திங்கள், 28 மார்ச், 2022

ஆஸ்கர் மேடையில் அறை விட்ட வில் ஸ்மித்துக்கு எழும் ஆதரவும் விமர்சனமும் - ஒரு விரைவுப் பார்வை

 .hindutamil.in : லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 94-வது ஆஸ்கர் விருது விழாவில், "உங்கள் வாயிலிருந்து என் மனைவியின் பெயர் இனியும் வரக் கூடாது" என்று எஃப் சொற்களுடன் கடுமையாகக் கூறிய வில் ஸ்மித்தின் குரல் இன்னமும் சிலர் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆஸ்கர் விருது விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார்.
அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா ஸ்மித்தைப் பார்த்து, "ஜிஐஜேன் (அப்படத்தின் மைய கதாப்பாத்திரமான கதாநாயகி மொட்டை அடித்திருப்பார்) படத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா?" என்று நகைச்சுவை தொனியில் கேட்டார்.


இதனால் கோபம் அடைந்த வில் ஸ்மித் மேடையில் விர்ரென நடந்து சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் வேகமாக அறைந்தார். இக்காட்சி நிகழ்ச்சிக்காக சித்தரிக்கப்பட்டது என ஆஸ்கர் விருது விழா அரங்கில் இருந்த அனைவரும் சிரிக்க, மேடையிலிருந்து கீழறிங்கிய வில் ஸ்மித்தோ, கிறிஸ் ராக்கை நோக்கி "உங்கள் வாயிலிருந்து என் மனைவியின் பெயர் இனியும் வரக் கூடாது" என்று கோபமாக எஃப் சொற்களுடன் கத்தினார். இதனைத் தொடர்ந்துதான் வில் ஸ்மித் ஆத்திரமடைந்தே கிறிஸ் ராக்கை அறைந்திருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்தது. ஸ்மித்தின் இந்த எதிர்வினையை கிறிஸ் ராக் ஆரோக்கியமாகவே கையாண்டார்.

ஆஸ்கர் விருது விழாவை விட, வில் ஸ்மித் மேடையில் நடந்துகொண்ட விதமே தற்போது பேசும் பொருளாயுள்ளது. ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் நடந்துகொண்ட விதத்திற்கு வழக்கபோல் மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து தங்கள் ஆதரவையும், விமர்சனத்தையும் வழங்கி வருகிறார்கள். அதில் பெரும்பாலனவர்கள் இந்த விவகாரத்தில் வில் ஸ்மித்திற்கு ஆதரவே அளித்திருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், மேற்குலகில் காலம் காலமாக திரைத் துறையில் கடந்து போகக் கூடியதாக இருந்த பாடி ஷேமிங் எனப்படும் உருவக் கேலிகளுக்கு ஸ்மித் ஆற்றிய எதிர்வினை.

ஒரு பெரும் நட்சத்திரம் மேடை, புகழ், அவப்பெயர் என்று எதனையும் பொருட்படுத்தாது தனது மனைவியை உருவக் கேலிக்கு இரையாக்கமால் அவர் பக்கம் நின்றிருக்கிறார். அவரது அன்பின் பக்கம் நின்றிருக்கிறார். அதனால் இங்கு வில் ஸ்மித் ஜெயித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது வில் ஸ்மித் மனைவி போல அலோபீசியா நோயினால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு ஸ்மித் ஆற்றிய எதிர்வினை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் தாங்களாக தெரிய நம்பிக்கையை அளித்திருக்கும்.

இந்தியா போன்ற நாடுகளில் உருவக் கேலிகள் என்றுமே தவறாக தெரிந்ததில்லை. நமது திரைப்படங்கள் பலவும் உருவக் கேலிகளையும், நிறக் கேலிகளையும்தான் மலிந்து கொட்டுகின்றன. நகைச்சுவையின் கருவாக கொண்டுள்ளன. உதாரணத்துக்கு இன்ஸ்டாகிராமில் கடந்த ஆறு மாதங்கமாக ஒரு ரீல் வலம் வந்து கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். வெள்ளை நிற தோலுடைய பெண்கள் ஒரு செயலியைப் பயன்படுத்தி கருப்பாக தோன்றி வருத்தமாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் மீண்டும் வெள்ளையாக தோன்றியவுடன் மகிழ்ச்சியாகத் தோன்றுவர்கள் இதற்கு பின்னணியில் இசை ஒன்று ஒலித்துக் கொண்டிருக்கும். இந்த ரீல்கள் இந்தியா தவிர வேறு எந்த நாட்டிலாவது வந்திருந்தால் இந்நேரம் அவை நீக்கப்பட்டு, இன்ஸ்டாகிராம் மன்னிப்பு கேட்டிருக்கும். ஆனால், இங்கு?

இவ்வாறு நாம் எந்த எதிர்ப்பு தெரிவிக்காத உருவக் கேலிகளுக்கு ஸ்மித் மாதிரியான ஒரு நட்சித்திரம் எதிர்வினை ஆற்றியிருப்பது அவசியமானது, நிறவெறிக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரத்தின் ஆரோக்கியமான விளைவு தற்போதுதான் மேற்கத்திய நாடுகளில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், உருவக் கேலிக்கு எதிரான அவரது இந்தச் செயல் பாரட்டப்படக் கூடியது.

ஆனால், நூற்றாண்டுகளாக அடிமையாக இருந்த ஓர் இனம், கடந்த 50 வருடங்களில்தான் தங்கள் மீதான அனைத்து கைவிலங்கையும் உடைத்துக்கொண்டு மெல்ல, மெல்ல மேலேறி வந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், வில் ஸ்மித்தின் இந்த நடவடிக்கையை ஏராளமான கருப்பின மக்கள் விமர்சித்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் அதுதான் பிரதிபலித்துள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் 6 கருப்பின ஆண்கள்தான் ஆஸ்கர் வென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், மேடையில் கிறிஸ் ராக்கை வார்த்தைகளால் கடுமையாக விமர்சிக்காமல் வன்முறையில் ஈடுபடுவது நிச்சயம் கண்டித்தக்கது என்று கருப்பின எழுத்தாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இறுதியாக, உருவக் கேலியை நீங்கள் நிச்சயமாக விமர்சிக்க வேண்டும். ஆனால், இவ்வாறு அல்ல... ஸ்மித். எவ்வாறாயினும் இது வன்முறை... நீங்கள் இந்த வன்முறையை அனைவருக்கும் முன்பும் நிகழ்த்திவிட்டு, அன்பும் கடவுளும் இதனை செய்ய வைத்தது என்று கண்ணீருடன் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

தவறவிடாதீர்!

கருத்துகள் இல்லை: