வியாழன், 5 ஜனவரி, 2023

பிடிஆரை சுற்றி என்ன நடக்கிறது?

 மின்னம்பலம் : Kavi : வைஃபை ஆன் செய்ததும் ட்விட்டர் இன்பாக்ஸில் சில மெசேஜ்கள் வந்து விழுந்தன. பிடிஆர் ஜனவரி 2 ஆம் தேதி போட்ட ட்விட்டும் அதுபற்றிய எதிர்வினைகளும் அதில் இருந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“நிதியமைச்சர் பிடிஆர் வெளிப்படையான நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் உடையவர். சற்று கடினமான நிர்வாகமாக இருந்தாலும் தளர்வில்லாத நிர்வாகமாக இருக்க வேண்டும் என்ற முனைப்புள்ளவர்.
இப்படிப்பட்டவர் அவ்வப்போது தனது வெளிப்படையான கருத்துகளால் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதுண்டு.
இப்படித்தான் ஜனவரி 2 ஆம் தேதி தான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தை அமைச்சராக இருந்து வெளியிட முடியாது என்று குறிப்பிட்டுவிட்டு வாய் விட்டு சிரிக்கும் ஓர் எமோஜியையும் இணைத்திருந்தார்.


ஆனால், இந்த ட்விட்டை வைத்துக் கொண்டு, ‘அப்படியென்றால் அமைச்சரவையில் இருந்து பிடிஆர் வெளியேறுகிறாரா?’ என்ற அளவுக்கு அந்த ட்விட்டுக்கு கை, கால், இறக்கைகள் முளைத்தன.
அதனால் அதற்கு பதிலளித்தார் பிடிஆர். ‘நான் எழுதும் புத்தகம் மிகவும் இயல்பானது என்பதால் அதை அமைச்சராக இருந்து வெளியிட முடியாது என்று நினைத்து பதிவிட்ட வார்த்தைகள் வேறு வேறு கோணங்களில் பார்க்க தூண்டிவிட்டன. என்ன இருந்தாலும் ஒரு நாள் அமைச்சர் பதவியில் இருந்து போகத்தானே வேண்டும்’ என்று மீண்டும் ஒரு ட்விஸ்ட் வைத்தார்.

இந்த நிலையில் பிடிஆர் மீது மதுரையில் இருந்து ஒரு புகார் பட்டியலே சென்னைக்கு சென்றிருக்கிறது. மதுரையில் ஏற்கனவே அமைச்சர் பிடிஆருக்கும் அமைச்சர் மூர்த்திக்கும் கட்சிக்குள் வாய்க்கால் தகராறு இருக்கிறது.

இருவரும் தனித்தனியே கூட்டங்கள் கூட்டி விருந்து கொடுத்த சம்பவங்கள் நடந்தன. ஒரு செய்தியாளர் சந்திப்பில் கட்சி பற்றிய ஒரு கேள்விக்கு, ‘எனக்கு கட்சியில் எந்த பதவியும் இல்லை, பொறுப்பும் இல்லை. எனவே அதுபற்றி என்னிடம் கேட்காதீர்கள்’ என்று விரக்தியாக பதில் சொன்னார் பிடிஆர்.

ஆனால் இதற்குப் பின்னர் பிடிஆருக்கு கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளர் பதவியை அளித்தார் முதல்வர் ஸ்டாலின். அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் கேட்டபடியே புள்ளியியல் துறையையும் அவருக்கே கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் மதுரை மாநகர மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கோ. தளபதி சென்னை சென்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து பிடிஆர் மீது புகார் பட்டியலை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் முதல்வரை சந்திக்க முடியாத நிலையில் சபரீசனைப் பார்த்து பிடிஆரின் மீதான புகார் பட்டியலைக் கொடுத்திருக்கிறார் தளபதி. அந்த புகார் பட்டியலில் மதுரையில் கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பிடிஆர் மீது வரிசையாக புகார்களை சுமத்தியிருக்கிறார். அதையெல்லாம் படித்துப் பார்த்த சபரீசன் நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

சபரீசனிடம் தளபதி அளித்த பிடிஆர் மீதான புகார்கள் பற்றி மதுரை அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘பிடிஆர் வாக்குக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றவர். வெளிப்படையான நிர்வாகத்துக்காக வேலை செய்து வருபவர். ஆனால் பிடிஆரை சுற்றியிருக்கும் மதுரை புள்ளிகள் அப்படி அல்ல. பிடிஆரின் பெயரைப் பயன்படுத்தி மாநகராட்சி திட்டப் பணிகளில் தலையிடுகிறார்கள்.

இதுதான் தளபதியின் புகாரில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிடிஆர் பெயரைச் சொல்லி அவரது ஆதரவாளர்கள் செய்வதை பிடிஆர் செய்கிறார் என்று தளபதி புகார் கொடுத்திருக்கிறார்’ என்கிறார்கள்.

உலகத்தில் என்ன நடக்கிறது என்பதில் அப்டேட்டாக இருக்கும் பிடிஆர் மதுரையில் தன்னைச் சுற்றி தன் பெயரைச் சொல்லி என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் பிடிஆரின் நலம் விரும்பிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: