சனி, 7 ஜனவரி, 2023

17 வயதில் துவங்கிய அரசியல் வாழ்க்கை.. டி.ஆர்.பாலு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

 Kalaignar Seithigal  - Lenin  :   கொள்கைப் பிடிப்பிற்கு எடுத்துக்காட்டு டி.ஆர்.பாலு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுதிய 'பாதை மாறா பயணம்' நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் டி.ஆர்.பாலு எழுதிய 'பாதை மாறா பயணம்' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலின் முதல் பாகத்தை தி.க தலைவர் கி.வீரமணியும், இரண்டாவது பாகத்தை கவிஞர் வைரமுத்துவும் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுப வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " திராவிட இயக்கத்தினரின் வாழ்க்கை வரலாறு முழுவதும் கிடைத்திருந்தால் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். அனைவரும் கழகத்தின் அனுபவங்களை நூல்களாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழ்நாட்டிற்காக, இந்தியாவின் வளர்ச்சிக்கா உழைத்தவர் டி.ஆர்.பாலு. 17 வயதில் தீவிர அரசியலில் நுழைந்த டி.ஆர்.பாலு ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைமை என கொள்கைப் பிடிப்போடு இப்போதும் இருந்து வருகிறார். இளம் தென்றல் என்ற பட்டத்தை எனக்குச் சூட்டியவர் டி.ஆர்.பாலுதான்.


அண்ணா கலைக்கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எனக்குப் பேச்சு பயிற்சிக் களமாக அமைந்தது டி.ஆர்.பாலுவின் அண்ணா கலைக்கழகம்தான்.
மிசா காலத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் எனக்கும் இடையேயான நட்பு இன்னும் நெருக்கமானது. மாவட்டச் செயலாளராக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் டி.ஆர்.பாலு. கலைஞரிடத்திலேயே கணையாழி விருது பெற்றவர்.

27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர், 3 முறை ஒன்றிய அமைச்சராக இருந்துள்ளார் டி.ஆர்.பாலு. இப்போது கூட அவரது நடை, உடை ஒன்றிய அமைச்சர் போன்றே இருக்கும். இவை டி.ஆர்.பாலுவின் உழைப்புக்குக் கிடைத்த ஊதியம்.

சேது சமுத்திர திட்டத்தைச் செயல்படுத்திட கலைஞர் தீவிரம் காட்டினார். சேது சமுத்திர திட்டத்திற்கு நிதி ஒதுக்க உதவியாக இருந்தவர் டி.ஆர்.பாலு. ஆனால் இந்த திட்டத்தை பா.ஜ.க தடுத்து விட்டது.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் நாட்டின் அந்நிய செலாவணி வருவாய் அதிகரித்திருக்கும். மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலு கையில் எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: