செவ்வாய், 5 அக்டோபர், 2010

போரட்டத்தைக் கைவிடமாட்டேன் என் வாழ்வைத் தியாகம் செய்யத் தயார் -சரத் பொன்சேகா!

எனது வாழ்க்கையைத் தியாகம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகா மற்றொரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையிலிருந்து பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டபோது, ஜனநாயகத்திற்காக தான் போராடப்போவதாக சூளுரைத்திருக்கிறார்.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே குழுமி நின்ற தனது ஆதரவாளர்கள் மத்தியில் இதனைத் தெரிவித்துள்ள பொன்சேகா தனது வாழ்க்கையைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனவும் கூறியுள்ளதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.
கடந்த வியாழக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் முதற்றடவையாக அவர் பாதுகாப்புடன் வெளியே கொண்டுவரப்பட்டிருந்தார். பத்திரிகையொன்றிற்கு கருத்துத் தெரிவித்திருப்பதன் மூலம் மக்களை வன்செயலுக்குத் தூண்டிய குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டிருப்பதாக பொன்சேகாவின் வழக்கறிஞர்கள் கூறினர்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது, சரணடைய வந்த புலி உறுப்பினர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக நீதிமன்றம் கண்டால் அவர் மற்றொரு இருபது வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும். ஆனால், தான் தெரிவித்த கருத்துகள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: