Chinniah Kasi : சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மாணவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் சக மாணவர்களால் 2017ஆம் ஆண்டிலிருந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து புகார் தெரிவித்த மாணவியை, பேரா.எடமன பிரசாத் சாதி ரீதியாக, அவமானப்படுத்தி, தொடர் தொந்தரவு கொடுத்துள்ளார். எனவே உள்புகார் கமிட்டியில் மாணவி புகார் செய்தார். விசாரணையில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி 3 முறை தற்கொலைக்கு முயற்சிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), சென்னை காவல் துறை ஆணையர், எஸ்சி, எஸ்டி ஆணைய தலைவர் உள்ளிட்டோருக்கு மாணவி புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பின்னர், தேசிய மகளிர் ஆணைய தலையீட்டிற்கு பிறகு, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, முனைவர் ரவீந்திரன், பேரா.எடமன பிரசாத், நாராயண் பத்ரா, சௌர்வதத்தா, அயன் பட்டாச்சார்யா ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. வழக்கு பதிந்து 10 மாதங்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவி பட்டியலினத்தை சார்ந்தவராக இருந்தும் குற்றமிழைத்தவர்கள் பட்டியலினத்தை சாராதவர்கள் என்ற வகையிலும், எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
இதையடுத்து, கடந்த 25ஆம் தேதி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரியை ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநிலச் செயலாளர் வி.பிரமிளா ஆகியோர் சந்தித்து புகார் அளித்ததுடன் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, மயிலாப்பூர் காவல் துணை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐஐடி முன்னாள் மாணவர் கிங்ஷூக்தேப் ஷர்மாவை தனிப்படை போலீசார் கொல்கத்தாவில் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக