ஞாயிறு, 1 ஜனவரி, 2023

நாமக்கல் பட்டாசு விபத்து: புத்தாண்டு விற்பனைக்கு வீட்டில் வைத்த பட்டாசு குடும்பத்தை பலி கொண்ட சோகம்

 bbc.com :  நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் இருப்பு வைத்த பட்டாசுகள் சனிக்கிழமை வெடித்துச் சிதறியதில் பட்டாசு வியாபாரி, அவரது மனைவி, அவரது தாய் மற்றும் பக்கத்து வீட்டு மூதாட்டி என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தில்  இருந்த வீடுகளும் சேதமடைந்தன.
மோகனூர்  மேட்டுத் தெருவில் குடியிருக்கும் தில்லைகுமார் (35) பட்டாசு வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தார். அவருக்கு அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் பட்டாசுக் கிடங்கு உள்ளது.
ஆனால், புத்தாண்டு விற்பனைக்காக வீட்டிலேயே அனுமதியின்றி பட்டாசுகளை அவர் இருப்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் சனிக்கிழமை அதிகாலை பட்டாசுகள் தீப்பற்றி வெடித்துச் சிதறத் தொடங்கின என்று போலீசார் கூறுகின்றனர்.   


நாமக்கல், கரூர், மோகனூர் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு 3 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில், தில்லை குமார், அவரது தாய் செல்வி (55), அவரது மனைவி பிரியா (28), பக்கத்து வீட்டு மூதாட்டி பெரியக்காள் (73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு வந்து இடத்தைப் பார்வையிட்டவரான பாலு பிபிசி தமிழிடம் பேசினார், "தில்லை குமாரின் குடும்பத்தினர் மோகனூரைச் சேர்ந்தவர்கள்தான். இரண்டு தலைமுறையாக இவர்களுக்கு பட்டாசு வியாபாரம்தான்.

இவர்களுக்கு குமரிபாளையம் அருகே ஓடப்பாளையம் என்கிற இடத்தில் கிடங்கு உள்ளது. அங்கு இவர்கள் பட்டாசுகளை இருப்பு வைப்பது வழக்கம். ஒரு கார் மூலம் பட்டாசுகளை மற்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்து வந்தனர்.

பண்டிகைக் காலங்களில் பட்டாசுகளை வீட்டில் இருப்பு வைத்துக் கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். வீட்டில் வைத்து விற்பனை செய்வதும் வழக்கம். அவர் மிகச் சிறிய வீட்டில் அவரது தாய், மனைவி மற்றும் மூன்று வயது குழந்தையுடன் வசித்து வந்தார்,” என்றார் பாலு.

மேலும் இது பற்றிக் கூறிய அவர், “புத்தாண்டு தினம் என்பதால் வழக்கம் போல் கிடங்கிலிருந்து பட்டாசுகளை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். அதிக அளவில் பட்டாசுகளை வீட்டில் குவித்து வைத்திருந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம்.

சமையலறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் ஒரே தொகுப்பாக இருந்ததால் கேஸ் சிலிண்டரும் வெடித்துள்ளது. என்னுடைய வீடு இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 03:30 மணிக்கு நடந்துள்ளது.

விபத்து நடந்துமே எனக்குத் தகவல் கிடைத்தது. அதிகாலை வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயனைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளன்,” என்றார்.

"இந்த விபத்தில் தில்லைகுமாரின் மூன்று வயது மகள் உயிர் பிழைத்துள்ளார். தீ விபத்து ஏற்பட்டதும் முதலில் யாரோ குழந்தையை பத்திரமாக வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டனர். தில்லை குமாரின் மகள் அவரின் தாய்வழி உறவினர்கள் வசம் தற்போது உள்ளார்" என்றும் அவர் கூறினார்.  

அந்தப் பகுதியில் பெரும்பாலும் ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள்தான் உள்ளன. இதனால் பட்டாசு விபத்தில் தில்லை குமார் வீட்டைச் சுற்றியிருந்த ஐந்து வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துவிட்டன. இவை போக அதே இடத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட வீடுகள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளன என்று சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.  
படக்குறிப்பு,

“இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது பட்டாசு வியாபாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்,” என்றார் பாலு.

சம்பவ இடத்திற்கு மூத்த அதிகாரிகள், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் வந்தனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களையும் அமைச்சர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். சிகிச்சை பெற்று வருபவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை.

தமிழ்நாடு அரசு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளது. காவல்துறையினர் குடியிருப்புப் பகுதிகளில் தீப்பற்றக்கூடிய பட்டாசு போன்ற பொருட்களை வைக்கக்கூடாது எனத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.  

“இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது பட்டாசு வியாபாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்,” என்றார் பாலு.

கருத்துகள் இல்லை: