சனி, 7 ஜனவரி, 2023

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது

 மாலைமலர் : சம்பவம் நடந்த பிறகு சங்கர் மிஸ்ரா அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டார். சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு (டி.ஜி.சி.ஏ.) ஏர்-இந்தியா தெரிவிக்கவில்லை.
நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி ஏர்- இந்தியா விமானம் வந்தது.இந்த விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (26) என்பவர் 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்தார்.
இதில் அந்தபெண் பயணியின் ஆடை மற்றும் கைப்பை நனைந்தது. இந்த சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த பிறகு சங்கர் மிஸ்ரா அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டார். என் மீது புகார் கொடுக்க வேண்டாம்.


இதனால் எனது மனைவியும், குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என கெஞ்சினார். பின்னர் அவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதால் விமான பயண குறிப்பேட்டில் இதனை பதிவு செய்துவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமான கட்டணத்தை திருப்பி அளிப்பதாக ஏர்- இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

மேலும் சங்கர் மிஸ்ரா எழுத்து பூர்வமாக மன்னிப்பு கடிதம் அளித்ததால் அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அவர் 30 நாட்கள் விமான பயணம் மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு (டி.ஜி.சி.ஏ.) ஏர்-இந்தியா தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் என் விருப்பத்தை மீறி என் எதிரில் சங்கர் மிஸ்ராவை அமர வைத்து வலுக்கட்டாயமாக சமாதானம் பேச வைத்தனர் என அந்த பெண் ஏர்-இந்தியா மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறினர்.

மேலும் பெண்ணின் மகள் இது பற்றி ஏர்- இந்தியா நிறுவனத்துக்கு புகார் கடிதமும் அனுப்பினார்.

சிறுநீர் கழித்த விவகாரம் அம்பலமாகியதால் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அவர் மீது 294 (பொது இடத்தில் ஆபாசமான செயல்) 509 (சொல், சைகை அல்லது செயல்) ஆகியவற்றை அவமதிக்கும் நோக்கில் செய்தல், 510 (குடிபோதையில் இருக்கும் நபர் பொது இடங்களில் தவறாக நடத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சங்கர் மிஸ்ரா திடீரென தலைமறைவானார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

வெளிநாடு எதுவும் தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்- அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் தன்னை தேடியதை அறிந்த சங்கர் மிஸ்ரா தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்தார். இருந்தபோதிலும் அவர் தனது நண்பர்களிடம் பேச சமூக வலை தளங்களை பயன்படுத்தினார்.

இதை போலீசார் மோப்பம் பிடித்து அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் என்பதை கண்காணிக்கும் பணியில் இறங்கினர்.

இந்த நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் சங்கர் மிஸ்ரா இருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் பெங்களூர் விரைந்து வந்தனர். அங்கு சஞ்சய் நகர் பகுதியில் தங்கி இருந்த சங்கர் மிஸ்ராவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீசார் டெல்லி அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணை முடிந்த பிறகு இன்று அவர் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

இதற்கிடையில் விமானிகளிடமும் அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 3 நாட் களாக நிலவி வந்த இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

கைதான சங்கர் மிஸ்ரா வெல்ஸ் பார்கோ என்ற அமெரிக்க நிதி சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்தின் இந்திய வணிக பிரிவின் துணைத் தலைவராக இவர் பதவி வகித்து வந்தார்.

விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த விவரம் தெரிந்ததும் அந்த நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சங்கர் மிஸ்ராவின் செயல் மிகுந்த வேதனையை அளிப்பதாக வெல்ஸ் பார்கோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை: