மாலைமலர் : டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டி கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்தது.
அதன் அடிப்படையில் டெல்லியில் பிரமாண்டமாக தி.மு.க. அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று இந்த கட்டிடத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டெல்லி தி.மு.க. அலுவலக கட்டிட திறப்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ஏராளமானோர் திரண்டு வந்து மு.க.ஸ்டாலினுக்கு கும்ப மரியாதையும் வழங்கினர்.
இரவில் வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். நேற்று இரவு அங்கு அவர் தங்கினார். இன்று (வியாழக்கிழமை) காலை அவரை டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்தனர்.
அவர்களுடன் தி.மு.க. அலுவலக திறப்பு விழா தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டு சென்றார்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் மோடி-மு.க.ஸ்டாலின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். அதன்பிறகு தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
குறிப்பாக தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும் என்று கூறினார். மேலும் ஜி.எஸ்.டி. நிலுவை தொகையையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் டெல்டா விவசாயத்தை பாதிக்கும் வகையில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது பற்றியும் பிரதமரின் கவனத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு சென்றார். கர்நாடகாவின் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
அதுபோல கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்வது பற்றியும் பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார். தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதை பற்றியும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தனது கோரிக்கைகள் அனைத்தையும் அவர் மனுவாக தயாரித்து வைத்திருந்தார். அந்த மனுவை பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நீண்ட நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை சந்தித்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலை திட்டப்பணிகள் குறித்து பேசினார்.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்ற வளாகத்துக்கு புறப்பட்டு வருகிறார். அங்குள்ள 8-ம் எண் அறையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். அதன் பிறகு டெல்லி அக்பர் சாலைக்கு காரில் செல்கிறார்.
அங்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை மாலை 4.30 மணிக்கு சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை 10.30 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். டெல்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள நிர்மலா சீதாராமன் வீட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. அப்போது தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி இருவரும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பி வந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். நாளை மாலை 4.30 மணிக்கு டெல்லி உத்யோக் பவனில் மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேச உள்ளார். தமிழகத்துக்கு தேவையான தொழில் திட்டங்கள், கைத்தறி திட்டங்கள் தொடர்பாக அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
முன்னதாக, டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். வேறு சில கட்சி தலைவர்களுடனும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது தேசிய அரசியலில் மு.க.ஸ்டாலினின் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இந்த சந்திப்புகள் முடிந்த பிறகு சனிக்கிழமை காலை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனையும் நடைபெற உள்ளது. அதன்பிறகு மாலை 5 மணிக்கு டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடக்கிறது.
அந்த விழாவில் கலந்து கொண்டு அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்கிறார். இதற்காக டெல்லி தி.மு.க. அலுவலகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திறப்பு விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் சனிக்கிழமை இரவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்ப உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக