வெள்ளி, 6 ஜனவரி, 2023

சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

"சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Kalaignar Seithigal  -  Lenin :  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05.01.2023) இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் 2500 திருக்கோயில்களுக்கு ரூ. 50 கோடி நிதி வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:-
2022-ஆம் ஆண்டு மட்டும் அதாவது கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 640-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்திருக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன், கடந்த ஆண்டு மட்டும் நான் 640-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இந்த 640-ல் 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். 95-க்கும் மேற்பட்டவை கழக நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள். மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 550 கிலோ மீட்டருக்கு மேல் நான் சுற்றி வந்திருக்கிறேன்.   மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருக்கக்கூடிய உதவிகள் மூலம் ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்து 355 பேர் பயனடைந்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாகப் பயனடைந்தவர்கள் இவர்கள்.

இந்த புள்ளிவிவரத்தை கடந்த வாரம் நான் திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் விளக்கமாக சொல்லி இருக்கிறேன். எந்தத் துறை சார்பில் நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்து கொண்டிருக்கக்கூடிய விபரம், அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், உள்துறை சார்ந்த அதாவது என் பொறுப்பில் இருக்கக்கூடிய உள்துறை, காவல்துறை. அந்த உள்துறை சார்ந்த நிகழ்ச்சிகள்தான் அதிகம், 32 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். மற்ற துறைகளில் அதிகமாக நான் கலந்து கொண்டது தொழில் துறை. அந்தத் தொழில் துறையில் 30 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அதற்கடுத்து இருக்கிறது எது என்று கேட்டீர்கள் என்றால், இந்து சமய அறநிலையத் துறைதான்.

"சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், 25 நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த வெற்றிக்குக் காரணமான நம்முடைய செயல்பாபு என்று போற்றப்படக்கூடிய சேகர் பாபுவை நான் பாராட்டுகிறேன். அவர் நினைக்கலாம், என்ன, மூன்றாவது இடத்தில் தானே இருக்கிறோம், முதலிடத்திற்கு வரவேண்டுமே என்பதற்காக நாளையில் இருந்து வாராவாரம் தேதி கேட்டுவிடக் கூடாது, அதற்கு இப்போதே அவர் திட்டம் போட்டிருப்பார், அதுவும் எனக்கு நன்றாகத் தெரியும். அனைத்து துறையும் வளர்வதுதான், வளர வேண்டும் என்று எண்ணுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இன்றைக்கு திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள், என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்கிற முயற்சிகளில் நிறைய ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் மிகுந்த பணிவோடு இந்த விழாவின் மூலமாக தெரிவிக்க விரும்புவது, நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல.

இதை அறியவேண்டியவர்கள் அறிந்து கொண்டால் போதும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை இந்த நிகழ்ச்சியை நேரடியாக வந்து பார்க்க முடியாது அவர்களால், ஏனென்றால் அவர்கள் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார்கள். ஆனால், நிச்சயம் தொலைக்காட்சி மூலமாக பார்த்துக் கொண்டிருப்பார்கள், நாளைக்கு காலையில் பத்திரிகையிலும் பார்ப்பார்கள். ஆக, இதை அவர்கள் உணர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

"சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

2,500 கிராமப்புறக் கோயில்கள் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதி கோயில்களின் திருப்பணிக்குத் தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கக்கூடிய விழா இது. 50 கோடி ரூபாய் நிதி வழங்கக்கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக, எழுச்சியோடு நம்முடைய ஆதீனங்களெல்லாம் பாராட்டக்கூடிய வகையில் இந்த நிகழச்சி நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஆன்மிகப் பெரியவர்கள், அருள் நெறியாளர்கள் முன்னிலையில் இந்த கோயில்களுக்கான நிதியை அரசின் சார்பில் நாங்கள் வழங்கி இருக்கிறோம்.

நம்முடைய கழக ஆட்சி மலர்ந்ததற்குப் பிறகு, திருக்கோயில்களுக்கு ஏராளமான பணிகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த விழா. இந்தத் திருக்கோயில் பணிகளைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டுமென்றால், நாங்களாக எதையும் செய்யவில்லை. இதற்கான வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படிதான் இதையெல்லாம் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.


தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழைய நிலையில் இருக்கக்கூடிய அந்தக் கோயில்களை புதுப்பிக்க, அப்படி புதுப்பிக்கும் நேரத்தில், பழமை மாறாமல் அதை சீர்செய்ய குடமுழுக்கு விழாவை நடத்த இந்த அரசு உத்தரவிட்டிருக்கிறது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அதே போல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன.

திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவினுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான் இந்த செயல்பாடுகள் எல்லாம் செய்யப்படுகின்றன.

தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களைப் பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

திருக்கோயில்களுக்கு சொந்தமான திருக்குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு

4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களைப் பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நம்முடைய இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, அமைச்சர் சேகர் பாபு அவர்கள் ஏராளமான அறிவிப்புகளைச் செய்தார். சட்டமன்றத்தில் அறிவிக்க நேரம் இல்லாமல் - முக்கியமானதை மட்டும்தான் அறிவித்தார். மற்றவைகளை, பேசியதாக பதிவு செய்ததாக அவர் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்.

"சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த நிகழ்ச்சிக்கு தயாராகும்போது, அப்படி அறிவிக்கப்பட்டதில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் நான் கேட்டேன். அவர் சொன்னார்,

2021-2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளில் 91 அறிவிப்புகளின் மூலமா 3,769 திருக்கோயில்களில் திருப்பணிகளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

2022-2023 ஆம் ஆண்டிற்கான 165 அறிவிப்புகளில் 135 அறிவிப்புகளின் மூலம் 2578 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – என்றும் பெருமையோடு எடுத்துச் சொன்னார். இதற்காக நான் அவரை உங்கள் அனைவரின் சார்பில், அரசின் சார்பில் மனதார பாராட்டுகிறேன். அவரை மட்டுமல்ல, அவருக்கு துணைநின்ற துறையின் செயலாளர், ஆணையர், அதிகாரிகள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் இடம் பெறாத அறிவிப்புதான் இப்போது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இது அறிவிக்கப்படவில்லை. ஆக, சொன்னதை மட்டுமல்ல,' சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சி தான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதைத்தான் நம்முடைய அரசு விரும்புகிறது, இதுதான் நம்முடைய அரசினுடைய நோக்கம்.

திருவாரூரில் பல்லாண்டு காலமாக ஓடாத இருந்த தேரை ஓட வைத்த பெருமை யாருக்கு என்று கேட்டீர்களானால், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குத் தான். தேர் வரும் பாதையைச் சுற்றிலும் சாலைகள் அமைக்கப்பட்டன. தேர் ஓடுவது சில நாட்கள்தான், ஆனால் மக்கள் 365 நாளும் தொடர்ந்து அந்த சாலையைப் பயன்படுத்துகிறார்கள் என்று தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

கோயில்கள் நமது கலைச் சின்னங்களாக, பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன. நமது சிற்பத்திறமைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. நமது கலைத் திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, கண்ணும் கருத்துமாக அதைக் காப்பது நம்முடைய அரசினுடைய கடமை என்று எண்ணிச் இன்றைக்கு நாம் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அத்தகைய கோயில்கள் சமத்துவம் உலவும் இடங்களாக அமைய வேண்டும் என்பதிலே நமது முழு கவனம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது.

எந்த மனிதரையும் சாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. நன்றாக கவனியுங்கள், எந்த மனிதரையும் சாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்குத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நாம் கொண்டு வந்தோம்.

அன்னைத் தமிழ் மொழி ஆலயங்களில், நம்முடைய தமிழ் மொழி ஒலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டு இருக்கிறோம். சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்.

மனிதர்களில் மட்டுமல்ல கோயில்களிலும் நகரக் கோவில் - கிராமக் கோவில் என்றும் - பணக்காரக் கோயில் - ஏழை கோவில் என்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுகிறது.

கிராமப்புறக் கோயிலாக இருந்தாலும் - ஏழ்மையான கோயிலாக இருந்தாலும் - ஆதிதிராவிடர் பகுதியில் இருக்கும் கோயிலாக இருந்தாலும் - அனைத்தையும் ஒன்று போலக் கருதி, உதவி செய்யக்கூடிய அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

மதம் - சாதி வேற்றுமை மட்டுமல்ல - கோயில் - சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. அனைத்து இறைத் தலங்களையும் கண்ணும் கருத்துமாக நாம் இன்றைக்கு கவனித்து வருகிறோம். அதனால்தான் இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய சமயச் சான்றோர்கள் மட்டுமல்ல, இன்னும் பலரும் இந்த அரசை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனவே, உங்களுடைய பாராட்டுகளும் எங்களுக்குத் தேவை. நீங்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

இன்றைக்கு நம்மை ஏளனம் செய்து கொண்டிருக்கக்கூடிய, விமர்சனம் செய்து கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு எல்லாம் இந்த நிகழ்ச்சியே, இந்த மேடையே சாட்சி, சான்று. எனவே, நாங்கள் எந்நாளும் உழைப்போம், எப்போதும் தொடர்ந்து உழைப்போம், எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை வருகிற வரையில் இந்த திராவிட மாடல் ஆட்சி உழைக்கும்! உழைக்கும்! என்ற அந்த உறுதியை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை, வாழ்த்துகளைத் தெரிவித்து நன்றிகூறி விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

கருத்துகள் இல்லை: