செவ்வாய், 27 ஏப்ரல், 2021

"தேன்" - சமூக போராளிகளும் பார்க்க மறந்து போன குரங்கணி காட்டு திரைப்படம்

 

கதிர்மாயா கண்ணன் : தேன் திரைப்படம் பார்த்தேன். அழுதேன். படம் குறித்து நீளமாகவும், நீலமாகவும், நிலமாகவும் பேச வேண்டும். கர்ணனை கொண்டாடிய நாம், தேனை கொண்டாட தவறி விட்டோமே. கற்பனை கதை என்று சொல்லி விட்டு, அப்பட்டமாய் குரங்கணி மலையில் வாழும் மக்களின் வலிகளை, வாழ்வியலை போட்டு உடைத்துள்ளது. காலம் காலமாய் மலையோடு வாழும் மக்களை வெளியேற்றத் துடிக்கும் அதிகாரத்தை போகிற போக்கில் தோலுரித்துள்ளது. ஆரம்ப கல்விக்கு கூட மலைகளில் நீண்ட தூரம் நடக்கும் குழந்தைகள், இந்த மலைப்பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளிகளுக்கான சாட்சியம். மரத்தை, மலையை, வானத்தை வணங்கிக் கொள்ளும் மக்களிடம் தமிழர் மெய்யியல் உயிர்ப்போடு மலைகளில் இன்னமும் இருப்பதற்கான சான்று. மலை உச்சியில் இருக்கும் ஆலைக் கழிவுகளால் தண்ணீர் நஞ்சாகி மக்களை மெல்லக் கொல்லும் அரசியலை சொல்கிறது படம்.

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், ஸ்கேன் எடுக்கவும் பணம் பறிக்கும் அவலத்தை அப்படியே காட்டி இருக்கிறார்கள். அதிலும் சில நல்ல மருத்துவர்கள் இருப்பதையும் காட்டத் தவறவில்லை.
ஆதார் எடுக்க, ரேஷன் கார்டு வாங்க, காப்பீட்டு அட்டை வாங்க என அலையும் மக்களின் வலி, ஒவ்வொரு இடங்களிலும் பெறப்படும் கையூட்டு என காட்சிகள் நின்று பேசுகின்றன.
கடைசியில் பிணத்தை கொண்டு செல்ல ஆம்புலன்சு கிடைக்காமல் தவிப்பது, ஆம்புலன்சு பணியாளர்கள் பேரம் பேசுவது, தாயின் பிணத்தை கொண்டு செல்ல பணமின்றி குழந்தை பிச்சை எடுப்பது என மனதை உருக்குகிறது. வாய் பேச இயலாத குழந்தை செய்கை மொழியில் பிச்சை கேட்கும் காட்சியில் வெடித்து அழுதுவிட்டேன். என்னை அவ்வளவு பலகீனமாக்கிவிட்டது அந்த காட்சி. நான் இந்த மக்களோடு பழகியவன், அவர்களின் வலி உணர்ந்தவன். அவர்கள் மீதான அன்பு கண்களை நீர்ப்பூக்க வைத்தது.
கடைசியில் பிணத்தை சுமந்து கொண்டு மலைக்கு செல்வது என படம் முழுக்க அரசியல் பேசுகிறது.
குரங்கணி தீ விபத்து, அதன் பின்னணி அரசியல், தீ விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட மக்களையே வதைக்கும் வகையில் அவர்கள் காலம் காலமாக பயன்படுத்திய மலைப்பாதையை மூடுவது எல்லாம் படத்தின் காட்சிகள். ஆனால், அவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நம் கண்முன்னே நடந்த உண்மை சம்பவங்கள்.
கர்ணன், காலா படங்களுக்கு நீலம் என்ற நிறம் இருந்தது. ஆனால், 'தேன்' நீலத்தில் அடங்கவில்லை போலும். இது அந்த மலையின் நிறம். அந்த மக்களின் அழுகை, ஓலம், பிரசவ வலி எல்லாம் அந்த மலைகளுக்குள்ளேயே ஓங்கி அடங்கிப் போய்விடுகிறது. அதை வெளியே கொண்டு வந்து கேட்கச் செய்துள்ளார் இயக்குனர். அந்த சத்தத்தை இன்னும் அதிகமாய் கொண்டு சேர்க்க வேண்டும்.
தேன் இன்னும் அதிகம் பேசப்பட வேண்டும். பேசுவோம்! பேசுவேன்!
தேன் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் அகம் நிறைந்த வாழ்த்துகளும், பேரன்பும்!
கதிர்மாயா கண்ணன்
26 ஏப்ரல் 2021

கருத்துகள் இல்லை: