Rajkumar R - Oneindia Tamil : டெல்லி : காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும், தமிழகத்தில் திமுகவுடன் இருப்பது போல் அகில இந்திய அளவில் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்புறவை காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் தலைநகர் டெல்லியில் வினோத்நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது எனவும், ஏசி வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கினார்.
பள்ளியின் கீழ் தளத்தில் உள்ள அறையில் மாதிரி பள்ளி தொடர்பான வீடியோ திரையிடப்பப்பட்டது. மேலும், பள்ளியின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
பின்னர் செய்தி நிறுவனமான பிடிஐக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது தேசிய அரசியல், காங்கிரஸ் கட்சியுடனான உறவு, பாஜக குறித்த தனது பார்வை, தமிழக அரசியல் நிலவரம் குறிப்பாக தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த பார்வை பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசியதாக பிடிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும், தமிழகத்தில் திமுகவுடன் இருப்பது போல் அகில இந்திய அளவில் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்புறவை காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தேசிய அரசியலில் திமுக மிக முக்கியமானது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசியலில் திமுக மிக முக்கியமானது எனக் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின் திமுக இந்திய நாடாளுமன்றத்தில் தற்போதைய நிலையில் 3வது பெரிய கட்சி எனவும், நாட்டின் பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளை தீர்மானிப்பதில் மிக முக்கியத்துவம் வய்ந்தது எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான உறவு நன்றாக உள்ளது, ஆனால் நீட் விவகாரத்தில் அவர் முடிவெடுப்பதில் அதிக தாமதம் உள்ளது, அது சரியல்ல எனக் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக