சனி, 1 மே, 2021

ஈவிஎம்களில் என்ன செய்ய முடியும்? திமுகவினரை அலர்ட் செய்த ஸ்டாலின்

ஈவிஎம்களில்  என்ன செய்ய முடியும்?  திமுகவினரை அலர்ட் செய்த ஸ்டாலின்

 minnambalam :மே 2ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நேற்று (ஏப்ரல் 30) மாலை காணொளி காட்சி வழியாக நடைபெற்றது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எக்சிட் போல் முடிவுகள் முன்னணி ஊடகங்கள் - கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் கூட்டணியில் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இவற்றில் கிட்டத்தட்ட அனைத்து எக்சிட் போல் கணிப்புகளுமே தமிழகத்தில் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. இந்த நிலையில்தான், “ஏப்ரல் 30 மாலை 5 மணிக்கு திமுக தலைவர் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தேதியான மே 2ஆம் தேதி வரையிலான காலத்தை திமுக கச்சிதமாகப் பயன்படுத்தி, வாக்கு எண்ணிக்கை நாள் அன்று எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் காணொளி வழியாக கூட்டம் நடத்தியது. திமுகவின் தலைமை சட்ட ஆலோசகரும், வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு மே 2ஆம் தேதி காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவது வரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி வகுப்பெடுத்தார்.

ஏற்கனவே திமுக தலைமையில் இருந்து கையேடு 13 என்று ஒரு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புக்லெட்டை மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த புக்லெட்டில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றியும் வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை அதை நாம் எப்படிக் கையாள வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த கூட்டத்திலும் என்.ஆர்.இளங்கோ கலந்துகொண்டார்.

மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “வேட்பாளர்கள் அனைவருக்கும் என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள்” என்று தொடங்கி, “கடந்த பத்து வருட காலமாக இந்தக் கட்சிக்காக இயக்கத்துக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்திருக்கீங்க. உங்கள் பணிகளுக்கு ஈடு செய்யவே முடியாது, உங்களுக்கு தலைவணங்குகிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் தொடங்கி, நாடாளுமன்றத் தேர்தல், பின் உள்ளாட்சித் தேர்தல், கிராம சபைக் கூட்டம், கொரோனா காலத்தில் ஒன்றிணைவோம் வா, எல்லாரும் நம்முடன், மக்கள் கிராம சபைக் கூட்டங்கள், சட்டமன்றத் தேர்தல் பணிகள் எனத் தொடர்ந்து நீங்கள் பணி செய்துகொண்டே வந்திருக்கீங்க. உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகிற நாள் மே 2.

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கப் போகிற நிலையில் நாம் இம்மியளவு கவனக் குறைவாக இருந்துவிடக் கூடாது. வாக்கு எண்ணிக்கை நாளில் நாம் என்ன செய்யணும்கிறதை ஏற்கனவே என்.ஆர்.இளங்கோ உங்களுக்கு எடுத்து சொல்லியிருக்கிறாரு. இப்ப மீண்டும் அவர் இங்க வந்திருக்காரு. உங்களுக்கு இன்னும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவரிடமே நீங்க கேட்டுக்கலாம்” என்று சொல்லி, என்.ஆர்.இளங்கோவைப் பேச அழைத்தார்.

என்.ஆர். இளங்கோ ஏற்கனவே மாவட்டம்தோறும் வாக்கு எண்ணிக்கை நாள் பற்றிய சிறப்புக் கூட்டங்களை நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தைப் பற்றி அறிந்த திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதை எங்கள் வேட்பாளர்களுக்கும் முகவர்களுக்கும் சொல்லுங்கள் என்று அவர்களும் ஸ்டாலினிடம் கேட்டனர். இதையடுத்து கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் என்.ஆர்.இளங்கோ தனியாக காணொளி முறையில் இதே கூட்டங்களை நடத்தினார்.

நேற்று நடந்த கூட்டத்திலும் அதில் முக்கியமான அம்சங்களை மீண்டும் நினைவுபடுத்தினார் என்.ஆர். இளங்கோ.

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட், விவிபி யூனிட் என்று மூன்று அலகுகள் உள்ளன. பேலட் யூனிட் என்பது வாக்குப் பதிவு தொடர்பானது. கன்ட்ரோல் யூனிட் என்பது வாக்குப்பதிவுக்குப் பிறகான முறை. இப்போது வாக்கு எண்ணிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டியது விவிபி யூனிட்டில்தான்.

தேர்தல் நடந்த 90 ஆயிரம் பூத்துகளிலும் இருந்து வரும் (கன்ட்ரோல் யூனிட்) மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிங்க் பேப்பர் ஸ்லிப் என்ற பட்டை சுற்றப்பட்டிருக்கும். அது ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் தரப்பட்டுள்ளது. நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படும் காகிதத்தைப் போன்ற இந்த பட்டை வாக்குப் பதிவு மையங்களில் கன்ட்ரோல் யூனிட்டைச் சுற்றி சுற்றப்பட்டிருக்கும். அதில் அந்தந்த பூத்தில் இருக்கும் முகவர்கள் அத்தனை பேரும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அந்தந்த பூத்தில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.


இப்போது அந்த இயந்திரங்கள் எல்லாமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருக்கும். அந்த பிங்க் பேப்பர் ஸ்லிப் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு, அதை பிரிக்கும்போது அதில் வாக்குச் சாவடியில் இருந்தபோது இடப்பட்ட கையெழுத்துகள் எல்லாம் சரியாக இருக்கிறதா. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்துகொள்ள வேண்டும்.,

தபால் வாக்குகளை கன்ட்ரோல் யூனிட்டுகளை வைக்கப்பட்டிருக்கும் அறையில் வைக்கக்கூடாது என்று நாம் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் கோரியிருக்கிறோம். இன்னொரு அறையில்தான் அவை வைக்கப்பட்டிருக்கின்றன. 2019 தேர்தலில் தபால் வாக்குகள் இருக்கும் அறையை திறந்தார்கள் என்ற காரணத்துக்காகத்தான் ஒரு கலெக்டரையே நாம் இடமாற்றம் செய்ய வைத்தோம்.

தபால் ஓட்டு எண்ணிக்கையில் நாம் மிக விழிப்பாக இருக்க வேண்டும். 500 ஓட்டுகளுக்கு ஒரு மேஜை என்றபடியே எண்ண வேண்டும். தபால் ஓட்டுகளை முதல் முப்பது நிமிடங்கள் எண்ணி முடிக்க வேண்டும். ஆரம்பித்தால் அதை நிறுத்தக் கூடாது. தபால் ஓட்டு பெரிய கவரில் இருக்கும், அதன் பெயர் 13 சி. அதை பிரித்தால் அதில் உள்ளே 13 ஏ எனப்படும் உறுதிமொழிக் கடிதம் இருக்க வேண்டும். அதாவது தபால் வாக்களிப்பவர், ’நான் இன்ன காரணத்துக்காக தபால் வாக்கு அளித்துள்ளேன்’என்ற உறுதிமொழியிட்டு கையெழுத்திட்டிருக்க வேண்டும். மேலும் தபால் ஓட்டு பெற்ற அதிகாரியின் கையெழுத்தும் அதில் இருக்க வேண்டும். கிராமத்தில் இருந்து வந்திருந்தால் வி.ஏ.ஓ. கையெழுத்து இருந்திருக்க வேண்டும். இதையெல்லாம் செக் செய்யுங்கள். இந்த கையெழுத்துகளில் ஒன்று இல்லையென்றாலும் அந்த ஓட்டு செல்லாது. மேலும் அதில் 13 பி என்பது வாக்குச் சீட்டு எண். அதையும் நாம் சரிபார்க்க வேண்டும்.

தபால் ஓட்டுகள் எண்ணி முடித்தவுடன் உடனடியாக தாமதம் இன்றி ஆர்.ஓ.விடம் கொண்டு சென்று உடனடியாக முடிவுகளை அறிவிக்கச் செய்ய வேண்டும். அதை அவர் அருகே இருக்கும் கணினியில் உடனடியாக இணையதளத்தில் அப்லோடு செய்ய வேண்டும். இது எல்லாமே தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் இடம்பெற்றிருக்கின்றன”என்று ஏற்கனவே கூட்டங்களில் சொன்னதை மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட்டார் இளங்கோ.

நேற்றையக் கூட்டத்தில் சிலர் சந்தேகங்களைக் கேட்க அவர்களுக்கும் விளக்கம் அளித்தார்.

மேலும், “வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்றி செல்லுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். வாக்கு எண்ணிக்கை இடத்தில் வெளியில் இருந்து வரும் வாழ்த்துகள் பற்றியோ, அறிக்கைகள் பற்றியோ கவலைப்படாதீர்கள். முழு கவனத்தையும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வையுங்கள்” என்றும் கூட்டத்தில் ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை அலர்ட் ஆக்கி அனுப்பியிருக்கிறார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: