புதன், 28 ஏப்ரல், 2021

திரிபுராவில் திருமண வீட்டில் புகுந்த நீதிபதி .. அதிரடி தடியடி கைது சட்டவிரோதமாக ஒன்று கூடியமை ..

minnambalam : திரிபுராவில் இரவு நேர ஊரடங்குவிதிமீறல்: அதிரடியாகக் களத்தில் இறங்கிய மாவட்ட நீதிபதி! விதிமுறைகளை மீறி இரவில் திருமணம் நடந்ததால் மணமகன் உட்பட திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் உறவினர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில மாநிலங்களில் முழு ஊரடங்கும், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததும் திரிபுராவில் இரவு 11 மணிக்கு மேல் திருமணம் நடந்ததால், திரிபுரா மேற்கு மாவட்ட நீதிபதி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை( ஏப்ரல் 26) இரவு 11 மணியளவில் திரிபுரா மேற்கு மாவட்ட நீதிபதி (டி.எம்) டாக்டர் ஷைலேஷ் குமார் யாதவ் திடீரென்று, குலாப் பாகன் மற்றும் மாணிக்யா கோர்ட் என்ற இரண்டு திருமண மண்டபத்துக்குள் போலீஸ் அதிகாரிகளுடன் நுழைந்தார். இரவு நேர ஊரடங்கு விதிமுறைகளை மீறி, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, போலீஸார் ஒவ்வொரு அறையிலும் இருந்தவர்களை வெளியேற்றினர். மேலும், அங்கிருந்தவர்களில் ஒரு பெண்மணி, அனுமதி வாங்கிதான் திருமணத்தை நடத்துகிறோம் என ஒரு பேப்பரை எடுத்துக் காட்டினார்.

இரவு நேர ஊரடங்கில் அனுமதி எப்படி கொடுக்க முடியும் என மாவட்ட நீதிபதி அந்த பேப்பரை வாங்கி கிழித்துப் போட்டார். இதைத் தொடர்ந்து மணமகனையும், பூசாரியையும் சட்டை காலரை பிடித்து இழுந்து வந்து இவர்களை கைது செய்யுங்கள் என போலீஸாருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட நீதிபதி சைலேஷ் குமார் யாதவ், “இங்கு கூடியிருந்த அனைவரும், 144 தடை உத்தரவை மீறியதால், அவர்கள் மீது ஐபிசியின் பிரிவு188இன் கீழ் வழக்கு தொடரப்படும். மேலும், உடனடியாக அனைவரையும் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

நாளை முதல், குலாப் பாகன் மற்றும் மாணிக்யா திருமண மண்டபங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவு ஒரு வருடம் வரை இருக்கும். இரவு நேர ஊரடங்கு விதிமீறல் குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்த மேற்கு அகர்தலா காவல் நிலையப் பொறுப்பாளரை இடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கிறேன். இதனால், மாவட்ட நீதிபதியாகிய நான் இங்குவர வேண்டிய நிலை. இந்த மக்களிடையே பணம் வாங்கிக்கொண்டு, நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒருவேளை, இதன்மூலம் கொரோனா பரவியது என்றால், அதற்கும் அரசாங்கத்தைதான் குறை கூறுவார்கள். அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கூறுவார்கள். ஆனால், தற்போது விதிமுறையை யார் மீறுகிறார்கள்?” என கேள்வி கேட்டார்.

"இதுபோன்ற சம்பவத்தை மக்கள் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இவர்கள் அனைவரும் படித்தவர்கள், பணக்காரர்கள். இவர்களே இப்படி நடந்து கொண்டால், படிக்காத மக்களை என்ன சொல்வது” என்றும் கூறினார்.

திருமண நிகழ்ச்சியில் மணமகன் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினிதா

கருத்துகள் இல்லை: