tamil.samayam.com : புதுச்சேரியில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார். அங்கு, என்.ஆர்.காங்கிரஸ் - 10, பாஜக - 6, சுயேச்சைகள் 6, திமுக - 2 மற்றும் காங்கிரஸ் - 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
புதுச்சேரி அமைச்சரவையில் பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதோடு, சபாநாயகர் பொறுப்பும் பாஜகவின் ஏம்பலம் செல்வத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே முதலமைச்சர் பதவிக்கு போட்டியில் இருந்த நமச்சிவாயம் உள்துறை, கல்வி, பொதுப்பணி உள்ளிட்ட முக்கிய துறைகளை தன் வசம் வைத்துள்ளார்.
ஆரம்பம் முதலே முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக செயல்படுவதாகவும், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
சுயேச்சைகளை தங்கள் வசம் இழுத்து வைத்துள்ள பாஜக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர், முதல்வருமான ரங்கசாமிக்கு தொடர் தொல்லைகள் கொடுத்து வருகிறது. அதற்கு சாட்சியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாரிய தலைவர் பதவி கொடுக்கவில்லை எனக் கூறி ஆளுங்கட்சிக்கு வழங்கிய ஆதரவை சுயேச்சைகள் போர்க்கொடி தூக்கினர்.
பின்னர், அவர்களை அழைத்து பேசிய சபாநாயகர் சமாதானம் செய்தார். இப்படி, ஆரம்பம் முதலே என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி நீர் பூத்த நெருப்பாய் விரோத போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து அகற்றிவிட்டு பாஜக தனித்து களம் காண பாஜக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளதாகவும், அந்த முடிவுக்கு பாஜக மேலிடம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் சுரானா கூறியுள்ளார். இதனால், புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்க பாஜக திட்டமிட்டுள்ளதாக எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பாஜக நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளோம். அதே நேரத்தில் 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் மட்டும் கூட்டணி பொருந்தாது என விளக்கமளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக