Prasanna Venkatesh - GoodReturns : இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களின் ஒன்றாகத் திருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வேகமாக வளர்ச்சி அடைந்த வந்த காலகட்டத்தில் படிப்பை முடித்த கையோடு 1983 ஆம் ஆண்டில் அனில் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் ஒரு நிர்வாக அதிகாரியாகச் சேர்ந்தார்.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
2002ஆம் ஆண்டுகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியம் 15 பில்லியன் டாலர் அளவிலான மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதே ஆண்டுத் திருபாய் அம்பானி காலமானார், இதன் பின்பு பல பிரச்சனைகளுக்குப் பின்பு அம்பானி சகோதரர்கள் மத்தியில் சொத்து, வர்த்தகம் என அனைத்தும் பிரிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் பவர்-ன் வரலாறு காணாத சிறப்பு ஐபிஓ மூலம் அனில் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 2008ஆம் ஆண்டில் 42 பில்லியன் டாலராக உயர்ந்து உலகின் 6வது பெரும் பணக்காரராக உயர்ந்தார்.
ஆனால் இன்று லண்டன் நீதிமன்றத்தில் தனது 0 டாலர் சொத்து மதிப்பு மட்டுமே உள்ளது என்று அறிவித்தார். 2020ல் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது எப்படி..? எதனால் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்தார்..?
2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி மொபைல் சேவை வழங்கும் நிறுவனமாக இருந்தது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். இந்நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக அனில் அம்பானி சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்தார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதிகரித்து வரும் கடன்களை அடைக்க, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தென்னாப்பிரிக்க மொபைல் நிறுவனமான MTN உடன் முக்கியமான ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தது.
இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு டெலிகாம் நிறுவனத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு மெகா மொபைல் சேவை நிறுவனத்தை உருவாக்க திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் சில சட்ட சிக்கல் காரணமாக இந்த ஒப்பந்தம் தோல்வியடைந்தது, இதனால் அனில் அம்பானிக்கு கடன் சுமை அதிகரிக்கத் துவங்கியது.
ஏப்ரல் 2011-இல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முதலீடு செய்த நிறுவனங்கள் பெயரில் தவறான விலையில் மொபைல் நெட்வொர்க் உரிமங்களைப் பெற முறைகேடு செய்ததாக அனில் அம்பானியின் நிர்வாக இயக்குநர் மற்றும் இரண்டு துணைத் தலைவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இதோடு 2ஜி அலைக்கற்றை வழக்கில் அனில் அம்பானிக்கு தொடர்பு இருப்பதாகச் சிபிஐ விசாரித்தது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதன் மூலம் இவரது நிகரச் சொத்து மதிப்பு 4 மடங்கு சரிந்து 8.8 பில்லியன் டாலராகக் குறைந்தது.
2012 ஆம் ஆண்டில் சிபிஐ விசாரணைக்கு மத்தியில், அனில் அம்பானி ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்கக் கூடுதலான கடன் வாங்கினார். அனில் அம்பானியின் தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மூன்று சீன வங்கிகளிடமிருந்து சுமார் 1.2 பில்லியன் டாலர் கடனைப் பெற்றுள்ளது.
இதுதான் தற்போது அனில் அம்பானியில் கழுத்தை நெறுக்கி வருகிறது.
2016ல் அனில் அம்பானிக்குச் சொந்தமாகப் பல நிறுவனங்கள் கடன் மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களில் சிக்கின. ஒருபுறம், ரிலையன்ஸ் பவர் தனது சொத்துக்களை விற்க வேண்டியிருந்தது. மறுபுறம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3 ஆண்டுகளில் 98 சதவீத மதிப்பீட்டை இழந்தது.
ஒரு காலத்தில் இந்தியாவிலேயே முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2016ல் புதிதாக அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ எதிராகப் போட்டிப்போட முடியாமல் தவித்தது. இதனால் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஸ்வீடிஷ் நெட்வொர்க் நிறுவனமான எரிக்சனுக்குச் சுமார் 80 மில்லியன் டாலர் அளவிலான கடனை செலுத்த வேண்டியிருந்தது, அதை அவர் திருப்பிச் செலுத்த தவறியது ஆர்காம். இதனால், எரிக்சன் நிறுவனம், அனில் அம்பானிக்கு எதிராக 2016ல் வழக்குத் தொடுத்தது.
இதுதான் அனில் அம்பானியை திவாலாக்க தூண்டியது.
எரிக்சன் தொடுத்த வழக்கில் 2019இல், இந்திய உச்ச நீதிமன்றம் அனில் அம்பானிக்கு வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது சிறைக்குச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் அனில் அம்பானியின் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி எரிக்சனுக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தி, அனில் அம்பானியை சிறைக்குச் செல்லாமல் காப்பாற்றினார்.
ரிலையன்ஸ் ஜியோவின் ஆதிக்கத்தால் இந்தியாவில் பல நிறுவனங்கள் அடுத்ததடுத்து திவாலாகியும், விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2019 இல் திவாலானதாக அறிக்கை தாக்கல் செய்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவால் ஆனதாக அறிவித்த போது சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கி, சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மற்றும் சீனா வளர்ச்சி வங்கி ஆகிய மூன்று சீன வங்கிகளிடமிருந்து வாங்கிய 1.2 பில்லியன் டாலர் கடனை முழுமையாகச் செலுத்தவில்லை.
இதற்காகச் சீன வங்கிகள் லண்டனில் வழக்குத் தொடுத்தது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சுமார் 700 மில்வியன் டாலர் அளவிலான கடனை செலுத்த வேண்டும்.
பிப்ரவரி 2020 இல், அனில் அம்பானி தனது கடன்களைக் கணக்கில் கொண்டால் தனது நிகரச் சொத்து மதிப்புப் பூஜ்ஜியம் என அறிவித்தார்.
அவர் வறுமையில் உள்ளதாகவும், சீன வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய 700 மில்லியன் டாலர் தொகைக்கு இணையாகத் தன்னிடம் எந்த அர்த்தமுள்ள சொத்துக்களையும் இல்லை என்று கூறினார்.
இப்படித் தான் அனில் அம்பானி 42 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது பெரும் பணக்காரர் என ஹீரோ அந்தஸ்தில் இருந்து தற்போது ஜீரோவாக மாறியுள்ளது. அளவுக்கு மீறிய கடன் எப்போதுமே ஆபத்து தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக