம்பெயர்வுகளினால் 200 ஆகியுள்ளது.100 பேர் காணாமல் போயுள்ளனர். எஞ்சியவர்களுடன் சேர்ந்து தற்போது மாவட்டத்தில் 500 வரையான மனநோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களிலும் பெண்கள்,சிறார்கள் போன்றோரே அதிகளவில் காணப்படுகின்றனர். இவர்களில் பலர் தமக்கு நெருக்கமான யாரையோ யுத்தத்தில் இழந்துள்ளனர். அதனோடு இடப்பெயர்வுகளின் போது ஏற்பட்ட தாக்கங்களும் இந்நிலைக்கு காரணமாகின்றது.
தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநோயாளிகளுக்கான விடுதி வசதிகள் போதுமானதாக இல்லை.ஆண்கள் விடுதியில் 5 கட்டில்களும் பெண்கள் விடுதியில் 5 கட்டில்களும் வைத்தியசாலைக் கட்டிடத்தின் 2 ஆம் தளத்தில் உள்ளன.இதனால் பலர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யவும் முயற்சித்துள்ளனர்.எனவேஇ தனியான விடுதியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
ஒவ்வொரு நோயாளியின் வீடுகளுக்கும் சென்று அழைத்து வந்தே சிகிச்சையளிக்கின்றோம். சிறுவர்கள் தொடர்பில் மாற்றம் ஏற்படுவதற்கு சில காலம் எடுக்கும்.காரணம் சிறார்கள் முகாம் வாழ்வைப் பழகிக் கொண்டுவிட்டார்கள்.
இந்நிலையில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப இயைபாக்கமடைய சிறிது காலமெடுக்கும்.எனவே, எல்லோரும் ஒன்றிணைந்து இவற்றுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றார்.

கருத்துகள் இல்லை: