வெள்ளி, 6 ஜனவரி, 2023

Who Killed Malcolm X சீரிஸ் நெட்பிலிக்ஸில்... Abdur ரின் வரலாறும் இதில் இருக்கிறது

 சுமதி விஜயகுமார்  :   Malcolm X இறக்கும் பொழுது Abdur Rahman Muhammed வயது 3. Malcolmன்வரலாறு வேறு யாருக்கும் அதிகப்படியாக தெரிந்திருக்குமேயானால் அது Abdurக்கு தான் தெரியும். தன் 24 வயதில் Malcolmன் போதனையால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். சிறிய வயதில் இருந்து Malcolm போதனைகளை மட்டுமல்ல , அவரது வாழ்க்கையையும் தொடர்ந்து வந்த Abdurருக்கு ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. '400 பேர் கூடிய கூட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட Malcolm க்கு உண்மையிலேயே நீதி கிடைத்ததா?' எத்தனை முறை அதை பற்றி சிந்தித்தாலும் அவருக்கு கிடைத்த ஒரே பதில் 'இல்லை'.
1965ல் படுகொலை செய்யப்பட்ட Malcolm கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்ட நபர்கள் 3 பேர். ஆனால் Abdur ரின் ஆராய்ச்சி படி அந்த கொலையில் ஈடு பட்டவர்கள் 5 பேர். malcolm சுட்டு வீழ்ந்தவுடன் , அவரின் மெய்காவலர் , தப்பி ஓடிய ஐவரில் ஒருவர் மேல் சேரை தூக்கி எரிய, அவன் தடுமாறி விழ மக்கள் அவனை அங்கேயே கொலை செய்ய எத்தனிக்க, அவனை காப்பாற்றி சிறைக்கு அனுப்பியது போலீஸ். Hayer எனும் அவனுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். Butler , Johnson. கைதான சமயத்தில் இருந்து இறுதி வரைக்கும் 'நான் இதை செய்யவில்லை' என்று அவர்கள் இருவர் மட்டுமில்லை, Hayer ரும் அவர்களுக்கு இதில் பங்கில்லை என்று சேர்ந்தே சொன்னான். யாரும் செவி சாய்க்கவில்லை. Johnson 10 ஆண்டுகளிலேயே இறக்க, Butler தன் குடும்பத்தை இழந்து தனி மரமாய் இருக்கிறார்.



சில ஆண்டுகளில் Hayer மற்ற நான்கு பேர் பெயர்களையும் வெளியிடுகிறான். Malcolm உடல் முழுக்க குண்டுகள் துளைத்தாலும் அவரின் உயிரை மாய்தது அவரது நெஞ்சில் பாய்ந்த குண்டினால் தான். அதனால் நெஞ்சில் குண்டு செலுத்திய William Bradley தான் கொலையாளி , மற்றவர்கள் கொலை செய்ய முயற்சித்தவர்கள். அந்த வில்லியம் பிராட்லியை எளிதாகவெல்லாம் Abdur ரால் கண்டு பிடிக்க முடியவில்லை . அவன் தனது பெயரை மாற்றி கொண்டான். அவன் புதிய பெயர் , இருப்பிடம் என அனைத்தையும் அறிந்து கொண்ட Abdur அவனை சந்திக்க முடிவெடுத்த போது , அவன் காலமாகிவிட்டான்.  ராஜ மரியாயத்தையுடன் அடக்கமும் செய்யப்பட்டான்.அவ்வளவு வருட உழைப்பும் உண்மையான குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தண்டனை வாங்கி கொடுக்கவே. காலம் , நேரம் , உழைப்பு அனைத்தும் வீணானது போல உணர்ந்தார் Abdur.

Malcolm ஐ கொலை செய்தவர்களில் ஒருவன் சிறை தண்டனை பெற , மற்ற நால்வரும் வயது முதிர்வால் இறந்துவிட்டார்கள். தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த இரு அப்பாவிகளின் ஒருவர் இறந்து விட, Butler ரிடம் செல்கிறார் Abdur . தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த நிரபராதிகள் அரசின் மேல் வழக்கு தொடுக்கலாம் என்று கூற 'எனக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் சிறையிலேயே தொலைந்து விட்டது. நான் கொலை செய்யவில்லை என்று சொல்லிய போது மக்கள் நம்பினாலும் , இவர்கள் (வெள்ளையர்கள்) நம்பவில்லை. இப்போது நான் அவர்களை நம்பவில்லை' என்று கூறினார். 'உங்கள் சார்பில் நான் வழக்கு தொடுக்கவா? சம்மதிப்பீர்களா?' என்று Abdur கேட்க , ' அதில் எனக்கொன்றும் இல்லை. உங்கள் விருப்பம்' என்றார் Butler.
சென்ற வாரம் Butler , Johnson இருவரையும், சரியான சாட்சியங்கள் இருந்த போதிலும் , அதை முறையாக விசாரிக்க தவறியதால் $36 மில்லியன் (ரூ 360 கோடி)நஷ்ட ஈடாக Butler ருக்கும் , Johnson குடும்பத்திற்கும் அறிவித்திருக்கிறார்கள்.
தனக்கு மிக பிடித்த தலைவனுக்காக ஒருவன் என்ன செய்து விட முடியும் என்ற கேள்விக்கு, Abdur விடையளித்து விட்டார். இதைவிட ஒரு தலைவனுக்கு ஒரு உன்னதமான பரிசினை கொடுத்து விடமுடியுமா என்ன!

பி கு : Malcolm X திரைப்படமாக வந்திருக்கிறது, Malcolm ன் பேச்சுக்கள் இணைய தளத்தில் விரவிக்கிடக்கின்றன. Who Killed Malcolm X என்ற சீரிஸ் நெட்பிலிக்ஸில் இருக்கிறது. அதில் Abdur ரின் உழைப்பையும் malcolmன் வரலாறும் இருக்கிறது. 6 எபிசொட்கள் தான். 2020ல் வெளியானதை தொடர்ந்து , 2 ஆண்டுகள் கழித்து இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.


சுமதி விஜயகுமார்  :    ·
Erik Cantu தன் காரில் அமர்ந்து பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது போலீசால் சுடப்பட்டான். அவனுக்கு வயது வெறும் 17. Jayland Walker , 25 வயது. 8 போலீசால் 46 முறை சுடப்பட்டார். Patrick Lyola  26 வயது , பின் மண்டையில் போலீசால் சுடப்பட்டு இறந்தார்.Donovan Lewis 20 வயது , தன் படுக்கையறையில் போலீசால் சுட்டு கொல்லப்பட்டார். காரை சிக்னலில் நிற்காமல் சென்றது . காரில் போலியான நம்பர் plate வைத்தது. மிஞ்சி போனால் திருட்டு அல்லது துப்பாக்கி வைத்திருந்தல் தான் அவர்கள் செய்த குற்றம்.இவையெல்லாம் கடலில் சிறு துளிகள் தான். அவர்கள் எல்லாம் சுட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் அவர்கள் செய்த அல்லது செய்யாத தவறுகளுக்காகவெல்லாம் இல்லை. 'உங்கள் மதத்திற்காக நீங்கள் கொள்ளப்படுவதில்லை . உங்கள் நிறத்திற்காக கொல்லப்படுகிறீர்கள்' என்று 50 வருடங்களுக்கு முன்னர் ஒலித்த அந்த குரல் தான் இன்றைக்கும் எதிரொலிக்கிறது.

கறுப்பின மக்கள் விடுதலைக்காக போராடியவர்கள் பட்டியலை எடுத்தால் முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது நெல்சன் மண்டேலாவாவோ மார்ட்டின் லூதர் கிங்காகவோ இருக்கும். இவர்களை எல்லாம் விட அமெரிக்கா ஒரு குரலுக்கு அஞ்சியது என்றால் அது Malcom X ன் கர்ஜனைக்குத்தான். 'அது என்ன Malcolm X , உங்களுக்கு இரண்டாம் பெயர் (surname) கிடையாதா? பெயர் மாற்றத்தை பதிவு செய்துவிடீர்களா?' என்று ஒரு வெள்ளைக்காரர் கேட்க 'Jones என்றோ Smith என்றோ எனக்கு வைக்கும் பெயர்கள் , என் பூட்டனுக்கு அவரின் முதலாளி வைத்த அடிமை பெயர். அந்த அடிமை பெயர் எனக்கு தேவையில்லை' என்றார். மார்ட்டின் லூதர் கிங் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் Malcolm என்றாலும் இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் விமர்சனங்களை வைத்துள்ளார்கள். இருவருக்கும் இலக்கு ஒன்று தான் என்றாலும் வழிகள் வேறு.

'I have a dream ' என்று ஆரம்பிக்கும் கிங் தன் மக்களுக்கு போதித்தது அமைதியான சமத்துவத்தை. Malcolm மோ மயிலே மயிலே என்றால் இறகு போடாது எனும் பொருள் பட 'ஒரு வெள்ளையன் உங்கள் கன்னத்தை அடித்து விட்டு மறுகன்னத்தை காட்ட சொன்னால் , அவன் கன்னத்தை நீங்கள் காட்ட சொல்லுங்கள்' என்றார்.  எந்த வன்முறையையும் தூண்டாதவர் என்ற போதிலும் கறுப்பின மக்கள் திருப்பி அடிக்காமல் எழுச்சி வராது என்று சொல்லில் மட்டும் இல்லை செயலிலும் காட்டிவர். ஒரு எதிரி இரு எதிரி என்றெல்லாம் இல்லை. திரும்பி பக்கமெல்லாம் எதிரிகள் தான். இவ்வளவு எதிரிகளுக்கு மத்தியில் வாழ உங்களுக்கு பயமாக இல்லையா என்ற கேட்ட போது 'இல்லை , நான் இறந்து 20 ஆண்டுகள் ஆகியதாகவே கருதுகிறேன். யாருக்காகவும் எதற்காகவும் எனக்கு பயம் இல்லை' என்றார்.தன் மனைவி குழந்தைகள் மற்றும் 400 சாட்சிகளுக்கு முன்னர் , மேடையில் 21 குண்டுகள் உடலை துளைக்க இறந்து போகும் போது அவருக்கு வயது 39.


ஒரு திருடனாக , பெண்கள் தரகனாக தான் வாழ்க்கையை துவங்கினார் Malcolm.கறுப்பின மக்களில் சிறைக்கு செல்லாதவர்களை சுலபமாக எண்ணி விடலாம். வறுமை மட்டும் காரணமில்லை. கறுப்பர்கள் என்றால் திருடர்கள் தான் என்பது அமெரிக்காவில் எழுதப்படாத சட்டம். அமெரிக்க முதலாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் வேலையின்மையை கட்டுப்படுத்தவும் அதிக அளவிலான கறுப்பின மக்கள் சிறைக்கு அனுப்பப்படுவது ஒரு பெரிய அரசியல் .சிறையில் இருக்கும் பொழுது இஸ்லாத்தை தழுவினார்.

அமெரிக்காவின் மிக பிரபலமான மத போதகரினால் ஈர்க்கப்பட்டு அவருக்காக பணிபுரிந்தார். அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் , தனக்கான ஒரு இயக்கத்தை துவங்கி , உலக தலைவனாக வலம் வர ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள்ளாகவே படுகொலை செய்யப்பட்டார். அவரின் பேச்சுகள் யூடியூபில் காணக்கிடைக்கிறது. அவரது உடல் மொழியும் , வார்த்தை உச்சரிப்பும் , குரல் வசீகரமும் நம்மை கட்டி போடுமென்றால். அவரின் கருத்துகள் சிந்தனையில் புதிய ரத்தத்தை பாய்ச்சும்.

இவ்வளவு ஆண்டுகள் கழித்து Malcolm ன் வாழ்க்கை வரலாறை திரும்ப பார்க்க வேறு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. Abdur Rahman Muhammed.

கருத்துகள் இல்லை: