சனி, 7 ஜனவரி, 2023

சி. வை .தாமோதரம் பிள்ளை! உ.வே.சாமிநாத அய்யரக்கு வழிகாட்டிய மாமனிதர். தொல்காப்பியம் கண்டு பிடித்தவர்! நினைவு நாள் 01-01-1901.

British Ceylon High Resolution Stock Photography and Images - Alamy

Indran Rajendran  :    தொல்காப்பியம் தேடி கண்டு பிடித்து அளித்த  சி. வை .தாமோதரன் அவர்களுடைய நினைவு நாள் 01-01-1901.
பிறப்பு 12-09-1832. இலங்கை வாழ் தமிழர் Charles Winslow Kingsbury இவரது இயற்பெயர். இந்துவாக மீண்டும் மதம்  மாறி; சைவமாக இருந்து சென்னையிலும், புதுக்கோட்டையிலும் வாழ்ந்து தமிழ் பணி ஆற்றியவர்.
பண்டைய சங்கத் தமிழ்_நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்தவர்.
தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி.
இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார்.
அதன் பின்னர் 1852 இல் அயலூரான கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார்.
இவரது புதல்வர் அழகசுந்தரம் தமிழாய்வாளராவார்.


1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டதுமல்லாமல், தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி எனும் பெருமையையும் பெற்றார்.
இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பெர்சிவல் பாதிரியார் தமிழ் நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 ஆம் ஆண்டு சென்னை வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.
1858 இல் சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார்.
பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார்.
அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார்.
அத்துடன் விசாரணைக் கர்த்தர் பதவியும் கிடைத்தது.
தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871 இல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் ராவ் பகதூர் பட்டமளித்துப் பாராட்டினர்.
பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரம் அர்ப்பணிப்புடனான அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் பட்டினங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்த போது, அதனை மெச்சி வியந்து பாராட்டாதோர் எவரும் இருந்ததில்லை.
அவரது அப்பணி ஒன்றுக்காகவே அவர் பிறந்த ஈழத்துக்கு திராவிடம் அன்று நன்றி கூறிப் பாராட்டும் நல்கியிருந்தது.
தமது அறுபத்து ஒன்பதாம் வயதில், 1901 சனவரி 1 (சார்வரி ஆண்டு மார்கழி 18) இல் சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் தாமோதரன் மறைந்தார்.
பதிப்பித்த நூல்கள்
நீதிநெறி விளக்கவுரை
தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
வீரசோழியம் (1881)
திருத்தணிகைப் புராணம்
இறையனார் அகப்பொருள்
தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
கலித்தொகை
இலக்கண விளக்கம்
சூளாமணி
தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
இயற்றிய நூல்கள் [தொகு]
கட்டளைக் கலித்துறை
சைவ மகத்துவம்
வசன சூளாமணி
நட்சத்திர மாலை
ஆறாம் வாசகப் புத்தகம்
ஏழாம் வாசகப் புத்தகம்
ஆதியாகம கீர்த்தனம்
விவிலிய விரோதம்
காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)
உ வே சாமிநாதன் அவர்கள் சி.வை. தாமோதரனார் இறந்த பொழுது எழுதிய இரங்கற்பா:
"தொல்காப் பியமுதலாந்த தொன்னூல் களைப்பதிப்பித்து
ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின் - அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே"
நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் -
வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ -
பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்
கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!"  
தமிழ் பிள்ளைமார் புலவர்களிடம்  அவர்கள் பூஜை அறையில் இருந்த  தொல்காப்பியத்தை அனைவரும் அறியும் வண்ணம் அச்சிட்டு வெளிப்படுத்தியவர் இவர் என்ற புகழுக்கு உரியவர்.
இவரை இன்று நினைவுகூர்ந்து  வணங்குவோம்.
ஒவ்வொரு தமிழர்களும்  இவரை நினைவுகூர்வது  கடமை.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!  மகிழ்ச்சி
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்க!

கருத்துகள் இல்லை: