திங்கள், 2 ஜனவரி, 2023

புத்தாண்டு கொண்டாட்டம்.. விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல்.. தமிழ்நாடு காவல்துறை

 கலைஞர் செய்திகள்  - KL Reshm  : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக காவல்துறையினர் 932 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக தமிழ்நாடு அரசு சில விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது,
ஓவர் ஸ்பீடாக வண்டி ஓட்டக்கூடாது என்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
 மேலும் ஊர்காவல் படையைச் சேர்ந்த 1,500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக 368 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. பைக் ரேஸைத் தடுக்க 25 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.



இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட புத்தாண்டு, சென்னையிலும் கோலாகலமாக மக்கள் கொண்டாடினர். அப்போது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக 572 வாகனங்கள் என மொத்தம் 932 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை: