சனி, 9 அக்டோபர், 2010

தமிழ் இணையத்தள வடிவமைப்புப் போட்டி 2010 – யாழ். மாவட்டம்!

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் உள்ளூர் மயமாக்கப்பட்ட செயல்களுக்கான சிறப்பு மையமானது, கணினியை உள்ளூர்மொழிகளில் பயன்படுத்துவது சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.இம்மையத்தினால் மென்பொருள்கள் இலங்கைக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ளூர்மயமாக்கம் (Localisation) செய்யப்பட்டு வருகின்றன.

அத்தோடு உள்ளடக்க உள்ளூர்மயமாக்கம், உள்ளூர்மொழிகளில் உள்ளடக்க அபிவிருத்தி, உள்ளூர்மொழிகளில் கணிமை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் ஆகியனவும் இம்மையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் ஆகும். இச்சிறப்பு மையமானது LAKapps மையம் எனவும் அழைக்கப்படுகிறது.
தமிழ்மொழியில் கணிமை தொடர்பான செயற்திட்டம் ஒன்று கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளிலும், அறிவகங்களிலும், கணினி வளநிலையங்களிலும் நடாத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கிழக்குமாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான ஒரு இணையத்தள வடிவமைப்புப் போட்டியும் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. இச்செயற்திட்டம் மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் தமிழ் கணிமை சம்பந்தமான செயற்திட்டம் ஒன்று இந்த LAKapps மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் உள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி ஆகிய கல்வி வலயங்களிலுள்ள பல பாடசாலைகளிலும் புலோலி கணினி வள நிலையத்திலும், யாழ். உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்திலும் தமிழ் கணிமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், தமிழ் இணையத்தள வடிவமைப்பு பற்றிய பயிற்சிப்பட்டறைகள் ஆகியன நடத்தப்பட்டன.
இக்கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் ஏறக்குறைய 1000 மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
யாழில் நடைபெறும் இந்தச் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போது யாழ். பாடசாலை மாணவர்களுக்கான தமிழ் இணையத்தள வடிவமைப்பு போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. இதில் யாழ் பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்குபெறலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை வலயக் கல்விப் பணிப்பகங்களிலும் http://www.lakapps.lk/llcj/ என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான இறுதித் திகதி 10.10.2010.
போட்டிக்குரிய விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அனைத்தும் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களது இணையத்தளங்களை நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அபிவிருத்தி செய்து முடித்து எமக்கு சமர்ப்பிக்கவேண்டும்.
இப்போட்டியில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெறும் இணையத்தளங்களை வடிவமைத்த வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்.
அத்தோடு ஒவ்வொரு வலயத்திலிருந்து மேலதிகமாக தகுதியான இரண்டு இணையத்தளங்களுக்குச் சிறப்புப் பரிசில்களும் தகுதியானவை என நடுவர்களால் தெரிவு செய்யப்படும் இணையத்தளங்களை வடிவமைத்த மாணவர்களுக்கு பங்கு பற்றியதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். இவை அனைத்தும் நவம்பர் மாதம் இடம்பெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
இந்த செயற்திட்டம் பற்றிய மேலதிக விபரங்களுக்கும் விசாரணைகளுக்கும்
இணையத்தளம் http://www.lakapps.lk/llcj/
மின்னஞ்சல் – sarvesk@uom.lk
தொலைபேசி – 0114216061 – உடன் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: