வியாழன், 5 ஜனவரி, 2023

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்- திருப்பூர் மாவட்டம் உள்ள பனைப்பாளையம்

 மாலை மலர்  :  திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் பூஜா (வயது 19) என்பதும், ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அந்தப் பெண் லோகேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும், இருவரும் இன்று தனியாக காட்டுப்பகுதியில் சந்தித்தபோது காதலிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால், ஆத்திரத்தில் தன்னை சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.



இதையடுத்து போலீசார் லோகேஷை தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்த லோகேஷ், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூஜாவுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: