வெள்ளி, 29 ஏப்ரல், 2022

பஞ்சாபில் சிவசேனா-காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடும் மோதல்- வாள் சண்டை! போலீஸ் துப்பாக்கிசூடு!

  Nantha Kumar R  -   Oneindia Tamil :  சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று சிவசேனாவுக்கும்(பால்தாக்கரே), காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது.
ஒருவரையொருவர் கல்வீசி தாக்கியதோடு, வாள் சண்டையிட்டனர். நிலைமை மோசமானதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சி அமைத்துள்ளது. பகவந்த் மான் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று பஞ்சாப் பாட்டியாலா டவுனில் சிவசேனாவை(பால்தாக்கரே) சேர்ந்தவர்கள் ஊர்வலம் செல்ல முடிவு செய்திருந்தனர்.


அதாவது பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் சிவசேனா அமைப்பினர் ஊர்வலத்துக்கு முடிவு செய்திருந்தனர். அதன்படி இன்று பட்டியாலாவில் உள்ள ஆர்ய சமாஜ் சவுக்கில் இருந்து காளி கோவில் வரை சிவசேனா ஊர்வலமாக புறப்பட்டது. இதற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பாட்டியாலாவில் உள்ள காளி கோவில் அருகே சென்றபோது இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி கைக்கலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதோடு, கல்வீச்சிலும் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த வாள் மூலம் சண்டையிட்டனர். இதனால் அந்த இடம் போர்களமாக காட்சியளித்தது.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அது சிரமமாக இருந்தது. இதையடுத்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து வன்முறையாளர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த மோதலில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், ‛‛பஞ்சாப்பில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. மாநிலத்தில் பொது அமைதி மற்றும் சகோதரத்துவம் காக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்'' என கூறியிருந்தார். மேலும் அவர் டிஜிபி பாவ்ராவுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து பாட்டியாலா டவுனில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: