ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு

dhinamalar : புதுடில்லி: மருந்து நிறுவனங்களிடம் வாங்கும், இரண்டு கொரோனா தடுப்பூசிகளும், மாநிலங்களுக்கு தொடர்ந்து மத்திய அரசு இலவசமாக வழங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், அதன் விலையை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, , மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தடுப்பூசியை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கேரள முதல்வர் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கட்டுரை ஒன்றில், கோவிஷீல்டு மருந்து விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சவுதி வங்கதேசம், தென் ஆப்ரிக்கா நாடுகள் கொடுத்த விலையை விட அதிகம். இந்தியாவிலேயே தயாரித்த மருந்து, ஆனால், இந்தியாவில் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதா . கொரோனா தடுப்பூசியை விலையை குறைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மருந்து நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு வாங்கும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் கொள்முதல் விலையும் ரூ.150 ஆக நீடிக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து, மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என தெரிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை: