வெள்ளி, 1 ஏப்ரல், 2022

தமிழகத்தில் காங்கிரஸ் செல்வாக்கு சரிகிறதா?

 மின்னம்பலம் : டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக உள்ளிட்ட பிற கட்சியினருடன் உரையாடிக் கொண்டிருக்கும் படங்களை அனுப்பியது.
அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு
வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
"டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவிற்காக சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது டெல்லியில் உள்ள தமிழர்களை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்த பேச்சு வந்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மற்ற கட்சிகளின் உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவாதமும் கொஞ்ச நேரம் நடந்திருக்கிறது.
அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி டிஜிட்டல் மெம்பர்ஷிப் என்ற வகையில் மின்னணு முறையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருவது பற்றி ஸ்டாலின் சீனியர் நிர்வாகிகளுடன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.



'நாம் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து ஆவலாக இருக்கிறோம். ஆனால் எனக்கு வந்த ரிப்போர்ட் படி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது' என்று தனது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் திமுக நிர்வாகி களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு பின்னணியாக சில விஷயங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி வருகிறார்கள். அவர்கள் சில நேரம் தங்கள் கட்சியின் உள் விவகாரங்கள் குறித்தும் ஸ்டாலினிடம் மனம் திறந்து பேசி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி 2020ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் டிஜிட்டல் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியது. அதன்பிறகு பேரன்ட் பாடி எனப்படும் தாய் கட்சியிலும் டிஜிட்டல் மெம்பர்ஷிப் முறையைக் கொண்டுவந்தது.

காரணம் இதுவரை ஒவ்வொரு மாநில தலைவர்களும் இத்தனை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்து இருக்கிறோம் என்று ஒரு கணக்கை சொல்லி அதற்கேற்ற வகையில் ஒரு கட்டணத்தை தேசிய தலைமையிடம் கட்டி வந்தனர். அந்த கணக்குகளில் எந்த சரி பார்த்தாலும் எந்த ஆய்வும் கிடையாது.

அதனால்தான் காங்கிரஸின் உண்மையான பலம் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்பிய சோனியா காந்தி கடந்த 2021 நவம்பர் முதல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு டிஜிட்டல் முறையில் தான் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். முன்பெல்லாம் உறுப்பினர் சேர்க்கை என்றால் மொத்தமாக விண்ணப்பக் காகிதங்களை வாங்கிச் சென்று தங்கள் இஷ்டத்துக்கு பெயர், முகவரிகளை எழுதி அவற்றை மாநில தலைமையிடம் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கொடுத்து விடுவார்கள். இதிலே காட்டப்படும் கணக்கு என்பது நம்பகத்தன்மைக்கு உடையதாக இல்லை என்பதை உணர்ந்து தான் சோனியா காந்தி டிஜிட்டல் மெம்பர்ஷிப் முறையைக் கொண்டு வந்தார்.

அதாவது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் ஆகியவற்றின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும். உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்த பின் காங்கிரஸ் கட்சியின் பிரத்தியேக செயலியில் இருந்து உங்களுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபி நம்பரை பதிவிட்டால் அவர்கள் காங்கிரஸ் உறுப்பினராக இணைக்கப் படுவார்கள். ஒருவர் ஒரு முறைக்கு மேல் தங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்த முடியாது. இந்த அளவு தெளிவான மெக்கானிசத்தோடு டிஜிட்டல் மெம்பர்ஷிப் முகாம்கள் இந்தியா முழுதும் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இந்த முறையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார். ஆனால் தலைமையின் உத்தரவையடுத்து தமிழகத்திலும் டிஜிட்டல் மெம்பர்ஷிப் சேர்க்கை நடைபெற்றது. இதற்கான கண்காணிப்பாளராக அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாயின் மகன் கௌரவ் கோகாய் சத்தியமூர்த்தி பவனுக்கு கடந்த வாரம் வந்தார். தமிழகத்தில் நடந்த டிஜிட்டல் மெம்பர்ஷிப் பட்டியலைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து விட்டார்.

காரணம் சிலர் மட்டுமே ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்திருந்தார்கள். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 12551 உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார். இவர்தான் டிஜிட்டல் மெம்பர்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல செய்யூர் 9379, விளவங்கோடு 8992, செங்கம் 8359, காரைக்குடி 7672, உசிலம்பட்டி 6689, ஈரோடு கிழக்கு 6666, விழுப்புரம் 6266 உறுப்பினர்கள் டிஜிட்டல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் இருநூறு, முன்னூறு, நானூறு என நூற்றுக் கணக்கில்தான் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். விளாத்திகுளம் தொகுதியில் வெறும் 203 பேர் தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கவுரவ் கோகாய் நேரடியாகவே விசாரித்தபோது, 'எங்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்' என்று நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்து விட்டு டெல்லி சென்ற கவுரவ் கோகாய், தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மிக மந்தமாக இருக்கிறது. இது கவலைக்குரிய விஷயம் என ரிப்போர்ட் கொடுத்துவிட்டார்.

இந்த தகவல்கள் உளவுத்துறை மூலமாகவும் தமிழக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சிலர் மூலமாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றிருக்கிறது. இந்த விஷயத்தை தான் டெல்லியில் தனது சக மூத்த நிர்வாகிகளிடம் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிகரிக்க டெல்லி முயற்சி செய்தாலும் மாநிலத்தில் உள்ளவர்கள் எந்த ஒத்துழைப்பையும் கொடுப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். 'இப்படிப்பட்ட காங்கிரஸ்தான் இத்தனை சீட்டு வேண்டும் அத்தனை சீட்டு வேண்டும் என தேர்தல் நேரத்தில் நம்மை குடைந்து எடுக்கிறார்கள்" என சீனியர் நிர்வாகி ஒருவரும் கமெண்ட் அடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை முதல் திமுக தலைமை வரைக்கும் டிஜிட்டல் மெம்பர்ஷிப் மந்தமாக இருப்பது சென்று விட்டதை உணர்ந்த தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, இன்று ஏப்ரல் 1ஆம் தேதி தமிழக காங்கிரசில் துணை அமைப்பு நிர்வாகிகளை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்துகிறார்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்தது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப் மெசேஜை பார்த்துவிட்டு இது தொடர்பாக

ஒரு செய்தி என ஃபேஸ்புக் மெசஞ்சர் ஒரு தகவலை டைப் செய்தது.

"தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மிக மந்தமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதை தெரிந்தோ தெரியாமலோ பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்கான செயல் திட்டங்களில்... மாநிலக் கட்சிகளை போலவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்றுதான் தொடர் பொதுக் கூட்டங்கள் நடத்துவது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் கிட்டத்தட்ட முழுதாக நீக்கப்பட்டு வரும் நிலையில் இனி தமிழகத்தின் நகரங்கள், சிறு நகரங்கள், கிராமப்பகுதிகளில் பாஜகவின் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை அதிகப்படுத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார் அண்ணாமலை. புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கான முதல் டார்கெட்டாக இந்த பொதுக் கூட்டங்களை தான் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்" என்ற தகவலை அனுப்பிவிட்டு சைன் அவுட்டான

கருத்துகள் இல்லை: