சனி, 1 மே, 2021

குஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 18 பேர் பலி

BBC :குஜராத் மாநிலம் பரூச் என்ற இடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்.
பட்டேல் நல மருத்துவமனை என்ற அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு வாக்கில் தீப்பிடித்தது.
அந்த அவசர சிகிச்சைப் பிரிவில் சில நோயாளிகள் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டிருந்தனர்.
அவசர சிகிச்சைப் பிரிவு முழுவதும் இந்த தீ பரவியிருந்தது என்கிறார் பிபிசி குஜராத்தி சேவைக்காக பரூச்சியில் இருந்து செய்தி அளிக்கும் சஜித் பட்டேல்.
மருத்துவமனையில் தீப்பிடித்தது குறித்து அறிந்ததும் அக்கப்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கே விரைந்து வந்து உதவினர்.
தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர்.
அவசர சிகிச்சைப் பிரிவின் கதவை தீ சூழ்ந்துகொண்டதால், ஜன்னல்களை உடைத்து உள்ளே மாட்டிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 18 பேர் இறந்திருப்பதாக பரூச் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திர சிங் சுடாஸ்மா தெரிவித்துள்ளார்.
பிற மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் விவரங்கள் தெரிந்த பிறகுதான் இறந்தவர்களின் முழு எண்ணிக்கை தெரியவரும் என்கிறது மருத்துவமனை நிர்வாகம்.
வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள்.
அங்கிருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் அல் மஹ்மூத் மருத்துவமனை, சேவாஸ்ரம் மருத்துவமனை, பரூச் சிவில் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவமனையின் ஒரு பகுதி.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனே தெரியவில்லை. எனினும் மின் கசிவால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்கின்றன ஆரம்ப கட்டத் தகவல்கள்.

கருத்துகள் இல்லை: